பேசிக்கிட்டாங்க

By காமதேனு

காட்பாடி

உழவர் சந்தை அருகில்...

“என்ன நண்பா... கொஞ்ச நாளா உன்ன ஆளையேக் காணோம்?"

“அதை ஏன் கேட்கிற போ… மொகரத்துக்கு ஒரு ஃபிரெண்டு வீட்டுல பிரியாணி விருந்து… அப்புறம் கேரள கேர்ள் ஃபிரண்ட்ஸ்கூட ஓணம் விருந்துன்னு ஒரே சாப்பாட்டு மயம்தான். அதான் வேற எங்கேயும் வர முடியலை.”

“விநாயகர் சதுர்த்திக்காவது வீட்டுச் சாப்பாடா இல்லியா?"

“நல்லவேளை ஞாபகப்படுத்தினே. அன்னிக்கு முகூர்த்த நாள் வேற… மூணு ஃபிரண்ட்ஸ் வீட்டு கல்யாணம். நைட், மார்னிங், மதியம்னு அன்னிக்கும் வெளி விருந்துதான்!”

“அதுசரி, விருந்து விருந்துன்னு வெளியிலேயே அலையாதே… முதல்ல தடுப்பூசி போடு. அப்புறமா உன் தொப்பைக்குச் சாப்பாடு போடு.”

“அட்வைஸ் பண்றியாக்கும்!? இதெல்லாம் வயித்தெரிச்சல்டா டேய்!”

-அ.சுகுமார், காட்பாடி

நாகர்கோவில்

மீனாட்சிபுரத்தில் ஒரு டீக்கடையில் இருவர்...

“போன தடவை கரன்ட் பில் 6,500 ரூபாய் வந்துச்சு. இந்தத் தடவை 2,500 தான் வந்துருக்கு… ஒண்ணுமே புரியலைப்பா.”

“நீங்கதான் மிஸ்டர் க்ளீன் ஆச்சே! மிச்ச 4 ஆயிரம் ரூபாயைக் கணக்குல தப்பு பண்ணிட்டீங்கன்னு அரசுக்குத் திருப்பிக் கட்டிட வேண்டியதுதானே?”

“அட நீ வேற! தங்கர்பச்சான் சொன்ன மாதிரி போன தடவை ஒட்டுமொத்த தமிழ்நாட்லயும் கணக்கைத் தப்பா பாத்திருக்காங்கன்னு சொல்ல வந்தேன்!”

“இந்தத் தடவையாவது மணிபர்ஸைத் துடைச்சு எடுக்காம விட்டாங்களேன்னு சந்தோசப்படுவீங்களா... அதை விட்டுட்டு பழைய ஃபைலையெல்லாம் புரட்டிட்டு இருக்கீங்களே அண்ணே!?”

- எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்

திருச்சி

டோல்கேட் ரவுண்டானா அருகே இருவர்...

“என்னண்ணே… எப்பவும் புல்லட்டுல படபடன்னு ‘புல்லட்டு பாண்டி’ மாதிரி வருவே... இப்ப என்னாச்சுண்ணே... சைக்கிளை மிதிச்சிக்கிட்டு வேர்த்து விறுவிறுத்துப் போயி வர்றே?”

“என்னடா பண்றது… பெட்ரோல் விலை கிடுகிடுன்னு ஏறும்போது நாம எப்படி படபடன்னு புல்லட்ல போறது… அதான் சைக்கிளுக்கு மாறிட்டேன்.”

“அதெல்லாம் சரிண்ணே… புல்லட்ல பயில்வான் கணக்கா வந்த நீ இப்ப இப்படி துரும்பா இளைச்சுப் போயிட்டியே!?”

“இளைக்கலடா… ‘ஸ்லிம்’ ஆயிட்டேன்னு சொல்லு… பிபீ, சுகர்னு எல்லாமே நார்மலாயிடுச்சு. எல்லாம் சைக்கிள் சவாரி உபயம் தான்!”


- க.விஜயபாஸ்கர், திருச்சி

திருச்சி

ரயில்வே ஸ்டேஷனில் இருவர்...

“என்னடா பல்லவனுக்கா?”

“ஆமா... சென்னை வரைக்கும் போய் ஒருத்தன்கிட்ட பணம் வாங்கப் போறேன்.”

“டிக்கெட் எடுத்தியா?"

“எடுக்கலாம்னு போனேன். கவுன்ட்டர் எல்லாம் பூட்டியிருக்கு!"

"அடப்பாவி! டிக்கெட்டை ஆன்லைன்ல எடுக்கணும்டா! பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கலைன்னாலே சொத்தை எழுதிக் கேட்பாங்க… இதுல டிக்கெட்டே இல்லாம ட்ரெய்ன்ல போறாராம்!”

-சிவம், திருச்சி

தஞ்சை

ஜவுளிக்கடை ஒன்றில் இரு பெண்கள்...

“உனக்கு நிச்சயம் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு போல இருக்கே… எப்போ கல்யாணம்?”

“அக்கா அதெல்லாம் கவர்ன்மென்ட் கையில்தான் இருக்கு.”

“கவர்ன்மென்ட்டுக்கும் உன் கல்யாணத்துக்கும் என்னடி சம்பந்தம்?”

“அப்பா என்னோட நகையை எல்லாம் பேங்க்ல அடகு வச்சிருக்கார். விவசாயிகள் அடகு வச்ச நகைகளை அரசாங்கமே மீட்டுக்கொடுக்கும்னு திமுக சொல்லியிருக்காமே? அதுக்குத்தான் எங்க அப்பா காத்துக்கிட்டு இருக்காரு.”

“அடி போடி நீயும் உங்க அப்பாவும். கவர்ன்மென்ட்டுக்காகக் காத்திருந்தா பாட்டி ஆகிடுவே. சட்டுபுட்டுன்னு மாப்பிள்ளைகிட்ட மனசு திறந்து பேசு. எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவார்.”

- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE