மேட்டூர் அணைக்கு நீரவரத்து அதிகரிப்பு!

By கரு.முத்து

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 16,670 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் அது இன்று காலை 23 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. பொதுவாக இந்த மாதத்தில் 100 அடியை எட்டியிருக்க வேண்டிய நிலையில் 70 அடிக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.

காரணம், கர்நாடகப் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவ மழை இல்லாததால் அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. அதனால் பெய்யும் மழைக்கு ஏற்ப அவர்களின் பாசன தேவைக்கு அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. உபரிநீர் இருந்தால் மட்டுமே அது தமிழகத்திற்கு தரப்படும் என்கிற நியதியை தற்போது கர்நாடக அரசு கடைபிடித்து வருகிறது.

காவிரி டெல்டாவில் குறுவைப் பாசனத்திற்கான நீர்த்தேவை தற்போது குறைந்துள்ளது என்றாலும், சம்பா சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன என்பதால் அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. ஆனால், மேட்டூருக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைவாகவே இருந்ததாலும், அணை நீர்மட்டம் 70 அடிக்கும் குறைவாகவே இருப்பதாலும் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலையில் 5 ஆயிரம் கன அடி என்ற அளவிலேயே தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், 20 ஆயிரம் கன அடி தண்ணீராவது திறந்தால்தான் அது டெல்டாவுக்கு போதுமானதாக இருக்கும். அதிகாரிகளோ, மழை பெய்து வருவதால் தண்ணீர் தேவை அதிகம் இல்லை என்கிறார்கள்.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடுவது தான் தீர்வு. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட ஆகஸ்ட் மாதம் வரை தமிழகத்துக்குத் தரவேண்டிய 39 டிஎம்சி தண்ணீரை இன்னும் தரவில்லை.

இந்த நிலையில், கர்நாடகப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகளிலிருந்து 19 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைநீரையும் சேர்த்து மொத்தம் 23 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 71.10 அடியாக இருந்தது. நீர் இருப்பு 33.65 டி.எம்.சி ஆக இருக்கிறது. நீர் திறப்பு குறைவாகவும் அணைக்கு நீர்வரத்து அதிகமாகவும் இருப்பதால் ஒரு சில நாட்களில் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE