'மான்போல வந்தவன யாரடித்தாரோ?’ : கவிஞர் புலமைப்பித்தனுக்கு அஞ்சலி

By ம.சுசித்ரா

தமிழின் மேல் கொண்ட கடுங்காதலால், ராமசாமி என்கிற தனது இயற்பெயரை ‘புலமைப்பித்தன்’ என்று மாற்றிக் கொண்டவர், மறைந்த கவிஞர் புலமைப்பித்தன்.

புலமைப்பித்தனுக்கு சந்த ஞானம் இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், சங்கீத ஞானம் இருந்தது வியப்பூட்டுகிறது. ‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ பாடலில் அது துலக்கமாகும்.

”இலக்கிய அந்தஸ்தைத் திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்தவன் நான்” என்று அவர் மேடைகளில் கூற கேட்டிருக்கிறோம். அவருக்கான இரங்கல் மடலிலும் அதை ஆமோதிக்கும் விதமாக இசைஞானியும் எழுதி இருந்தார். உண்மையாகவே படித்துப் புலவர் பட்டம் பெற்று தமிழாசிரியராக பணிபுரிந்தவர் புலமைப்பித்தன். ஆகையால், இலக்கியத் தரம் மிகுந்த கவிஞராகவே அவர் திரைத் துறைக்குள் பிரவேசித்தார். ’ஆயிரம் நிலவே வா’, ‘பாடும்போது நான் தென்றல் காற்று’, ‘சிரித்து வாழ வேண்டும்’ போன்ற பல பாடல்களை அவர் ராஜாவுக்கு முந்தைய இசை வேந்தர்களுக்கு எழுதினாலும், என் அறிவுக்கு எட்டியவரையில் ராஜா புலமைப்பித்தனுக்கு தந்த ராகங்கள் தனி ரகம்.

மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் கைதேர்ந்தவர் என்பதால் புலமைப்பித்தனும், “அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்...சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை” என்று எழுதலானார்.

அந்தச் சொற்கட்டின் அழகை அணு அணுவாக ரசித்த ராஜாவும், பாடலுக்குள்ளேயே ’சிந்தித்தேன்’ என்பதையும் ’சிந்தித்.. தேன்...’ என்பதையும் பிரித்துப் பாடிக் காட்டுவார். சொல்லப்போனால், ‘சங்கத்தில் பாடாத கவிதை’ முழுப் பாடலையும் வடிவமைத்த விதத்திலேயே, வரிக்கு வரி பாடல் வரிகளை ராஜா சிலாகிப்பதை உணர முடியும்.

புலமைப்பித்தனுக்கு சந்த ஞானம் இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், சங்கீத ஞானம் இருந்தது வியப்பூட்டுகிறது. ‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ பாடலில் அது துலக்கமாகும். ‘ரசிக ரஞ்சனி’ என்கிற அபூர்வ ராகத்தில் ஸ்வரங்கள் எழுதுகிறார் ராஜா. இசை பாமரனையும் பண்டிதனாக்கும் அவர் பேருள்ளம் நமக்கு பாடலின் ஸ்வர வரிசையை கற்பிக்க நினைக்கிறது. ‘ச...ரி...கா...பா... சரிகா...சரி சரி கபகரி சரிகா...’ என்று பாடலின் தொடக்கத்தில் ஸ்வர ஸ்தானங்களை எடுத்துரைக்கிறார். இந்த நுணுக்கத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்ட புலமைப்பித்தன்,

”சுகம் பல தரும் தமிழ்ப்பா” என்று பா ஸ்வரம் இடம்பெறும்போது பா என்பதையே சாகித்தியமாக வார்க்கிறார். ”சுவையோடு கவிதைகள் தா” என்று தா ஸ்வரம் வந்து விழுந்த இடத்தில் தா என்பதையே பாட்டு வரியில் இழைக்கிறார்.

”தமிழிசையே தனியிசையே... தரணியிலே முதலிசையே...” என்று உலகின் மூத்த மொழி பெருமைக்குத் தமிழிசை என்கிற கூற்றையும் சேர்த்து ஸ்ருதி கூட்டுகிறார்.

ராஜாவின் ஆன்மாவாக மாறி, “என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது..." என பாடுகிறார். அடுத்த வரியில், தன்னை மீட்டெடுத்து தமிழ் உணர்வாளராக, “மனதில் தேன் பாயத் தமிழே நாளும் நீ பாடு” என்று எழுதுகிறார்.

இதுபோலவே இலக்கணச் செறிவுடன் இலக்கியம் படைப்பதிலும் ஆற்றல் மிக்கவர் புலமைப்பித்தன். சொல்ல வந்த கருத்தை வெளிப்படையாகக் கூறாமல் வேறொன்றைச் சொல்லி உணர்த்துவது பிறிது மொழிதல் அணி. இதை அவர் எடுத்தாண்ட பண்பினால் நமக்கு காலத்தால் அழியாத காதல் பாடல்கள் கிட்டின.

”தென் பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா...

தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா”

என்ற ‘கல்யாண தேனிலா’ பாடல் வரிகளிலும், ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ’, ‘அதோ மேக ஊர்வலம்’, ‘கண்மணியே பேசு மவுனம் என்ன கூறு’ பாடல்களின் ஒவ்வொரு வரியிலும் காமத்தை இலை மறை காயாகப் பொழிந்தார்.

விரகத்தை விரசமின்றி பாட மட்டுமே, பிறிது மொழிதல் அணியை புலமைப்பித்தன் பயன்படுத்தவில்லை. தனது மன வேதனையைக் கொட்ட வேண்டும். ஆனால், மனைவியின் பெயர் கெட்டுவிடக் கூடாது. இந்த மனநிலையில் இருப்பவர் முத்தமிழ் அறிந்த வித்தகர் அல்ல. அவனொரு பாமரன். இவ்வளவு இக்கட்டான சூழலுக்கு புலமைப்பித்தன் பிறிது மொழிதல் அணியைத் தனதாக்குகிறார். “உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா” என்று எழுதுகிறார்.

”பட்டியில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா

பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க

சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல

அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல”

என்று அத்தனை இலக்கிய நயத்தைச் சாதாரணனின் பேச்சு மொழியில் ஏற்றுகிறார். அதற்குப் பாடும் நிலா பாலுவும் அவ்வளவு அப்பாவித்தனமாகக் குரல் வழி உயிரூட்டுகிறார்.

இப்படியான எந்தப் பிரயத்தனமும் இன்றி,

“கடற்கரைக் காற்றே வழியை விடு... தேவதை வந்தாள் என்னோடு...”

என்று ‘நீயொரு காதல் சங்கீதம்’, பாடலை உதிர்க்கிறார்.

சமூகத்தில் எழுச்சி உண்டாக்கப் பாட்டுக்கட்ட வேண்டும் என்கிற தாகம் புலமைப்பித்தனுக்கு ஆரம்பம் தொட்டே இருந்திருக்கிறது.

”நாம் பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு” என்று ‘நல்ல நேரம்’ படத்தில் எழுதியவர்.

’அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா’, ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’,

‘புஞ்சையுண்டு நஞ்சையுண்டு

பொங்கி வரும் கங்கையுண்டு

பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல...

எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்ல...

வீதிக்கொரு கட்சியுண்டு

சாதிக்கொரு சங்கமுண்டு

நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல...

சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல’ என்று அடுக்கடுக்காக ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் 3 எழுச்சியூட்டும் பாடல்களை இயற்றினார்.

இத்தனை இறவாப்புகழ் கொண்ட பாடல்களைத் தந்தவர்.. மேனாள் அரசவைக் கவிஞர்.. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் திகழ்ந்தவர்.. இருந்தபோதும் புலமைப்பித்தன் பெரிதாக அறியப்படவில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படவில்லை. இலக்கணமும் இலக்கியமும் முயங்கிய புலமைப்பித்தனை இறுதியாக வழி அனுப்ப அவரது, ‘‘தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவன யாரடித்தாரோ யாரடித்தாரோ” பாடலைத்தான் கடைசியில் மனம் முணுமுணுக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE