நிழற்சாலை

By காமதேனு

சூல் உலகு


கணவனின் கைப்பிடித்து

படியேறி வந்ததில்

களைப்பேறி

ஸ்கேன் அறையில்

பெருமூச்சு வாங்க

காத்திருந்தவள்தான்

'அசைவு தெரியல

நடந்துட்டு வாங்க' என

தாதி சொன்ன மறுகணம்

வேக நடையைத் தொடங்குகிறாள்

ஒரு அடிக்கும்

அடுத்த அடிக்குமிடையே

எட்டு வைக்கத்தான் போதவில்லை

ஒரு பூமி.

-ந.சிவநேசன்

--------------------------------------------

தேவ பாஷையின் உரையாடல்

எனக்கும் தாகம்தான்

கொஞ்சம் பொறு

முதலில் நான் குடித்துவிட்டு

உனக்கு ஊற்றுகிறேன்

என்கிறான் மகன்

தலையசைக்கிறது செடி.

- மகேஷ் சிபி

--------------------------------------------

காலத்தின் கணக்குப் பிழை

எட்டு வயதில்

ஒன்றாம் வகுப்பு

இருபத்தி ஐந்து வயதில்

கல்லூரி

முப்பத்தைந்து வயதில்

திருமணம்

நாற்பத்தைந்து வயதில் குழந்தையென

எல்லாமே தனக்கு

தாமதமாய் நிகழ்ந்துவிட்டதாய்

புலம்பும்

அக்காவுக்கு

மரணம் மட்டுமே விரைவாக

நிகழ்ந்திருந்தது...

விபத்தொன்றில்!

- மு.முபாரக்

--------------------------------------------

புத்துயிர்

வகுப்பறையில் தமிழ் பேசினால்

ஐம்பது ரூபாய் அபராதம் விதிக்கும்

பள்ளி நிர்வாகம்

வீட்டிற்கு வருகை தரும்

தங்கள் உறவினர்களிடத்தில்

ஆங்கிலப் பாடல் ஒன்றை

ஒப்பித்துப் பாராட்டு பெறும்

பள்ளிக் குழந்தைகள்

நேர்முகத் தேர்வில் வேலை

பெறுதலின் பொருட்டு

நுனிநாக்கில் ஆங்கிலத்தை

தவழ விடும் இளைஞர்கள்

பணமெடுக்கும் இயந்திரம் முதல்

வங்கி விண்ணப்பப் படிவம் வரை

அனைத்திலும் ஆங்கிலத்தை

தேர்வு செய்வதையே தங்கள்

நாகரிகமாகக் கருதும் மக்களுக்கு மத்தியில்

அவ்வப்பொழுது புத்துயிரூட்டுகிறான்

நடைபாதையில் தமிழ் பேசியபடி

பானிபூரி விற்கும் ஒரு

வடமாநிலச் சிறுவன்.

-வெ.தமிழ்க்கனல்

--------------------------------------------

இருள் மலர்

இரவு என்பது

ஒரு காக்கை இறகு

பிழையறியும் நெஞ்சங்களின்

ரகசியக் கருவறை

காலை என்றால் சூரியனை

செவ்வந்திப் பூவாகப் பறித்து

நீ சூடிக்கொள்ளலாம்

தளும்ப தளும்ப தண்ணீர் குடத்துக்குள்ளும்

இட்டு வரலாம்

ஆனால் கரிய இரவை என் செய்வாய்

என் சகியே?


சாத்தானும் கடவுளும்

விடிய விடிய கண்ணாமூச்சி ஆடி

ஓய்ந்த பின்

ஆளுக்கொரு விழியில் விழுந்து

குறட்டை விடும் நேரம்

ரகசியமாக எடுத்து

உன் கூந்தலில்

செருகிக்கொள்

இரவிலும் மலர்ந்திருக்கும்

என் அன்பை!

- தங்கேஸ்

--------------------------------------------

பிரபஞ்சப் புன்னகை

கவின் குட்டியை

கொஞ்சுகிறபோதெல்லாம்

அவன்

மெதுவாய்ச் சிரிக்கிற

சிரிப்பில்

எல்லாவற்றையும்

மறைத்து வைத்துக்கொண்டு

ஒரே ஒரு நட்சத்திரத்தை

மட்டும் மெல்லியதாய்

காண்பிக்கிற

அந்த

வானம் தெரிகிறது.

- ச.ஜெய்

--------------------------------------------

இருக்கை இல்லாத தேவதை

காலையில் வேலையைத் தொடங்கும்

அவளுக்கு

அவளுடைய பாதங்களே

இருக்கை.

வந்தமரும்

வாடிக்கையாளர்களுக்கு

நின்றபடியே

புடவைகள் எடுத்துப் போடுவதும்

அவர்கள் கலைத்து

குவித்துவிட்டுச் செல்வதை

மீண்டும் மடித்து அடுக்குவதுமாகவே

கழிகிறது அவளது பொழுது.

வாடிக்கையாளர்கள்

இல்லாத வேளைகளில்

புழுதி துடைப்பது

கூட்டிப் பெருக்குவது போக

புடவைகளைச் சீர்படுத்தி வைக்கும்

பணி அவளுக்கானது.

எப்போதோ கிடைக்கும்

ஓய்வு நேரத்தில்

'ரெஸ்ட் ரூம்' செல்பவளின்

நிம்மதியைக் குலைக்க

வந்துவிடுகிறான்(ள்)

ஏதேனும் ஒரு கஸ்டமர்!

- வீ.விஷ்ணுகுமார்

--------------------------------------------

இறுதி அழைப்பு

கடைசியாய் ஒருமுறை

வட்ட வடிவ முடிச்சின்வழி

வாழ்க்கையை எட்டிப்பார்த்தான்

தூக்குக் கயிற்றில்

கழுத்தை நுழைத்தவன்

வா வாழ்ந்து பார்க்கலாம்

என்றழைத்தது வாழ்க்கை!

- சு.அருண்பிரகாஷ்

--------------------------------------------

தலைகீழ் பிம்பங்கள்


கண்ணாடித் தொட்டியில்

தங்க மீன்களை ரசிக்கும்

அவன் தட்டில் மத்தியின் முட்கள்

கத்தியால் எழுதிவிட்டு அறுந்துபோன மரத்தை

பின்னால் இழுத்துக் கொண்டு நடக்கிறான்

என்றேனும் தளிர்க்கும் என்று


ஓவியம் படிக்காத அக்கலைஞன்

கையில் தூரிகையின்றி

வர்ணம் தீட்டுகிறான் குருதியில்


தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது

அதில் உலகின் பிம்பங்கள் யாவும்

ஓடிக்கொண்டிருக்கின்றன

தலைகீழாக!


- ஸ்ரீகா

--------------------------------------------

பந்திக்கு முந்திய பசி

இலையில் பரிமாறப்பட்ட

இட்லி பொங்கல்

நெய்யொழுகும் கேசரி

முறுகலான வடை

வகைவகையான சட்னியுடன்

எப்போது எழுவோமென

முதுகுக்குப் பின்னால்

இடம்பிடித்து நிற்பவனின்

பசியையும் சேர்த்தே விழுங்குகிறது

பந்திக்கு முந்தியவொரு

பாவப்பட்ட ஜென்மம்.

- காசாவயல் கண்ணன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE