எழுத்தாளர் கோணங்கிக்கு இந்த ஆண்டுக்கான கி.ரா விருது!

By கா.சு.வேலாயுதன்

கடந்த ஆண்டு கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கி.ரா.விருதுக்கான தொகையானது, இந்தியாவிலேயே தலைசிறந்த இலக்கிய விருதுக்கான தொகையானது பாரதிய ஞானபீட விருதுத் தொகையையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரூபாய் ஒரு லட்சம் என முடிவு செய்யப்பட்ட இந்தத் தொகை, படிப்படியாக உயர்ந்து 5 லட்சமாக வளர்ந்தது.

கடந்த ஆண்டு எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு தரப்பட்ட இந்த விருது, இந்த ஆண்டு நவீன எழுத்தாளரான கோணங்கிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதுத் தொகையை சக்திமசாலா துரைசாமி தம்பதியினரிடம் பெற ஏற்பாடு செய்தவர் திரைப்பட நடிகர் சிவகுமார். கோவை, விஜயா வாசகர் வட்டம் மூலம் அளிக்கப்படும் இந்த விருதுக்கான விழா, கடந்த ஆண்டு காணொலி வழியே நடத்தப்பட்டது.

அப்போது விருதாளர் கண்மணி குணசேகரன் புதுச்சேரி சென்று கி.ராவின் கைகளாலேயே விருதையும், விருதுத் தொகையையும் பெற்றுக் கொண்டார். அப்போது நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் பேச்சில் ஈர்க்கப்பட்ட புரவலர் துரைசாமி, கி.ரா விருதுத் தொகையை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்திக் கொடுத்தார். அதைக் காணொலியில் கண்ட துபாயில் வசிக்கும் சரவணன், தான் ஒரு லட்சம் தருவதாக அறிவித்தார். அதன் மூலம் சென்ற ஆண்டு விருதுத் தொகை ரூ. 6 லட்சமாக உயர்ந்தது.

இந்த ஆண்டு வழக்கம்போல ரூ. 5 லட்சத்துடன் கூடிய விருது கோணங்கிக்கு அறிவிக்கப்பட்டு, இதற்கான நிகழ்ச்சி செப்டம்பர் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு காணொலி வழியே நடைபெற உள்ளது. இதில் நீதியரசர் ஆர்.மகாதேவன், விருதாளர் கோணங்கி, புரவலர் துரைசாமி, சாந்திதுரைசாமி உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதையொட்டி செப்டம்பர் 16-ம் தேதி கி.ரா. பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு படத்திறப்பு நிகழ்வை விஜயா வாசகர் மையம் கோவையில் நடத்தியது. அதில் கி.ரா.படத்தை சிறுவயது முதலே கி.ராவின் தீவிர வாசகராய் இருக்கும் பி.எல்.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

அம்சா

நிகழ்வில் கி.ராவின் புதல்வர் பிரபாகரன், பேத்தி அம்சா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசியதோடு, கி.ரா விருதுத் தொகையும், விருதும் கோணங்கியிடம் அப்போதே வழங்கப்பட்டது. கி.ராவின் படத்தைத் திறந்து வைத்த சுப்பிரமணியம், விஜயா வாசகர் விருதுகளில் சேர்க்க தனது பங்களிப்பாக ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் தருவதாக அறிவித்தார். அந்த வகையில் இந்த ஆண்டு கோணங்கிக்கு 5 லட்சம் விருதுத் தொகையுடன் கூடுதலாக 1 லட்ச ரூபாயும் சேர்த்து அறிவிக்கப்பட்டது. ஆக இந்த ஆண்டும் சென்ற ஆண்டு போலவே விருதுத் தொகை 6 லட்சமாக சேர்ந்தது.

இது குறித்து விஜயா வாசகர் வட்ட பொறுப்பாளர் மு.வேலாயுதம் கூறும்போது, "கி.ரா. விருது எப்பவும் போல் ரூ 5 லட்சம் தான். இப்போது வாசகர் சுப்பிரமணியம் அறிவித்த ரூ. 1 லட்சம் இந்த ஆண்டு மட்டும் கோணங்கிக்கு டிப்ஸ் போல வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த 1 லட்சம் ரூபாய் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டுக்கு தலா ரூ 50 ஆயிரம் வீதம் பிரித்துக் கொடுக்கப்படும்" என்றார்

நிறைவாக நன்றி நல்கிய கி.ராவின் பேத்தி அம்சா, “ஒரு எழுத்தாளர் உயிருடன் இருக்கும்போது நிறைய கொண்டாடுவார்கள், வீட்டுக்கு எல்லாம் வந்துபோவார்கள். அதே எழுத்தாளர் மறைந்து விட்டால் யாருமே வரமாட்டார்கள். எழுத்தாளர் குடும்பம் எப்படி இருக்கிறது என்று கூட கவனிக்க மாட்டார்கள். ஆனால், தாத்தா விஷயத்தில் சக்திமசாலா துரைசாமி, நடிகர் சிவகுமார், மு.வேலாயுதம் உள்ளிட்டோர் இப்படி எங்களை அழைத்து விழா நடத்தி, உயர்ந்தபட்ச தொகையில் தாத்தா பெயரில் விருதளித்து கவுரவிப்பது ரொம்பவும் நெகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE