10 ஆண்டுகளில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டம்!

By காமதேனு டீம்

10 ஆண்டுகளில் தமிழக காடுகளின் பரப்பளவு அதிகரிக்கும் திட்டத்துடன், மாநில பசுமை இயக்கம் முதல்வர் தலைமையில் செயல்படுவதாக வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். கோவையில் இன்று நடந்த அரசு விழாவில், அவர் இதைத் தெரிவித்தார்.

கோவை வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில் வேளாண் கருவிகளின் படக்காட்சி அரங்கம் திற‌ப்பு விழா, விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் கருவிகளின் படக்காட்சி அரங்கத்தை திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாள‌ர்களிடம் கூறியதாவது:

தற்போது தமிழகத்தில் உள்ள 23.98 சதவீதம் வனப்பரப்பினை 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கான மாநில பசுமை இயக்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு முதல்வர் தலைமையில் செயல்படுகிறது. இந்த இயக்கத்தின் மூலம் பத்தாண்டு காலத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு தமிழகத்தின் பசுமை பரப்பினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அந்தந்த பகுதியில் உள்ள மண் சார்ந்த மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது. யானை - மனிதன்- வனவிலங்கு மோதல்கள் நடைபெறாமல் இருக்க வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அகழிகள் வெட்டப்படும். அவ்வாறு அமைக்கப்படும் அகழிகள் கான்கிரீட் பூச்சுடன் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE