திருச்சி விவசாயிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

By கரு.முத்து

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்த தமிழக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.11) திருச்சியில் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு, குருசாமி, வழக்கறிஞர் ஈசன், கோவை சுப்பிரமணியன், தஞ்சை பழனியப்பன், மேலூர் அருண், கடலூர் இளங்கீரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லி வரை யாத்திரை செல்வதற்கான ஆலோசனை மற்றும் ஆயத்தமாக இக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததுடன் பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனால் இக்கூட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியில் பரவின. இதனால் அக்கூட்டத்தில் என்ன நடந்தது, என்ன முடிவெடுக்கப்பட்டது என்ற உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பி.ஆர்.பாண்டியனிடம் பேசினேன்.

’’டெல்லியில் கடந்த 300 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லி வரை விவசாயிகள் யாத்திரை செல்வது எனவும் அக்டோபர் 2-ம் தேதி அதற்கான தொடக்க நிகழ்ச்சியில் போராட்டக் குழு முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் ஆகஸ்ட் 20 தொடங்கி 22 வரை சென்னையில் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் முடிவை டெல்லியில் போராட்டம் நடத்திவரும் சம்யுக்த கிஸான் மோர்ச்சா அமைப்பு நிராகரித்தது. ஏனென்றால் ராஜேந்திர சிங் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. டெல்லி போராட்டக்களத்தில் தலைமைக் குழுவில் இடம்பெற்றிருந்த வி.எம்.சிங், போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கோடு மத்திய அரசின் துணையோடு வெளியேறினார்.

பின்னர் மோடியைச் சந்தித்து போராட்டத்தில் அந்நிய சக்திகள் ஊடுருவிவிட்டன என்றும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால் போராட்டத்தை விலக்கிக்கொள்ள தயாராக உள்ளதாகவும் போராட்டக் குழுவின் அனுமதி இல்லாமல் சுயநல நோக்கோடு கடிதம் எழுதிக்கொடுத்தார். போராட்டத்தைச் சீர்குலைக்க அவர் எடுத்த முயற்சியை உலகுக்குப் போராட்டக் குழு எடுத்துரைத்து போராட்டம் தொடரும் என அறிவித்து இன்று வரையில் வெற்றிகரமாகப் போராட்டத்தைத் தொடர்கிறது.

வி.எம்.சிங் கொடுத்த அந்தக் கடிதத்தில் ராஜேந்திர சிங் கையொப்பமிட்டு உள்ளதால் அவர் தலைமையில் தமிழகத்தில் கூடி எடுத்த முடிவை ஏற்க முடியாது என்றும், ராஜேந்திர சிங் ஏற்கெனவே வி.எம்.சிங்கோடு சேர்ந்து மோடியிடம் எழுதிக் கொடுத்த கடிதத்தைத் திரும்பப் பெற்று போராட்டக் குழுவில் இணைந்துகொள்வதாக ஒப்புதல் கடிதம் கொடுத்தால் மட்டுமே குமரி யாத்திரை குறித்துப் பரிசீலிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த ராஜேந்திர சிங், அவரது தமிழகப் பிரதிநிதியான வழக்கறிஞர் குருசாமி மூலம் இன்று திருச்சியில் மீண்டும் தமிழக விவசாயக் கூட்டமைப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கோரிக்கைகளைக் கைவிட்டு, விவசாய உற்பத்திப் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்பதை மட்டுமே பிரச்சார நோக்கமாக வைத்துப் பயணத்தைத் திட்டமிடுவதற்குத் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இக்கூட்டத்தில் நான் பேச அழைக்கப்பட்டபோது குறுக்கிட்ட வழக்கறிஞர் குருசாமி, ‘நான் தான் முதலில் பேசுவேன், அதற்குப் பிறகுதான் அவர் பேச வேண்டும்’ என்று மறுப்பு தெரிவித்துவிட்டு முதலில் அவர் பேசினார். ‘ராஜேந்திர சிங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை. திட்டமிட்டு சிலர் அவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை டெல்லியில் பரப்பி வருகின்றனர். அதைப் பற்றி தமிழக விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். நாம் முடிவெடுத்தபடி விவசாய யாத்திரையைத் தொடர்வதற்கு திட்டமிட வேண்டும்’ என்றார்.

இதற்குப் பின்னர் நான் பேசும்போது, ‘போராட்டக் குழு அனுமதி இல்லாமல் நாம் யாத்திரை செல்வது சரியல்ல. யாத்திரையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கோரிக்கைகளைக் கைவிடுவது என்ற முடிவானது, திட்டமிட்டு மோடி செய்கிற சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ராஜேந்திர சிங் செய்யும் முயற்சிகளை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது. எனவே போராட்டத்திற்கு ஆதரவாக யாத்திரை செல்ல வேண்டுமானால் தமிழகத்திற்கென நாம் போராட்டக் குழுவை ஏற்படுத்தி டெல்லியில் ஒப்புதல் பெற்று தமிழகத்தில் யாத்திரையை நடத்த வேண்டும். அதுதான் போராட்டக்காரர்களுக்குப் பயன் அளிக்கும்.

அதைவிட்டுப் புதிதாக ஒரு கோரிக்கையை வைத்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு என்கிற பெயரில் நாம் மேற்கொள்கிற யாத்திரை டெல்லி போராட்டத்தை இந்திய அளவில் சீர்குலைக்க முயற்சிக்கும். மோடிக்குத் துணைபோவதாக ஆகிவிடும். மீண்டும் ஒரு அவப்பெயரைத் தமிழகம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளின் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு குழுவை ஏற்படுத்திட வேண்டும். அக்குழு டெல்லியில் உள்ள போராட்டக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி நேரடியாக சம்யுக்த கிஸான் மோர்ச்சா தலைமையில் யாத்திரை செல்வது பற்றி முடிவெடுக்க வேண்டும். அது வரையிலும் அக்டோபர் 2-ல் தொடங்கும் யாத்திரையைக் கைவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அனைத்து நிர்வாகிகளும் யாத்திரையை மேற்கொள்வதற்குக் கால அவகாசம் கொடுத்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியதால் யாத்திரையைக் கைவிட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து அய்யாக்கண்ணுவும் குருசாமியும் மறுபடியும் யாத்திரையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது, இதன்மூலம் ராஜேந்திர சிங்கின் உண்மை முகம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்று பாண்டியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE