வ.உ.சி. இழுத்த செக்கை பூங்காவில் வைக்கணும்!

By கா.சு.வேலாயுதன்

இன்று (செப்டம்பர் 5) சுதந்திரப் போராட்டத் தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி-க்கு 150-வது பிறந்த நாள். அவரின் சிறப்பைப் போற்றி நினைவுகூரும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, ‘கோவை மத்திய சிறையில் பொதுமக்கள் பார்வைக்குக் கிட்டாமல் இருக்கும் வ.உ.சி இழுத்த செக்கை வெளியே கொண்டு வந்து வ.உ.சி. பூங்காவில் வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளையர்களுக்கு எதிராக சுதேசிக் கப்பல் செலுத்தியதால் கைது செய்யப்பட்ட வ.உ.சிதம்பரனார், கோவை சிறையில்தான் வைக்கப்பட்டிருந்தார். அங்கே பிரிட்டிஷ் அதிகாரிகள், கருங்கல்லால் ஆன 250 கிலோ செக்கை இழுக்குமாறு அவரை சவுக்கால் அடித்துக் கொடுமைப்படுதினர் என்பதெல்லாம் வரலாறு. வ.உ.சி. இழுத்த அந்த செக்கானது, தற்போது கோவை மத்திய சிறை வளாகத்தினுள் கொட்டகை அமைத்து அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எல்லோரும் எல்லா நேரமும் சென்று இந்த செக்கைப் பார்த்துவிட முடியாது. வ.உ.சி. பிறந்தநாள், நினைவு நாளில் மட்டும் குறிப்பிட்ட சிலரை மட்டும் சிறைத் துறை அனுமதிக்கிறது. அவர்கள் மட்டுமே உள்ளே சென்று செக்குக்கு மாலைபோட்டு மரியாதை செலுத்திவிட்டு வருவதே வழக்கமாக உள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாகத்தான் இந்த நிலை. அதற்கு முன்பு, கோவை சிறை வளாகத்தில் பொதுமக்கள் இயல்பாக வந்து போகும் இடத்திலேயே இந்த செக் இருந்தது. இதன் கொட்டகை இருக்கும் இடத்தின் அருகில்தான் கைதிகளின் உறவினர்கள் வந்து சிறைவாசிகளை பார்க்க மனு எழுதுவர். அதனால், அனைவருமே எவ்வித அனுமதியும் இன்றி செக்கை தரிசிக்க முடியும்

1997-ல் நடந்த கோவை கலவரம், 1998-ல் நடந்த கோவை தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு கோவை சிறையில் கலவர, குண்டு வெடிப்புக் கைதிகளும் அடைக்கப்பட்டதால் கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டது. இதைக் காரணம் காட்டி, வழக்கமாக பொதுமக்கள் சிறைக்கு வந்து செல்லும் 2 வழிகளை அடைத்து கெடுபிடிகளை அதிகப்படுத்தியது சிறை நிர்வாகம். இதனால், வ.உ.சி இழுத்த செக்கையும் பொதுமக்கள் அன்றாடம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, இந்தச் செக்கை பழையபடி பொதுமக்கள் அன்றாடம் பார்க்கும் வண்ணம் பொதுவான இடத்தில் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் பொதுமக்கள். இதுகுறித்து கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகியான வீ.வெள்ளியங்கிரி, கோவை ஆட்சியருக்கு மனுவும் அனுப்பியுள்ளார்.

அவரிடம் பேசியபோது, ‘‘வ.உ.சி நினைவு நாளில் செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு ஒருநாள் மட்டுமே நடைபெறுகிறது. சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதும், குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் சென்று செக்கை பார்வையிடுவதும் மரியாதை செலுத்துவதும் இதுவரை நடைமுறை சாத்தியமில்லாமலே இருந்து வந்திருக்கிறது. எனவே, பொதுமக்களும், வருங்கால தலைமுறையினரும் வ.உ.சி அனுபவித்த கொடுமைகளையும் அவரது தியாகத்தையும் உணர்ந்துகொள்ள அதன் அடையாளமாய் இருக்கும் செக்கை சிறையிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும். வெளியே வ.உ.சி.பெயரால் இயங்கும் பூங்காவில் இதை வைப்பது சாலப் பொருத்தமாக இருக்கும்!’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE