வச்சு செஞ்சிட்டாங்க..!

By ரிஷபன்

அம்மிணியோட குரல் அடிச்சுது... சாரி, கேட்டது. "டிக்கெட் போட்டுட்டீங்களா”.

“ஹிஹி நான் என்ன கண்டக்டரா”னு ஜோக் அடிச்சேன். அம்மிணி ரசிக்கலன்னு மூஞ்சில தெரிஞ்சுது.

“ரெயில்ல டிக்கெட்டு.. பத்திரிகை வந்துச்சில்ல... போவணும்ல.”

அவங்க உறவுல கல்யாணம். அதனால நிதானமா சொன்னாங்க. “இதோ போட்டுடறேன்”னு சரண்டர் ஆனேன்.

“ஞாபகம் இருக்குல்ல”னு அடுத்த பாம் வந்துச்சு. தலைய சொறிஞ்சதும், அவங்களே எடுத்துக் கொடுத்தாங்க. “ஜன்னல் சீட்டு...”

அம்மிணிக்கு ஜன்னல் சீட்டுத்தான் பிடிக்கும். எனக்குத்தான் பக்பக்னு இருக்கும். “யாராச்சும் செயினை அத்துக்கிட்டு ஓடிட்டா...”ன்னு பீதி கிளப்பி பார்த்தேன்.

“எங்க வீட்டுல போட்ட செயின் தானே... நீங்களா போட்டீங்க. போனாப் போவுது”ன்னு மடக்குனாங்க.

சொல்லிட்டு மகனாரைப் பார்த்தாங்க. “இவன் எனக்கு வாங்கிப் போடுவான்.”

‘அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சப்புறம் ஒனக்கா போடுவான்’னு நினைச்சுக்கிட்டு, டிக்கெட் போடறதுல மூழ்கிட்டேன்.

கிளம்புற நாள் வந்துச்சு. அம்மிணியோட சீட்ல யாரோ ஒக்காந்திருந்தாங்க. என்னைப் பார்த்து முறைச்சாங்க. நான், “இது அவங்க சீட்டு”ன்னு சொன்னதும், “ரயிலையே விலைக்கு வாங்கிட்டீங்களா”ன்னு அந்தாளு கடி ஜோக் அடிச்சாரு. அப்புறம் என் கண்ணுல தெரிஞ்ச பீதியைப் பார்த்துட்டு நவுந்து ஒக்காந்தாரு.

அவரும் குடும்பத்தோட வந்திருந்தாரு. அவரோட அம்மிணி, அம்மா, புள்ளைங்க. அம்மிணியை அவரோட அம்மா உத்துப் பாத்துட்டு, “நீ இன்னாரோட பொண்ணு தானே”ன்னு குத்து மதிப்பா குசலம் விசாரிச்சாங்க.

அவங்க அப்பா பேரைச் சொன்னதும் அம்மிணி முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிஞ்சுது. கொஞ்ச நேரம் பேசுனதுல ரெண்டு குடும்பமும் ஒரே கீரைக்கார அம்மாகிட்டதான் ரெகுலரா கீரை வாங்குவாங்கன்னு கண்டுபிடிச்சுட்டாங்க.

அவ்ளோதான். ஜன்னல் சீட்டுக்கு போட்ட சண்டை மறந்து ஒன்றிய குடும்பமாகிட்டாங்க. அம்மிணி, சீட்டை விட்டுக் குடுத்துட்டு அந்த குடும்பத்துக்கு மத்தில போய் ஒக்காந்துட்டாங்க.

ரயில்ல மூணு சீட்டுன்னு பேரே ஒழிய ரெண்டரை பேர்தான் ஒக்கார முடியும். அம்மிணி நடுவுல ஒக்காந்து வலது பக்க ஆளை ஜன்னலோட நசுக்கிட்டு, இடது பக்க ஆளை பதவியை தக்க வச்சுக்க போராடற அரசியல்வாதி மாதிரி ஆக்கிட்டாங்க. இவங்களை ஏன் அடையாளம் கண்டுபிடிச்சோம்னு அந்த குடும்பத்தோட ஒட்டுமொத்த மைண்ட் வாய்ஸும் நல்லாவே எனக்குக் கேட்டுச்சு.

வலுவான கூட்டணி சீட்டு பேரத்துல மறைமுகமா சண்டை ஆரம்பிச்சுது.

எங்க அம்மிணிதான் ஆரம்பிச்சு வச்சது.

“எங்கே பயணம்?”

“மரியாதை தெரியாத ஒரு குடும்பத்துல விசேஷமாம். ஆடு மாடைப் பட்டிக்கு இழுத்துக்கிட்டு போறாப்ல போறாங்க”ன்னு அ.அம்மிணி நொடிச்சுக்கிட்டாங்க.

“ஒடம்பொறந்தான் வீட்டு விசேஷம்னா ஓட வேணாமா. நாளைக்கே இவ அண்ணன் வீட்டுலன்னா ஓட மாட்டாளா”னு அந்த அம்மா.

“எங்கண்ணனும் இந்தாளும் ஒண்ணாயிர முடியுமா. பொங்க சீர் உண்டா. போன் பேச்சு உண்டா. தபால்ல பத்திரிகை அனுப்பிட்டு கவுந்தடிச்சு படுத்துருக்காரு. இது என்ன மரியாதையோ.”

எம்பக்கத்துல ஒக்காந்திருந்த அண்ணாச்சி, ரயில்ல ஓசி சீரியல் ஓட்டுறாங்களேன்னு நொந்துட்டாரு. காபி.. காபி..ன்னு கத்திக்கிட்டு வந்தவரு ரசிச்சுக்கிட்டு நின்னுட்டாரு.

“காபி குடிக்கிறீங்களா”ன்னு கேட்டேன். அடுத்த செகண்டு மூணு அம்மிணி கையிலயும் கப். சுடச் சுட ஊத்திக்கிட்டு அடுத்த ரவுண்டை ஆரம்பிச்சாங்க.

“நீங்களே நியாயத்த கேளுங்க. என்னைக் கல்யாணம் கட்டுன புதுசுல தாய்மாமன் கிட்ட ஆசிர்வாதம் வாங்கன்னு இழுத்துக்கிட்டுப் போனாங்க. குடிக்கக் கொடுத்தாங்க பாருங்க ஒரு காப்பித் தண்ணி. எங்கூட்டுல மாட்டுக்கு வைக்கற கழுநீர்த்தண்ணி கூட டேஸ்ட்டா இருக்கும்.”

“கழுநீரைக் குடிச்சே வளர்ந்தவ தானே. காபி அருமை எப்படித் தெரியும்”னு பெரிய அம்மிணி முனகினாங்க.

அண்ணாச்சி பாடுதான் திண்டாட்டமாப் போயிருச்சி. பாம்பு மாதிரி நெளிஞ்சுக்கிட்டே இருந்தாரு.

எங்க அம்மிணியைப் பிடிச்சு இழுத்தாங்க.

“பார்த்தீங்களா. வயசுக்கு தக்கன பேச்சு பேசுறாங்களான்னு. கழுநீரைக் குடிச்சவன்னு கூசாமச் சொல்றாங்க.”

அம்மிணியை அந்தப் பக்கம் பிடிச்சு இழுத்தாங்க பெரிய அம்மிணி.

“இவ மட்டும் என் தம்பியைக் கேவலமா பேசலாமா.”

அம்மிணியைப் பின்னால சாய்ச்சுட்டு, ரெண்டு பேரும் மூஞ்சிக்கு எதிரே அவங்க மூஞ்சியைக் கொண்டு வந்து வச்சுக்கிட்டுப் பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சுட்டாங்க.

அம்மிணியை எதிர்லேர்ந்து பாத்தா மூன்று முகம் மாதிரி இருந்துச்சு.

“புள்ளைங்கள வளக்கத் தெரியுதான்னு பாரு. கொறிக்கிறதா கொடுத்துட்டு சத்தே இல்லாம ஙேன்னு இருக்காங்க.”

பேரப் புள்ளைங்களைக் காட்டுனாங்க.

“இவங்க வளத்த லட்சணம் இதோ எதிர்ல இருக்கு பாத்துக்குங்க”ன்னு, தன் புருசனையே கோர்த்து விட்டாங்க அந்த அம்மிணி.

அண்ணாச்சிக்கு முகத்துல கலவரம் பரவுச்சு. கள பலிக்குத் தன்னை ரெடி பண்றாங்கன்னு புரிஞ்சதும் என்னைப் பாத்தாரு.

“பாவம். நெருக்கி அடிச்சு ஒக்காந்திருக்காங்க. நாம வேணா எந்திரிச்சு போய் கொஞ்ச நேரம் அங்கே நிப்போமா. வசதியா ஒக்காரட்டுமே. அம்மா நீங்க இங்கே வாங்க”ன்னு கூப்பிட்டாரு.

“பாரேன். கட்டுனவளைப் பத்தி யோசிக்காம அம்மாவாம் அம்மா. “

எந்திரிச்சு வந்து வெளியே நின்னதும் யுத்த பூமிலேர்ந்து உசுரோட தப்பிச்ச ஃபீலிங்.

இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துச்சு. கட்டித் தழுவாத குறையா கை குலுக்கிக்கிட்டோம். போன் நம்பர் மாத்திக்கிட்டோம்.

திரும்பி அம்மிணிகளைப் பார்த்தோம். சண்டை எந்தக் கட்டத்துல இருக்குன்னு.

அவங்க புள்ளைங்க அம்மிணிக்கு ரெண்டு பக்கமும் ஒக்காந்து கொஞ்சிக்கிட்டு இருந்துச்சுங்க. அந்தம்மா தன் மருமவ பக்கத்துல இருந்தாங்க.

“பாரேன். இவளுக்கு முடி எப்படிக் கொட்டிருச்சுன்னு. நீ என்ன தைலம் தேச்சுக்கிறே.”

“பாவம் இவங்க. ரொம்ப தளந்துட்டாங்க. தெம்புக்கு என்ன வாங்கிக் கொடுக்கலாம்”னு அந்த அம்மிணி.

என்ன நடந்துச்சு நாங்க எந்திரிச்சு வந்த பிறகு..ன்னு மண்டை காஞ்சுது.

“சிரமப்பட்டு ஒக்காந்திருக்காங்கன்னு தோணுச்சா ரெண்டு பேருக்கும். எழுந்து போனாங்களோ நிம்மதியா பேச முடிஞ்சிது.”

ரெண்டு அம்மிணியும் ஒரே குரல்ல சொன்னப்போ வச்சு செஞ்சிட்டாங்கன்னு புரிஞ்சுது !

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE