ஊருக்கே சோறு போட்டாலும் எங்க வயிறு காயுதே!

By என்.சுவாமிநாதன்

தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தனித்த ஒரு வரலாறு குமரி மாவட்டத்துக்கு உண்டு. ‘நாஞ்சில்’ என அடைமொழி வைத்து அழைக்கும் அளவுக்கு, நெல் சாகுபடியில் கொடிகட்டிப் பறந்த பகுதி இது. ‘நாஞ்சில்’ என்றால் ‘கலப்பை’ என்று அர்த்தம். தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் இருந்ததைப் போல் கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தபோது ஒட்டுமொத்த கேரளத்தின் உணவுத்தேவைக்கும் அரிசி உற்பத்தி செய்த நெற்களஞ்சியமாக விளங்கியது. ஆனால் இப்போது, தன் சொந்தத் தேவைக்கே வெளிமாவட்டங்களை நோக்கிக் கையேந்தும் நிலையில் உள்ளது!

இதன் பின்னணியில் நாஞ்சில் நாட்டு விவசாயிகளின் கண்ணீர் கதை இருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார், நாஞ்சில் நாட்டின் முன்னோடி விவசாயி செண்பக சேகரன்.

“குமரி மாவட்டத்தில் முந்தைய காலத்தில் 50 ஆயிரம் ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி பரப்பு, இன்று 15 ஆயிரம் ஹெக்டேருக்கும்கீழே வந்துவிட்டது. இதற்கு நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததுதான் முக்கியமான காரணம். ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என சுய அனுபவத்திலிருந்துதான் நம் முன்னோர்கள் பழமொழி சொல்லியிருக்கிறார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கும்போதுகூட அவற்றின் விலை பற்றியும், அதற்குண்டான தயாரிப்பு செலவு பற்றியும் தெரிந்துகொள்ள நுகர்வோர் விரும்புகிறார்கள். ஆனால், கடையில் போய் அரிசியை வாங்கும் நுகர்வோருக்கு அதன் உற்பத்தி செலவினம் பற்றியோ, அதன் பின்னால் இருக்கும் விவசாயிகளின் துயர்மிகு வலி பற்றியோ தெரிவதே இல்லை. தெரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை.

செண்பக சேகரன்

நாஞ்சில் நாட்டில் விவசாயத்தைவிட்டு பலரும் வெளியே செல்லக் காரணமே கட்டுப்படியான விலை கிடைக்காததுதான். ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய நாற்றங்கால் தயாரிப்புக்கு மட்டும் 3,200 ரூபாய் செலவாகிறது. நடவு வயலைத் தயார் செய்ய 7,300 ரூபாய் ஆகும். அடி உரத்துக்கு 2,500 ரூபாயும், நடவு கூலி 4,200 ரூபாயும் ஆகிறது. களைக்கொல்லி மருந்துக்கு 1,500 ரூபாயும், இரண்டு முறை மேல் உரம் போட 1,500 ரூபாயும் ஆகிறது. இதேபோல் பயிர் பாதுகாப்புக்கு 2,000 ரூபாய் ஆகும். ஊற்றங்கால் எடுக்க 600 ரூபாயும், ஒரு ஏக்கரில் அறுவடை செய்ய அறுவடை இயந்திரத்திற்கான கூலியாக 2,500 ரூபாயும் செலவாகிறது.

அதுமட்டுமல்ல. வயலில் பயிர் கிடக்கும் 4 மாதங்களுக்கும் வீட்டிலிருந்து வயலுக்குச் சென்றுவர போக்குவரத்துச் செலவுக்கே 2,000 ரூபாய் ஆகிவிடும். இத்தனையும் செய்து முடித்து நெல்லை அறுவடை செய்ய ஏக்கருக்கு 26 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். அதிகபட்சம் அந்த நெல்லை 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம். அதிகபட்சமாக இந்த விலை வைத்து நெல்லை விற்றுக் கணக்குப் பார்த்தால்கூட, ஒரு ஏக்கரிலேயே 9,000 ஆயிரம் ரூபாய் வரைதான் விவசாயிக்கு வருவாயாக நிற்கும். இதுதான் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்யும் விவசாயியின் 6 மாத வருமானம் என்றால் நம்ப முடிகிறதா?

ஆமாம். ஒரு ஏக்கரில் பயிர் செய்யும் விவசாயி சராசரியாக ஒரு மாதத்துக்கு 1,500 ரூபாய்தான் வருவாய் ஈட்டுகிறார். அதில் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவரின் நிலையை நினைத்துப் பாருங்கள். இதே வயல்காடு சொந்தமாக இல்லை என்றால், இதே தொகையை முதியோர் உதவித்தொகையாகவே அரசு தரும். ஏன் பலரும் விவசாயத்தைவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள் என இப்போது தெரிகிறதா?” என்று ஆற்றாமை நிறைந்த குரலில் கேட்டார் செண்பக சேகரன்.

அரசு கொள்முதல் மையங்களில் 100 கிலோ நெல்லை இப்போது 1,918 ரூபாய் வீதம் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், நெல்லைக் கொள்முதல் செய்வதில் சில தரக்கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதில் முக்கியமானது ஈரப்பதம். நெல்லில் 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் இருக்கக் கூடாது. ஆனால், குமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டம் என்பதாலும், கடற்கரையோர மாவட்டம் என்பதாலும் காற்றில் ஈரப்பதம் இங்கு அதிகமாகவே இருக்கும். இதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் குமரி மாவட்ட விவசாயிகளின் நெல் பரவலாகக் கொள்முதல் செய்யப்படுவதில்லை. அரசு நிர்ணயித்துள்ள 1,918 ரூபாய், குமரி விவசாயிகளுக்கு வெளிச்சந்தையில் கிடைப்பதில்லை. இடைத்தரகர்களும், வணிகர்களும் தங்களுக்குள் கூட்டுவைத்துக்கொண்டு அரசு நிர்ணயிப்பதைவிட மிகக் குறைவாக விலையை நிர்ணயித்துவிடுகின்றனர்.

இதைப் பற்றி இன்னும் விரிவாகப் பேசினார் செண்பக சேகரன்.

“முன்பெல்லாம் விவசாயம் அதிக செலவு இல்லாத தொழிலாக இருந்தது. அப்போது விதை விவசாயிகளின் கையில் இருந்தது. விவசாயிகளே தங்களுக்கான விதைநெல்லைப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது, விதை நெல்லுக்கே விவசாயத் துறையைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு மாடு இருந்தது. அதனால் தொழுவுரத்துக்குக் குறைவே இருக்காது. ரசாயனப் பயன்பாட்டைத் தவிர்த்து சாணியுரத்தைப் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்போது, குமரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களே சுருங்கிவிட்டதாலும், விவசாயத்துக்கு டிராக்டர் பயன்பாடு கூடிவிட்டதாலும் உரமும் விவசாயியின் கையைவிட்டுச் சென்றுவிட்டது. ரசாயன விவசாயத்தையே சார்ந்திருக்க வேண்டியுள்ளதால் உற்பத்தி செலவின் பெரும்பகுதியை ரசாயன உரமும், பூச்சிக்கொல்லி மருந்தும் எடுத்துக்கொள்கின்றன.

விவசாய வேலையாட்களுக்கு இப்போது ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதனால் நடவுப்பணிக்கே சம்பளம் கூடிவிட்டது. முன்பெல்லாம் ஒரு ஏக்கரில் 20, 25 பேர் நின்று நடவுசெய்வார்கள். ஊதியமும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது, சம்பளம் அதிகமாகக் கொடுத்தால்கூட நடவுப்பணிக்கு கூலியாட்கள் இல்லை. இன்றைய தலைமுறையில் இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அடுத்த தலைமுறையில் நடவுக்கே வேலையாட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல்தான் ஏற்படும்.

ஏற்கெனவே அரசு அறிவித்திருக்கும் கொள்முதல் விலையே போதுமானதாக இல்லை. குமரி மாவட்ட விவசாயிகள் அதைவிடவும் குறைவான விலைக்கு வெளிச்சந்தையில் நெல்லைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற பனி அதிகமாகப் பொழியும் மாநிலங்களில் மத்திய அரசு நெல் கொள்முதலுக்கென்று தரத் தளர்வுகளை வைத்துள்ளது. அதேபோல் குமரி மாவட்டத்துக்கும் இங்குள்ள இயற்கை சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, ஈரப்பதத்தில் தரத் தளர்வு கொடுக்கப்பட வேண்டும். மத்திய அரசின் உணவுக்கழகம்தான் இதைச் செய்ய வேண்டும். நிலம்தான் எங்களுக்கு எல்லாமே. இந்த மண்ணை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதால்தான் விவசாயத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். ஊருக்கே சோறு போட்டாலும், விவசாயி தன் வயிற்றைக் காயப்போட்டுக் கொண்டுதான் வாழ்க்கையை ஓட்டுகிறான். இந்நிலை மாறாவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் நாஞ்சில் நாட்டில் மிச்சம் மீதி விவசாயிகளும் நெல்லை விட்டுவிட்டுப் போகும் அபாயம் இருக்கிறது” என எச்சரிக்கை மணி அடித்தார் செண்பக சேகரன்.

எட்ட வேண்டியவர்களின் செவிகளுக்கு, இவரின் எச்சரிக்கை மணிச் சத்தம் எட்டினால் சரிதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE