சூதானமா மடியிலயே வெச்சுக்கணுமப்பா!

By குள.சண்முகசுந்தரம்

“சூதானமா மடியிலயே வெச்சுக்கணுமப்பா... கீழ கீழ வச்சுரப்புடாது” மகன் ரவீந்திரநாத் குமாரின் கையில் மனைவியின் அஸ்திக் கலசத்தைக் கொடுத்து, ஏதோ மனைவியையே மகனோடு அனுப்பி வைப்பதுபோல் அனுப்பிவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் கதறிய கதறலைப் பார்த்த அத்தனை பேரும் கண்கலங்கிப் போனார்கள்.

வெள்ளிக்கிழமை (செப்.3) காலையில், மனைவி விஜயலட்சுமிக்கு பால் தெளிக்கும் சடங்கை செய்துவிட்டு, காசியில் கரைப்பதற்காக அஸ்தியை மகனின் கையில் கொடுத்தபோதுதான், இப்படிக் கலங்கினார் ஓபிஎஸ். 50 வயதைக் கடந்துவிட்டாலே, கட்டிய மனைவியும் கணவனுக்கு தாய் தான் என்பார்கள். ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமியும் அப்படியொரு தாயாகத்தான் இருந்தார். இருவருக்கும் சுமார் 45 ஆண்டு கால திருமண பந்தம். உத்தமபாளையத்தில் சம்சாரி குடும்பத்தில் 4 சகோதரிகள், ஒரு சகோதரனோடு பிறந்தவர் விஜயலட்சுமி. பெரிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், இயல்பாகவே அனைவரையும் அனுசரித்துப் போகும் பக்குவம் இருந்தது. பெரியகுளத்தில் உள்ள தென்கரை, வடகரை, அக்ரஹாரம் என விஜயலட்சுமி கால் படாத இடமே இல்லை என்று சொல்லலாம். கணவர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில் கூட, இந்தத் தெருக்களில் ஒரு சாமானியப் பெண்ணாக பகட்டில்லாமல் நடமாடினார் விஜயலட்சுமி.

முன்பொருமுறை ஜெயலலிதா நலம் விசாரிக்க வந்த போது...

வீட்டுக்கு யாராவது தன்னைப் பார்க்க வந்தால், “விஜயா...” என்று குரல்கொடுப்பார் ஓபிஎஸ். கணவரின் குறிப்பறிந்து, வரும்போதே கையில் குடிக்க ஏதாவது எடுத்துக்கொண்டு வருவார் விஜயலட்சுமி. சென்னை வீட்டைவிட, பெரியகுளத்தில் உள்ள பழைய வீட்டில் இருப்பதைத்தான் அதிகம் விரும்புவார் விஜயலட்சுமி. அவரது மனதுக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் அந்த வீட்டைச் சுற்றித்தானே இருக்கிறார்கள்!

அன்பு மனைவியுடன் ஓபிஎஸ்

என்னதான் அமைச்சர் வீடாக இருந்தாலும் அங்கேயும் குடும்பப் பிரச்சினைகள் இருக்கத்தானே செய்யும். ஆனால், அதையெல்லாம் கணவரின் தலையில் சுமத்தியதில்லை விஜயலட்சுமி. வீட்டைவிட்டுப் புறப்பட காரில் ஏறும்போது, “யம்மா... அது என்னான்னு பாக்கணுமே?” என்று ஓபிஎஸ் கேட்டாலும், “அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க சூதானமா போய்ட்டு வாங்க. மறக்காம மாத்திரையப் போடுங்க” என்று கணவருக்கு தைரியம் சொல்லும் விஜயலட்சுமி, அப்படியே டிரைவர் சீட் பக்கமாய் வந்து, “யப்பே... கண்ணு அசந்துட்டா எங்கயாச்சும் வண்டியை நிறுத்தி தூங்கிட்டுப் போங்கப்பே” என்று அக்கறைப்படவும் மறப்பதில்லை.

அந்த தைரியத்தை எல்லாம் இப்போது அடியோடு தொலைத்துவிட்டு நிற்கிறார் ஓபிஎஸ். அரசியலில், இதுவரை எத்தனையோ சோதனையான காலகட்டத்தை எல்லாம் தனது பொறுமையாலும் நிதானத்தாலும் கடந்த அந்த மனிதருக்கு, மனைவி இல்லாமல் 2 நாட்களைக் கடத்த முடியவில்லை என்கிறார்கள். ஓபிஎஸ் சுமக்க வேண்டிய குடும்பத்துச் சுமைகளை எல்லாம் விஜயலட்சுமி இத்தனை நாளும் தன் தலையில் சுமந்தார். அந்தச் சுமைதாங்கி இப்போது சாய்ந்துவிட்டதே என்ற கவலை அவருக்கு.

பெரியகுளத்தில் உள்ள பழைய வீட்டைத் தவிர்த்து, பெரியகுளம் - தேனி சாலையில் உள்ள கைலாசபட்டியில் பண்ணை வீடு ஒன்றையும் பார்த்துப் பார்த்துக் கட்டினார் ஓபிஎஸ். அத்துடன் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக, போடியில் தனது அலுவலகத்தின் மேல்தளத்தில் மனைவிக்காகவே தனிப்பட்ட வசதிகளுடன் ஒரு வீட்டைக் கட்டினார். மனைவி யோகா, தியானம் செய்வதற்கும் சின்னதாய் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கும் இங்கே வசதி செய்து கொடுத்தார். ஆனாலும், உடல் பருமன் பிரச்சினை விஜயலட்சுமியைப் படுத்தி எடுத்தது. போதாதுக்கு தைராய்டு தொல்லை வேறு.

ஐந்து மாதங்களுக்கு முன்னதாக உள்ளூரிலேயே சித்த வைத்தியர் ஒருவரைப் பார்த்தார்கள். 6 மாதத்தில் 25 கிலோ எடையைக் குறைக்க மருந்து இருப்பதாக அவர் சொன்னாராம். அதற்குள்ளாக தேர்தல் வந்துவிட்டதால் அதைக் கொஞ்சம் ஒத்திப் போட்டவர்கள், திடீரென முடிவெடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமியை அட்மிட் செய்திருக்கிறார்கள். அங்கே அவருக்கு தைராய்டு சம்பந்தமான சிகிச்சைகளே அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். சிகிச்சை எல்லாம் முடிந்து, புதன் கிழமை (செப்.2) காலை 9 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆகலாம் என மருத்துவர்கள் சொல்லி இருந்தார்களாம். நாளைக்குக் காலையில் வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நிம்மதியில், செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி வரைக்கும் மருத்துவமனையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்துவிட்டுத்தான் போயிருக்கிறார் ஓபிஎஸ்.

மகன் ஜெயபிரதீப்புடன்

அப்போதுகூட, “நம்ம பழைய வீட்டுக்குப் போனேன்னாவே எனக்கு எல்லாமே சரியாகிடும்ங்க... டிஸ்சார்ஜ் பண்ணி என்னைய அங்கயே கூட்டிட்டுப் போயிருங்க” என்று சொன்னாராம் விஜயலட்சுமி. அத்தனை நம்பிக்கையோடு சொன்ன அன்பு மனைவி, அடுத்த சில மணி நேரங்களில் தன்னை அநாதை போல் ஆக்கிவிட்டுப் போய்விடுவார் என பெரியவர் ஓபிஎஸ் சிறிதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அதிகாலை 4 மணிக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி நிலைமை சீரியஸ் என்று தெரிந்ததும் ஓபிஎஸ்ஸுக்குப் போன் போட்டுச் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும், அனைத்தும் இருந்தும் மனைவியை மரணத்தின் பிடியிலிருந்து ஓபிஎஸ்ஸால் மீட்கமுடியவில்லை. முழுசாய் விடிவதற்குள் முழுவதும் முடிந்து போனது. தாயைப் பிரிந்த கன்றைப் போல “தெய்வமே... தெய்வமே” என்று அந்த மனிதர் கதறியதைப் பார்த்தவர்களுக்கும் கண்களில் கண்ணீர் பெருகியது.

“அம்மாவின் உடலை கைலாசப்பட்டி வீட்டுக்குக் கொண்டு போகலாம். அங்க தான் இடவசதி இருக்கு” என்று பிள்ளைகள் சொன்னதற்கு, பிடிவாதமாக மறுத்துவிட்டார் ஓபிஎஸ். “பழைய வீட்டுக்குப் போகணும்னுதான் விஜயா ரொம்பப் பிரியப்பட்டுச்சு. அது விருப்பப்படி அங்கயே கொண்டு போயி இறுதிக் காரியங்கள செஞ்சுருவோம்பா” என்று உடைந்து போய்ச் சொன்னாராம். அதன்படியே, தனக்குப் பிடித்தமான பெரியகுளம் பழைய வீட்டிலிருந்தே தனது இறுதிப் பயணத்தை தொடங்கினார் விஜயலட்சுமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE