விஷம் குடிக்கச் சொல்லி வீட்டுக்கு முன்னாடி போராடுவோம்!

By சானா

நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட இருட்டு நேரம். “இல்ல… தப்பா இருக்கு. எல்லாமே தப்பா இருக்கு. இன்னைக்கோட அவ கதையை முடிச்சுடு. டெட் பாடியோட முகத்தைச் சிதைச்சுடு” என்று முகத்தில் கறுப்பு கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு கரப்பான்பூச்சி ஸ்ப்ரே அடித்துக்கொண்டே, சமையலறையில் இருந்தபடி யாரையோ போட்டுத்தள்ள போனில் சதிவலைப் பின்னிக்கொண்டிருந்த நடுத்தர வயது பெண்ணைக் கண்டு நடுங்கிக்கொண்டிருந்தது பறக்கும் பைக்.

திடீரென படபடவென யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும், மேலும் பீறிட்ட பயத்தில் வீறிட்டு அலறியது. பாச்சாதான் எங்கோ சென்றுவிட்டு, விடிந்தும் விடியாத நேரத்தில் வீடு திரும்பியிருந்தான்.

உள்ளே நுழைந்ததும் உடனடியாக ஓடிப்போய் டிவியை அணைத்தவன், “தனியா இருக்கும்போது தமிழ் சீரியல் பார்க்காதேன்னு சொன்னா கேட்கிறியா? இப்பப் பாரு, இருட்டுல உட்கார்ந்து ‘ஈவில் டெட்’ பார்த்தவன் மாதி,ரி ஈரக்குலை நடுங்கிட்டு இருக்கே…” என்று கடுப்புடன் கடிந்துகொண்டான்.

“பாஸ்! நான் ஒரு எந்திரன் பாஸ். எனக்கு ஈரக்குலையெல்லாம் கிடையாது” என்று சாதுரியமாக சயின்ஸ் பேசியது பைக். “எல்லாத்தையும் வக்கணையா கிண்டல் செய்ய வாய் இருக்குல்ல? இனியாச்சும் என் பேச்சைக் கேட்டு நட” என்றான் பாச்சா. “எனக்கு நடக்கத் தெரியாது பாஸ். ஒன்லி ஃப்ளையிங்தான்” என்று அடுத்து பைக் பேச, ஆங்கொரு கவுண்டமணி – செந்தில் ஆக்‌ஷன் காட்சி அரங்கேறியது.

அன்றைக்கு முதலாமவர் சீமான்.

பார்க்கில் குவிந்திருக்கும் பாஜககாரர்கள், சினமும் சீற்றமுமாக சீமான் பேசும் காணொலிகளைக் கண்டு கலகலவென சிரித்தபடி சிரிப்பாசனம் செய்துகொண்டிருப்பதைக் காட்டும் வாட்ஸ்-அப் வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. செல்போனில் அதைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் செந்தமிழன்.

தினமும் திமுகவைத் திட்டும் தாமரைக் கட்சியினரின் பதிவுகளுக்கு, இனியும் பாசத்துடன் ஹார்ட்டின் விடுவதா வேண்டாமா எனும் தவிப்புடன் அவரைச் சுற்றிக் குழுமியிருந்தனர் தம்பிகள்!

“டெலிகேட் பொசிஷன். அப்படித்தானுங்களே!?” என என்ட்ரியிலேயே எரிச்சல்மூட்டிய பாச்சா, “ஆனாக்கா, ‘மக்களெல்லாம் மாஸ்க்கை மூக்குல மாட்டாம மசமசன்னு நிற்கிறாங்க’ன்னு மாஸ்க் போடாமலேயே பிரஸ் மீட்ல பேசுறீங்களே… மாஸ் சார் நீங்க” என்று இன்(னொரு)முகம் காட்டினான்.

‘பார்த்துடலாம்டா இன்னைக்கு…’ என மனசுக்குள் கருவியபடி பாக்கெட்டுக்குள் செல்போனைப் போட்டுவிட்டு, பாச்சாவை எதிர்கொண்டார் சீமான்.

“இருந்தாலும் என்னைக்கோ அரசியலுக்கு வந்த சீனியர் சீமானை இன்னைக்கு அரசியலுக்கு வந்த இளைய தம்பி அண்ணாமலை இப்படியெல்லாம் இன்சல்ட் பண்ணியிருக்கக் கூடாது. என்ன சார் பிரச்சினை? மக்களைச் சிரிக்க வைக்கிறதுல சிறந்தவர் யார்னு உங்களுக்கு ஏதாச்சும் தொழில் போட்டியா?” என்று பாச்சா கேட்ட கேள்வியால் கெட்ட கோபமான சீமான், “தம்பி, ஏற்கெனவே,வேற ஜோலியில்லாம ஜோதிமணி கொடுக்கிற டார்ச்சர்ல டன் கணக்குல டென்ஷனா இருக்கேன். நீ அண்ணாமலை, பாட்ஷான்னு வந்தேறி நடிகர் நடிச்ச படங்கள் பேரையெல்லாம் சொல்லி வம்பிழுக்காதே” என்றார்.

“அட போங்க சார்… சினிமாவையெல்லாம் தாண்டி சீரியஸ் அரசியல் பண்ணிட்டு இருக்கீங்கன்னு பார்த்தா, நீங்க இன்னமும் சினிமா டைட்டிலையும் டயலாக்கையும் ‘கோட்’ பண்ணிட்டு இருக்கீங்க. சிம்பு டயலாக்கையெல்லாம் சீமான் மேற்கோள் காட்டுறாரேன்னு உடன்பிறப்புகளே உச்சு கொட்டுறாங்க தெரியுமா?” என்றான் பாச்சா.

அதுவரை அமைதிகாத்து அமரிக்கையாகப் பேசிவந்த சீமான் ஆவேசமடைந்து, “அட நிறுத்துப்பா… நேத்துவரை எங்களை பிஜேபி பீ டீம்னு சொன்னாங்க… இனி திமுகவைத் திருப்திப்படுத்துற கட்சின்னு எங்களுக்குப் பேர் வாங்கித்தர ப்ளான் பண்றியா? இப்படியெல்லாம் பேசுனா விஷம் குடிக்கச் சொல்லி எங்க தம்பிகள் வீட்டுக்கு முன்னாடி போராட்டம் நடத்துவாங்க” என்று அதட்டினார்.

பதற்றத்தில் சப்தநாடியும் அடங்கிப்போன பாச்சா, பேச்சை மாற்றும் ப்ளானுடன், “ஏன் சார்… ‘என் வாக்காளன் 10-ம் வகுப்பு படிச்சிட்டு இருக்கான்’னு பகிரங்கமாகச் சொல்லியிருக்கீங்களே… படிச்சு வளர்ந்து மேல வரப்போற பசங்க கொஞ்சமாச்சும் பகுத்தறிவோட இருந்தா என்ன சார் செய்வீங்க?” எனக் கேட்டதும் சீமானின் கண்கள் சிவக்கத் தொடங்கின.

பாச்சாவும் வழக்கம்போல் பேட்டியைப் பாதியில் நிறுத்திவிட்டு பாய்ந்தோடினான்.

அடுத்தவர் அண்ணாமலை.

கமலாலயத்தின் கதவு, ஜன்னல்களை மட்டுமல்லாமல் கேட்டையும் அகலத் திறந்து வைத்தபடி கெடுபிடியாக அமர்ந்திருந்தார் அண்ணாமலை.

“மத்தவங்க மாதிரி நீங்க கள்ளம் கபடம் இல்லாத ஆள்னுதான் எல்லாருக்கும் எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டீங்களே… இன்னமுமா இந்த அடக்க பிம்பம் அவசியப்படுது?” என்று கேட்டபடி கமலாலயத்துக்குள் கால் பதித்தான் பாச்சா.

திடீரென எங்கிருந்தோ முளைத்த காவித் தொண்டர்கள், கப்பென அவன் காலரைப் பிடித்து சட்டை, பேன்ட்டு பாக்கெட்டுகளில் கைவிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.

“ஜி! இவன்கிட்ட ரெக்கார்டர் இருக்கு ஜி. என்ன பண்ணலாம்? எரிச்சிடலாமா புதைச்சிடலாமா?” என்று அவர்கள் கோரஸாகக் கொந்தளிக்க… பயத்தின் உச்சியில் பாச்சாவின் உடலெங்கும் உதறலெடுத்தது.

“ஏங்க… ரெக்கார்டர் இல்லாம எப்படிங்க இன்டர்வியூ எடுக்கிறது? இதுக்கெல்லாமா இப்படி மிரட்டுவீங்க? இதெல்லாம் ராங் அப்ரோச்சுங்க” என்று அவன் அச்சத்தில் அலறி உளற, “ண்ணா… பயப்படாதீங்கண்ணா. அவங்க எரிச்சிடலாமான்னு கேட்டது ரெக்கார்டரைத்தான். நாங்க அமைதியை ஆழமா அடக்கம் செய்ற கட்சி… சாரி அமைதியை ஆழமா விரும்பும் அடக்கமான கட்சி. வன்முறைக்கெல்லாம் இங்கே இடவசதி… அச்சச்சோ… இடம் இல்லை” என்று பாந்தமாகப் பேசி பாச்சாவின் பயத்தைப் போக்கிய பாஜக தலைவர், “எல்லாரையும் நம்பி எதையாச்சும் பேசப்போக பயபுள்ளைக எங்கேயாவது கோர்த்துவிட்டுப் போயிடறாங்க”என்று பழைய சம்பவத்தை நினைத்து ஃபீல் பண்ணத் தொடங்கினார்.

அந்த தைரியத்தில் வழக்கமான வம்பு மூடுக்குத் திரும்பிய பாச்சா, “அதென்னங்க… கியாஸ் விலை கிடுகிடுன்னு ஏறுதேன்னு கேட்டா ஆப்கன் ஆபத்து, சீனா சிக்கல்னு சம்பந்தம் இல்லாமல் சலம்புறாங்க உங்க கட்சிக்காரங்க. தமிழ்நாட்டுலதான் தடுக்கி விழுந்தா படிச்ச ஆளுங்களா இருக்காங்களே… தாமரையை மலரவைக்க ஆசைப்படுறவங்க, இப்படி தாறுமாறா ஸ்டேட்மென்ட் விட்டு ஸ்டாலின் கட்சியை இன்னும் ஸ்ட்ராங்காக்கிடுவாங்க போல இருக்கே?” என்றான்.

“அப்படியெல்லாம் நாங்க அசால்ட்டா விட்டுட மாட்டோம். அதுக்குத்தான் விநாயகர் சதுர்த்தி மேட்டரை வச்சு திமுக அரசைத் திக்குமுக்காட வச்சிட்டு இருக்கோம். முருகன் மேட்டரை வச்சு வேல் ஏந்தியே நாலு சீட்டைப் பிடிச்ச நாங்க, பிள்ளையார் மேட்டரை வச்சு பெருசா பிரச்சினை பண்ணிட மாட்டோமா!?” என்று பெருமிதத்துடன் பேசிக்கொண்டே போனார் அண்ணாமலை.

“அதுசரி டெல்லிக்குப் போய்ட்டு வந்தீங்களே… தமிழகத்துல தாமரையை மலரைவைக்கிற… சாரி வளரவைக்கிற விஷயத்துல அமித் ஷா என்ன ஐடியா கொடுத்தார்?” என பாச்சா கேட்க, “அதெல்லாம் உட்கட்சி விவகாரம். அதைப் பத்தியெல்லாம் யார்கிட்டேயும் குறிப்பா மைக் பிடிச்சிட்டு வர்ற மத… சாரி பத்திரிகையாளர்களுக்கு எதுவும் சொல்ல மாட்டோம்” என்று அடம்பிடிக்கும் குரலில் சொன்னார் அண்ணாமலை.

அதற்கு மேல் பேச தெம்பில்லாததால், அத்துடன் இன்டர்வியூவுக்கு எண்டு கார்டு போட்டான் பாச்சா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE