செப்.30-ல் ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை!

By கரு.முத்து

கடந்த 2020-21-ல் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுநாள் வரையிலும் இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து, செப்.30-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்திருந்த தமிழக விவசாயிகள், தங்கள் பயிர் இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்டால் இழப்பீடு கிடைக்கும் வகையில் பயிர்க்காப்பீடு செய்திருந்தனர். இஃப்கோ டோக்கியோ என்ற நிறுவனம் விவசாயிகளிடம் பிரிமியத் தொகை பெற்று காப்பீடு செய்திருந்தது. கடந்த ஆண்டு பெய்த அதிக மழையாலும், அறுவடை நேரத்தில் எதிர்பாராமல் வெளுத்து வாங்கிய மழையாலும் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் அறுவடையே செய்யமுடியாமல் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அறுவடை செய்த விவசாயிகளுக்கும் உரிய மகசூல் கிடைக்காமல் தவித்தனர்.

அதனால் கடந்த அதிமுக அரசாங்கம் நெற்பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 8,000 ரூபாயை வழங்கியது. விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையும் கிடைத்தால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சம்பா சாகுபடி தொடங்கிவிட்ட நிலையில் தங்களுக்கு உடனடியாக கடந்த ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், இதுநாள்வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. காப்பீட்டு நிறுவனம் சார்பில் யார் யாருக்கு எவ்வளவு சதவீதம் பாதிப்பு என்பதுகூட இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. மத்திய - மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்பட வேண்டிய பங்குத் தொகை காப்பீட்டு நிறுவனத்துக்கு இதுவரை வழங்கப்படாமல் இருப்பதாக காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது என்கிறார்கள் விவசாயிகள். ஆனால், மாநில அரசின் சார்பில் தங்கள் பங்கான 1,261 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுவிட்டதாக அன்மையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த நிலையில், இனியும் தாமதிக்காமல் உடனடியாக கடந்த ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக இன்று (செப்.14) திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், மத்திய - மாநில அரசுகள் இனியும் இழப்பீட்டுத் தொகையைத் தராமல் காலம் கடத்துவதை ஏற்கமாட்டோம். பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, செப்.30-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE