பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

தஞ்சை

டாஸ்மாக் பாரிலிருந்து வெளியே வரும் நண்பர்கள் இருவர்...

“என்னடா மாப்ள... இப்பெல்லாம் ரெண்டு ரவுண்டுக்கு மேல சரக்கு வாங்கித் தர மாட்டேங்கிற?"

“எல்லாத்துக்கும் லிமிட் வேணும்டா. அளவுக்கு மீறினா ஆபத்து. கரோனா தடுப்பூசிகூட ரெண்டு ரவுண்டுதான் போடறாங்க... தெரியும்ல?”

“அதுக்கும்தான் மூணாவதா பூஸ்டர் போடணும்னு சொன்னாங்கள்ல?”

“நம்ம நாட்டுல யாருக்கும் பூஸ்டர் போடல. நீ தலைகீழா நின்னாலும் சரக்கு கிடையாது. இன்னிக்குச் செலவு கணக்கு இவ்ளோதான்.”

- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்

தோப்புத்துறை

ஆறுமுகச்சந்தியில் ஒரு மெடிக்கல் கடையில்...

“தம்பி என்னப்பா மாஸ்க் போடாம வந்திருக்கே?”

“இதோ பாக்கெட்லதான் அண்ணே வச்சிருக்கேன்... கிட்டவரும்போது தெரியும்ல அப்ப எடுத்து மாட்டிக்குவேன்.”

“உன் கண்ணு என்ன மைக்ரோஸ்கோப்பா தம்பி... கிருமியைக்கூட பார்க்குற அளவுக்கு?”

“நான் போலீஸைச் சொன்னேன் அண்ணே. அவங்கதானே ஃபைன் போடுவாங்க...”

“உஷார் பார்ட்டிதான்! ஆனா ஒரு விஷயம் ஞாபகம் வெச்சுக்கோ... போலீஸ்கிட்ட மாட்டுனா ஃபைன்தான் போடுவாங்க... கரோனா கிட்ட சிக்கினா 10 நாளைக்காவது சிரமப்பட்டாகணும். சொல்லிட்டேன்... அப்புறம் உன் இஷ்டம்.”

- ந.விஜய்ஆனந்த், தோப்புத்துறை

சித்தோடு

நால்ரோட்டில் இரு நண்பர்கள்...

“மச்சி... மெகா தடுப்பூசி முகாமுக்குப் போய் ஊசி போட்டாச்சா?”

“ம்ம்ம்... போட்டாச்சு மாப்ள... போட்டாச்சு.”

“அதை ஏன்டா சோகமா சொல்ற?"

“ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா தடுப்பூசி போட்டுட்டு நான் வெஜ் திங்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே...”

“அவனவனும் கரோனா வந்துடுமோன்னு கவலைப்படுறான்... நீ கறிச்சோறுக்காகக் கவலைப்படுற. கொஞ்ச நாளைக்கி வாயைக் கட்டி வாழுங்கடா. வயிறு கோவிச்சிக்காது!”

- கமலக்கண்ணன்.இரா, சித்தோடு

திருவையாறு

திருமண மண்டப வாசலில் இருவர்...

“என்ன மாப்ஸு... பைக்கை வெச்சுக்கிட்டு கிழக்கேயும், மேற்கேயும் பார்த்துக்கிட்டு நிற்கிறே?”

“வண்டியைப் பார்க் பண்ண இடம் பார்க்கிறேன். எல்லா இடத்திலேயும் வண்டி நிற்குது... அதான் எங்கேயாவது கேப் இருக்குமான்னு தேடுறேன்.”

“எங்கே போனாலும் பார்க்கிங் பிரச்சினைதான். அதனாலதான் நானெல்லாம் பேசாம கால்நடையா கிளம்பிடுறது. பெட்ரோல் செலவும் மிச்சம் பாரு.”

“நீ ஏற்கெனவே கால்நடைதானேடா? ஏன் இப்படி கருத்து சொல்லி இம்சை பண்றே. அந்த ஸ்கூட்டியைக் கொஞ்சம் தள்ளிவை. அட்ஜஸ்ட் பண்ணி பார்க் பண்ணிடலாம்.”

“நடப்பைச் சொல்றேன். நக்கல் பண்றே... நல்லதுக்குக் காலமில்லைடா!”

- எஸ்.இராஜேந்திரன், கபிஸ்தலம்

நாகர்கோவில்

டாஸ்மாக் கடை அருகே இருவர்...

“என்ன மாப்ள ஊசி போட்டுட்டியா?”

“ஓ... எங்க கம்பெனிலேயே போட்டுவிட்டாங்க... அது சரி, நீ ஊசி போட்டுட்டியா?"

"போட்டுக்கலாம்தான்... பொழுதுக்கும் இந்த டாஸ்மாக்கே கதின்னு கெடக்கிறதால டைமே கிடைக்க மாட்டேங்குதுடா... உங்க கம்பெனி மாதிரி டாஸ்மாக்குக்கும் டைரக்டா வந்து ஊசி போட்டா நல்லா இருக்கும்ல?”

“தடுப்பூசிக்கு உண்டான மரியாதையையே கெடுத்துட்டியே பாவி. இரு... உனக்கு விஷ ஊசி போட ஏற்பாடு பண்றேன்!”

- மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE