இசை வலம்: ‘கலைஞர் பொற்கிழி’ பெறும் காஷ்மீரி கவி

By ரவிகுமார் சிவி

காஷ்மீரி மொழியில், மரபையும் நவீனத்தையும் சந்திக்கும் புள்ளிகளாகத் தன்னுடைய கவிதைகளை முன்வைப்பவர் கவிஞர் நிகத் சாஹிபா. சாகித்ய அகாடமி வழங்கியிருக்கும் யுவபுரஸ்கார் விருதாளரான இவர், இந்த ஆண்டுக்கான ‘கலைஞர் பொற்கிழி’ விருதுக்குப் பிறமொழிப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் கவிஞர். ஏறக்குறைய 600 ஆண்டுகள் பழமையான காஷ்மீரி மொழியின் பெருமையை, சொந்த மண்ணில் இருப்பவர்களே பேச மறுப்பதில் இருக்கும் அரசியலைப் பேசுபவை சாஹிபாவின் கவிதைகள். உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரம் போன்றவற்றை முன்வைத்து முகத்தில் அறைந்தாற்போல் பட்டவர்த்தனமாக எழுதக்கூடியவர் இவர்.

பாரம்பரியமான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த சாஹிபா, தனது கவிதைப் பயணத்தின் தொடக்கத்தில் தனது குடும்பத்திலிருந்தே எதிர்ப்புகளைச் சந்தித்தவர். தனது தொடர்ச்சியான இலக்கியச் செயல்பாடுகள் மூலம் தடைகளைத் தகர்த்தபடி முன்னகர்ந்திருக்கிறார். இவரது கவிதைகளில் பெரும்பாலானவை பாலின சமத்துவத்தைப் பேசுபவை. வளர்ச்சியின் பெயரால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகவும் இவரது கவிதைகள் முழங்குகின்றன. இவர் எழுதியிருக்கும் கஸல் பாடலும் மண்ணின் பெருமையையே பேசுகிறது. இதை மெலிதான பின்னணி இசையுடன் தனது குரலில் பதிவுசெய்திருக்கிறார் தன்வீர் ரேஷி.

https://www.youtube.com/watch?v=ywbCdBVyQ2M

காஷ்மீரின் இயற்கையைப் பாடும் சூஃபிஸ்டிகேஷன்

காஷ்மீரின் கவிமுகம் நிகத் சாஹிபா என்றால், இசை முகம் ஆபா ஹஞ்சுரா. காஷ்மீரி மொழியில் தலைமுறை தலைமுறையாக பாடப்பட்டுவரும் தாலாட்டுப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்களை கிராமிய இசை, மேற்கத்திய இசையின் இசைக் கூறுகளோடு சேர்த்து காஷ்மீரித் தேனின் இனிமையுடன் பாடல் புனைபவர் ஆபா. தால் ஏரியின் பின்னணியில் இவர் பாடிய ‘ஹுகுஸ் புஹுஸ்’ பாடலில் வரும் சேர்ந்திசை வரிகளை, மதமாச்சரியங்களைக் கடந்து இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து பாடி சகோதரத்துவத்தைப் போற்றிய தருணங்கள் முக்கியமானவை.

இசைக் கலைஞர்களுடன் ஆபா ஹஞ்சுரா

பாரம்பரியமான பாடல்களைப் போலவே, அதற்கான இசையை அமைப்பதிலும் பாரம்பரியமான வாத்தியங்களைப் பயன்படுத்துவது ஆபாவின் பாணி. இவரது பாடல்களில் ரபாப் எனப்படும் நரம்பு இசைக் கருவி, சந்தூர், தும்பக்நாரி எனும் தாள வாத்தியம் போன்றவை பிரதான இடம்பிடித்திருக்கும். இவரது இசையில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளுக்கே உரிய ஆச்சரியங்களும் தால் ஏரியின் அமைதியும் ஒருங்கே குடிகொண்டிருக்கும்.

அண்மையில் ஆபா வெளியிட்டிருக்கும் ‘ஹோ கித்னி கூப்சூரத் ஹை’ பாடல் எளிமையான அனிமேஷன் பாணி பின்னணியுடன் காஷ்மீரின் இயற்கையைக் கொஞ்சுகிறது. காஷ்மீரின் வசந்தகாலத்தைப் பாடலின் வார்த்தைகளில் ஆபாவே வடித்திருக்கிறார். பாட்டின் இடையிடையே சந்தூர், ரபாப் மற்றும் தும்பக்நாரி, தபேலாவின் ரசவாதம் நம்மை காஷ்மீரின் சமவெளிகளில் மானசீகமாக உலவ வைக்கிறது.

https://www.youtube.com/watch?v=2mjzJIztx9Q

எஸ்பிபி-க்குப் பதிலாகப் பாடிய இசைக் கருவிகள்

இனிமையும் இளமையும் நிறைந்த குரலுடன் இசையுலகில் கோலோச்சிவந்த எஸ்பிபி மறைந்து ஓராண்டு ஆகியிருக்கும் நிலையில், அந்த மகா கலைஞனுக்கு வித்தியாசமான அஞ்சலியை வழங்கியிருக்கிறது ஸ்ரீராம் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

எஸ்பிபியின் புகழ்பெற்ற பாடல்களை உத்தாரா உன்னிகிருஷ்ணன், சுர்முகி ராமன், கீர்த்தனா, காயத்ரி ஆகியோரின் குரல்களுடன், கீர்த்தனாவின் டிரம்பட், சாக்ஸபோன், ரஞ்சனி மகேஷின் வீணை, ஸ்ரீராமின் கீபோர்ட், மெலோடிகா ஆகியவையும் இணைந்து பாடியிருக்கின்றன. புகழ்பெற்ற கிதார் இசைக் கலைஞர் சதானந்தமும் இதில் பங்களித்திருக்கிறார். பாடகிகளின் குரலுடன், எஸ்பிபி-யின் குரலுக்குப் பதிலாக வாத்தியங்கள் பாடுகின்றன.

பாடலைப் பாடும்போது எஸ்பிபி-யின் குரலில் குழைந்து வெளிப்படும் சங்கதிகளின் அழகை, வாத்தியங்களின் வழி கேட்பது புதிய அனுபவமாக இருக்கிறது. ‘தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் அது புதுமை’ என அடுக்கடுக்கான வார்த்தைகளை கமகத்தோடு எப்படி எஸ்பிபி பாடினார் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது ரஞ்சனியின் வீணை!

https://www.youtube.com/watch?v=TgHhLCYs0gE

பாலிவுட்டில் ஒலித்த திருச்சேறை நாகசுரம்

தகவல் தொழில்நுட்பப் பணியில் இருந்தாலும் இசை குறித்த ஆய்வுகள், கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருவதோடு, அரிதான இசை குறித்த தகவல்களையும், இசை நிகழ்ச்சிகளையும்கூட தனது பரிவாதினி யூடியூப் தளத்தில் பதிவேற்றிவருபவர் இசை ஆர்வலர் லலிதா ராம். இசை உலகில் ஆச்சரியமான பல விஷயங்களைப் பொடி சங்கதிகளாகத் தனக்கே உரிய சுவாரசியமான பாணியில் கூறிவருகிறார். அப்படி அண்மையில் அவர் பகிர்ந்துகொண்ட தகவல் இது:

“இந்திப் படங்களில் பெரும்பாலும் இந்துஸ்தானி இசையின் தாக்கமே அதிகம் இருக்கும். அரிதாக கர்னாடக இசை, அதிலும் மங்கள வாத்தியங்களான நாகசுரம், தவில் ஒலிக்கும் இந்திப் படத்தைப் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் லலிதா ராம். 1969-ல் வெளிவந்த ‘ஸச்சாயி’ எனும் இந்திப் படத்தில், ஷங்கர் - ஜெய்கிஷன் இசையில் ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கும் ‘மோரே சையான்’ பாடலின் முகப்பிசையிலும் பாடலின் இடையிசையிலும் திருச்சேறை சிவசுப்பிரமணியத்தின் நாகசுர வாசிப்பு கம்பீரமாக வெளிப்பட்டிருக்கிறது.

கலை உலகில் பெரிய மேளம் எனக் கொண்டாடப்படும் நாகசுரம், தவிலுக்கும், சின்ன மேளம் எனக் கொண்டாடப்படும் பரதநாட்டியத்துக்கும் பெரிதும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 1968-ல் ‘தில்லானா மோகனாம்பாள்’ எனும் திரைக் காவியம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் தாக்கத்தால், வட நாட்டிலும் நாகசுரத்தின் பெருமை ஒலித்திருக்கிறது. பாலிவுட்டில் திருச்சேறை நாகசுரம் ஒலித்து 51 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தை மகிழ்வுடன் கொண்டாடுவோம்!”

https://www.youtube.com/watch?v=rH15nu8lLa8

https://www.youtube.com/watch?v=4wg9KkjB2tA

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE