பேசிக்கிட்டாங்க

By காமதேனு

தஞ்சை

சலூனில் குடிமகனும், சலூன்காரரும்...

“சார், கட்டிங்கா, ஷேவிங்கா?"

“ரெண்டுமில்லே, மொட்டை போடணும்! மொட்டை ஃப்ரீதான்னு கவர்ன்மென்ட்டுல சொல்லிட்டாங்க, தெரியுமில்ல?"

“அய்யா சாமி! ஃப்ரீ மொட்டையெல்லாம் கோயில்லதான். அரைகுறையா நியூஸ் படிச்சிட்டு வந்து கழுத்தறுக்காதீங்க!”

“நீங்கதான் ‘செய்யும் தொழிலே தெய்வம், இருக்கும் இடமே கோயில்’னு பெருசா போர்டு எழுதி வச்சிருக்கீங்க... இப்ப மாத்திப் பேசுறீங்களே!?”

(சலூன் கடை சிரிப்பில் அதிர்கிறது!)

- கி.வாசுேதேவன், தஞ்சாவூர்

-----------------------------------------

நாகர்கோவில்

டாஸ்மாக் கடை அருகே இரு குடிமகன்கள்...

“என்ன மாப்ள... ரெண்டு 'டோஸ்' போட்டாதான் சரக்கு தருவாங்களாம்... அப்படியா சேதி?"

“அட ஆமாம்பா, நீ நியூஸே பார்க்கிறதில்லையா?”

“எங்க மாப்ள நியூஸ் பார்க்க... நான்தான் குடிச்சுப்புட்டு மட்டையாகிடுறேனே."

“நடுரோட்ல போதையில மட்டையாகிக் கிடந்தாலும் நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்கணும்பா... சரி சரி அது இருக்கட்டும். நம்மளையும் ஊசி போடவைக்க கவர்ன்மென்ட் எடுக்கிற முயற்சியைப் பாராட்டியே ஆகணும்!”

“பின்னே!? நாட்டோட முதுகெலும்பே நாமதான்பா! நாம ஊசி போடாம, ஏடாகூடமா ஏதாச்சும் ஆகிப் போச்சுன்னு வெச்சிக்கோ, வருமானம் இல்லாமல் கவர்ன்மென்ட் தடுமாறிடாது?”

“நூறு மில்லியில ஒரு வார்த்தை மாப்ள!”

-மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை

-----------------------------------------

திருச்சி

சமயபுரம் கோயில் வாசலில்...

“சார்... இங்கே என் செருப்பு கிடந்துச்சு, பார்த்தீங்களா?”

“நான் கன்னியாகுமரியில இருந்து வர்றேன்.”

“அதை யாரு சார் கேட்டா? நானூறு ரூபாய் செருப்பு சார். நீங்க பார்க்கலையா?”

“நானூறு கிலோமீட்டருக்கு அங்கிட்டு இருந்து உன்னோட நானூறு ரூபாய் செருப்பைப் பார்க்கத்தான் நான் வந்தேனா?! போய்யா அங்கிட்டு..!"

“இப்படி அடுத்தவங்க மேல அக்கறை இல்லாம இருக்கிறதாலதான் சார், பெட்ரோல் நூறு ரூபாய் விற்குது!”

-சிவம், திருச்சி

-----------------------------------------

ஸ்ரீவைகுண்டம்

கடைவீதியில் இருவர்...

“ஏல! ஏன் இப்படி பாலா படங்கள்ல வர்ற ஹீரோஸ் மாதிரி தலைமுடியைக் கன்னாபின்னான்னு வெட்டிட்டு வந்திருக்க? பார்க்கவே கண்றாவியா இருக்கு!”

“அதுக்கு என்னல செய்ய முடியும்... வேலைவெட்டி இல்லாத இந்த நேரத்துல, முடி வெட்டுறதுக்குன்னு மாசாமாசம் தெண்டம் அழ முடியுமா?”

“அப்ப ஒண்ணு செய்யி... இப்ப கோயில்ல எல்லாம் மொட்டை சும்மாவே அடிக்காங்களாம்... அங்கே போயி மொட்டை போட்டுட்டு வந்துரு. ரெண்டு மாசத்துக்கு நீ எந்தக் கவலையும் இல்லாம இருக்கலாம். நாங்களும் உன் மண்டையைப் பார்த்து மயக்கம் போடாம இருப்போம்!”

“யோசனை சொல்லும்போதுகூட என்னை நக்கல் பண்றதை விட மாட்டேங்கிற... ஹ்ம்ம் எல்லாம் என் நேரம்!”

- எஸ்.ரஸிதா, நாகர்கோவில்

-----------------------------------------

திருச்சி

ஜெராக்ஸ் கடை அருகே இருவர்...

“என்ன மாப்ளே... ஜெராக்ஸ் கடையில இருந்து வர்ற?”

“கரோனா தடுப்பூசி சர்ட்டிஃபிகேட்டை டவுன்லோட் பண்ணி எடுத்துட்டு வர்றேன் மாம்ஸ்...’’

“நல்லதாப் போச்சு. அதை எனக்கு ஒரு ஜெராக்ஸ் போட்டுக் குடு.’’

“டேய் லூஸு! உனக்கு எதுக்கு இது? நீதான் ஊசியே போடலையே?”

“நாளைக்கு ஊட்டிக்கு உறவுக்காரங்க வீட்டு விசேஷத்துக்குப் போறேன். வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். அங்கே தடுப்பூசி போட்ட சர்ட்டிஃபிகேட்டைக் காமிச்சாதான் சரக்கு வாங்க முடியுமாமே!?”

“சரி... என்னோட சர்ட்டிஃபிகேட்டைக் காட்டி நீ எப்படி சரக்கு வாங்குவ?”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ ஜெராக்ஸ் மட்டும் எடுத்துக் குடு.”

“போடா ஃப்ராடு பயலே! வேணும்னா டீ வாங்கித் தர்றேன். குடிச்சிட்டுத் திருந்தப் பாரு!”

- க.விஜயபாஸ்கர், திருச்சி

-----------------------------------------

தஞ்சை
ஜி.வி தியேட்டர் வாசலில் இருவர்...

“ச்சே... என்னாங்க இது, தியேட்டர் திறந்தும் பழைய படத்தையே போடுறாங்க!?"

“இருந்தா என்ன? தலைவர் படம் அதுவும் 'உலகம் சுற்றும் வாலிபன்' எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதே!"

“அதான் சலிச்சி எடுத்துப்போடுறாங்க!”

“அதைப் பார்க்க 'இளவட்டம்' எங்கே வருது! நம்மள மாதிரி 'கிழவட்டம்'தான் வீட்டுல இருக்க முடியாம தியேட்டருக்கு வருது!"

“சரிதான்! அப்ப அரசாங்க ஆணைப்படி கூட்டம் 50 சதவீதம் தியேட்டர்லேயும் 50 சதவீதம் வீட்டுலேயும் இருக்காங்கன்னு சொல்லுங்க!"

- அய்யாறு ச.புகழேந்தி, தஞ்சாவூர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE