நிழற்சாலை

By காமதேனு

மாற்றங்களின் சூட்சுமம்


விடுமுறைக்கு வந்திருந்த

நகரத்துப் பிள்ளைகள்

கிராமத்து உறவினர்கள் வீட்டில்

விளையாடினார்கள்

தம் வயதையொத்த குழந்தைகளுடன்

அன்று ஒரு நாள் மட்டும்

நகர வாசனை அடித்தது எங்கள் தெருவில்

தெருவோரம் பசுவின் மடியில்

பாலூட்டிய கன்றை

தன் நாவினால் அன்பாகத் தடவியது பசு

அந்தக் கணம் பாலும் கறந்தாயிற்று

நகரத்துப் பிள்ளைகளுக்கு ஆச்சரியம்

எங்களுக்கு பேக்டரியில் இருந்து பால் வருகிறது

உங்களுக்கு மாட்டிலிருந்து எனக் கேலிப் பேசினார்கள்


தாத்தா

பதில் சொன்னார்

கிராமம் அழிந்து நகரமாகலாம்

நகரம் அழிந்து கிராமமாக

ஒரு யுகம் பிடிக்கும் என


அந்நியமாய் போன பிள்ளைகள்

கன்றோடு விளையாடினார்கள்

பால் கறந்து முடிந்ததும் தாய்மையோடு

பாலைக் கன்றுக்குத் தர

முயற்சி செய்துகொண்டிருந்தது

தாய்ப் பசு.


- ப.தனஞ்ஜெயன்

--------------------------------------------

எழுத்துகளை மேயும் விரல்கள்

பேனாக்களின்

பாத்திரம்

கையொப்பங்களுக்கு

மாத்திரம் என்றாக

சுருக்கப்படுகிறது.

காகிதங்கள்

கப்பல்களாக்கப்பட்டு

நவீன சமுத்திரத்தில்

செலுத்தி

மூழ்கடிக்கப்படுகின்றன.

தானியமென

விசைப்பலகையில்

இறைந்துகிடக்கும்

எழுத்துகளை மேயும்

கோழிகளாக்கப்பட்டுவிட்ட

விரல்கள்

எழுத்துகளின்

நெளிவு சுளிவுகளை

மறந்துகொண்டுள்ளன

மெதுமெதுவாக!

- வீ. விஷ்ணுகுமார்

--------------------------------------------

எனக்கான தேநீர்

பிரிவுழல்தலின் பெருங்கோப்பையில்

உன் நினைவுகளை

நிரப்பிப் பருகிக்கொண்டிருக்கிறேன்

உள்ளுக்குள் நீ நிறையும்

அதே நேரம் வெற்றுப்

பாத்திரமாக நான் ஆதலும்

நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது

எனை முழுதாய் இட்டு நிரப்பும்

ஏதேனும் ஒன்றைத்

தந்துவிட்டுப் போ

காத்திருப்பின் ரணங்கள்

தழும்புகளாகட்டும்


- கி.சரஸ்வதி

--------------------------------------------

தூறல் தொடுகை


புள்ளிகளிட்டு வடிவமைக்கிறது

வெள்ளைச் சட்டையினை.


இயலாமையில்

விழுந்து

கோலமழிக்கிறது.


காலிக் குவளையின்

தாகம் தணிக்கிறது.


மர வீட்டின்

கிளைப்படியிலிருந்து மெதுவாய்

கீழிறங்குகிறது.


பட்டால்

தீட்டென்று

பலரையும்

ஓட வைக்கிறது.


விமான ஓடுதளத்தில்

எண்ணற்ற

இறக்கைகளுடன்

அழகாய் இறங்குகிறது.


குடிசைக்கீற்றில்

ஒழுகும் பாசி

கண் கடலில்

முத்தாகிறது.


எல்லோருக்கும்

விழும் தூறலாய்

தெரிவது...


எனக்கு மட்டும்

தலை முத்தமிட்ட

அவளாகிறது!


- ரகுநாத் வ

--------------------------------------------

வண்ணத்தில் கசியும் காற்று


பலூன் ஒன்று வெடிக்கின்றபோது

வண்ணத்தைக் குழைத்த காற்று

நொடியில் மொத்தமாய் இழக்கிறது


நியூட்டன் விதி நிற்கிறது

கிளைகளில் இருந்து உதிர்ந்தது

மரத்திற்கே பாத பூஜை செய்கிறது


பறக்க விடப்பட்ட நூல் போல

பாதியிலே கந்தலாகிப்போனது

பரிதவிப்பாய் இளம் பெண் வாழ்வு


உறையிலடைபட்ட காற்று

உரக்கச் சிரிக்கிறது

வெடித்து அதன்

சுதந்திரத்தைப் பேசுகிறது

அவளோடு விளையாடிக்கொண்டிருந்த

காற்று

இப்போது தனியே

விசும்பிக்கொண்டிருக்கிறது.


- வீரசாேழன் க.சாே.திருமாவளவன்

--------------------------------------------

இழப்பின் மதிப்பு


ஒரு மீனும் போணியாகாத

கவலையில் இருப்பவனுக்கும்

மீதமிருக்கும்

ஒரு மீனையும் விற்றுவிடும்

முனைப்பில் இருப்பவனுக்கும்

இடையே

அதிகம் தகிக்கிறது வெயில்

விற்பனை முடித்தவனின்

சாக்குவிரிப்பை நோக்கி

விற்காதவை இடம் மாறுகையில்

தளும்பும் நீர் பட்டு

துளிர்த்து அடங்குகிறது வாழ்வு

சாயும் உயிருக்கான அர்த்தம் உணரவேனும்

அள்ளிப்போகச் சொல்லி

கடப்போரை அழைத்துக்கொண்டிருக்கிறது

வாய் திறந்து மூடும்

ஒரு மீன்.


-ந.சிவநேசன்

--------------------------------------------

தகப்பனின் நினைவில்


கொஞ்சமாய் இருமினாலே

இஞ்சி டீயோடு வருகிறான்

கடைக்குட்டிப்பேரன் குமரன்

பிரஷ்ஷர் சுகருக்கு

மறக்காமல் மாத்திரை தருகிறான்

பெரிய பேரன் மணி

பாத்ரூம் போகும்போதெல்லாம்

கதவுவரை காவலிருக்கிறாள்

பிரிய பேத்தி பிரியங்கா

செல்லில் எப்போதும்

செல்லம் கொஞ்சுகிறாள்

சுட்டிப்பேத்தி சுதர்சனா

அசதியாய் படுத்திருந்தால்

ஆறுதலாய் தொடுகிறான்

அன்புச் செல்லக்குட்டி அருண்

அச்சு அசலாய்

கெச்சலான உருவத்தில்

அவரையே

நினைவூட்டுகிறான் யோகேஷ்

தத்ரூபமாய்

தாத்தாவின் படம் வரைந்து

பரிசளிக்கிறான் பேரன் பாரதி

அப்பாவின் நினைவுகளில்

அம்மா நெகிழ்ந்திருக்க

விழுந்து வணங்கும்போது

ஆசிர்வதிக்கும்

அம்மாவின் தொடுதலில்

அப்பாவை உணர்கிறார்கள்

பிள்ளைகள்.


- காசாவயல் கண்ணன்

--------------------------------------------

நேசத்தின் வலி

நேசம் விழுங்கும் நெடுஞ்சாலை

நெக்குருகிறது

முடிவெளியற்ற கருந்துளையில் ...

உன்மத்தம் தாங்கிய

பூங்காவின் கதவுகள்

அடைபடுகின்றன

துருவேறிய அறுவை சிகிச்சைக் கத்திக்குள்...

கீறல் விழுந்த

குறுந்தகடில்‌ ஒலிக்கும்

உறவின் பாடல்கள்

தஞ்சமடையும்

பாலை சப்பாத்தி இலை

பழுத்தே கிடக்கிறது...

கதவிடுக்கில் சிக்கிய

அன்பின் விரல்கள்தான்

அந்தோ பரிதாபம்.


- கார்த்திகா

--------------------------------------------

போலச் செய்தல்

ஒரு பறவை போலவே

மற்றொரு பறவை

பறப்பதில்லை


ஒவ்வொரு மரத்தின்

நிழலுக்கும்

சுயம் உண்டு


ஒரு மேகத்தின் வடிவத்திலேயே

மற்றொரு மேகத்தைக்

காண்பதரிது


ஒவ்வொரு வனவிலங்கின்

வேட்டையாடும் பாணியும்

வேறு வேறு


ஒவ்வொரு மழைத்துளியும்

தனித் தனி


மனிதச் சந்தையில்தான்

வெற்றுக் கூக்குரல்கள்

“அவனால மார்க் வாங்க முடியுது...

நீ ஏன் வாங்கலை?”

“அவங்க அளவுக்கு அழகு

எனக்கு ஏன் இல்ல?”

“வாழ்ந்தா அவரை மாதிரி வாழணும்...”


இன்னொன்றைப் போலவே

இருப்பதற்கும்


இல்லாமலேயே இருப்பதற்கும்

பெரிய

வேறுபாடேதும் இல்லை.


- ப்ரணா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE