சமூக நீதி பிரச்சாரப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்!

By கரு.முத்து

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி பெயரால் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். அதன்சார்பில் நடைபெற்ற 3-வது சொற்பொழிவில், ரவிக்குமார் ஆற்றிய தலைமை உரையிலிருந்து...

“சமத்துவப் பெரியார் கலைஞர் பெயரில் இந்த அறக்கட்டளையை நிறுவியதன் நோக்கம், அவர் முன்னெடுத்த சமூக நீதிக் கருத்தியலை உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் இன்றைய தலைமுறைக்கு மட்டுமின்றி எதிர்காலத் தலைமுறையினருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் என்பது, ஆராய்ச்சியை முதன்மைப்படுத்திய உயர்கல்வி நிறுவனம். இங்கே, மாணவர்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டங்களைப் பெறுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், இதுபோன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் கருத்தியல் உற்பத்தி மையங்களாகவும் இருக்கின்றன. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் செல்வாக்கு செலுத்தமுடியும். எனவே, இங்கே ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களை வேலைக்கான பட்டதாரிகளாக உருவாக்காமல் அவர்களை கருத்தியல் தளத்தில் செயல்படக்கூடிய உந்துசக்திகளாக உருவாக்கவேண்டும்.

சமத்துவ பெரியார் கலைஞரைப் பொறுத்தமட்டில், அவர் அச்சு ஊடகத்தில் இயங்கியது மட்டுமல்லாமல் திரைப்படத் துறையிலும் நடிப்பு, வசனம், பாடல் எனப் பல தளங்களில் பங்களிப்புச் செய்தார். அதன் மூலமாக படிப்பறிவில்லாத பாமர மக்களிடையேகூட சமூக நீதிக் கருத்துக்களைப் பரவச் செய்தார். அப்படி மேற்கொள்ளப்பட்ட அந்த கருத்தியல் பிரச்சாரம் 30, 40 ஆண்டுகள் வலுவாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே, திமுக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வந்தது.

இன்று இந்தியாவில், சனாதனத்துக்கும் சமூக நீதிக்கும் இடையே நடக்கும் போராட்டமே முதன்மையான போராட்டமாக மாறியிருக்கிறது. சனாதனத்துக்கு எதிரான போராட்டம் என்பது பொருளாதாரம், அரசியல், கருத்தியல் என்ற 3 தளங்களில் நடத்தப்படவேண்டும்.

பொருளாதார தளத்தில் சனாதனத்தை எதிர்த்த போராட்டம் 3 கட்டங்களாக அமையும். பொருளாதார தளத்தில் சனாதனம் முன்வைக்கும் தாராளமயம், தனியார்மயத்தை எதிர்த்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இது முதல் கட்டம். 2-வது கட்டமாக, தாராளமயத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி தனியார்மயத்தை ஒழித்தாக வேண்டும்.

மூன்றாவதாக, சமூக நீதிக்கு ஏற்ற சமத்துவப் பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்த வேண்டும். சமூக நீதிக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கையென்பது சோஷலிசக் கொள்கைதான். அதை உணர்ந்துதான் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் என சமூக நீதி அரசியலை முன்னெடுத்தத் தலைவர்கள் அனைவருமே சோஷலிசத்தை ஆதரித்துப் பேசியுள்ளனர்.

அரசியல் தளத்தில் இதேபோல 3 கட்டங்கள் இருக்கின்றன. பாராளுமன்ற ஜனநாயக அமைப்புகளில், சனாதன சக்திகளுக்கு இணையான எண்ணிக்கையில் இடம்பெறுவது முதல் கட்டம். 2-வது கட்டம், சனாதனத்தைத் தோற்கடித்து சமூகநீதிக் கொள்கைகளை அதிகாரத்தில் வைப்பது. 3-வதாக, ஆட்சியதிகார அமைப்புகள் அனைத்திலும் சனாதனத்தை முற்றாக ஒழித்துக்கட்டி சமூகநீதி அரசியலின் மேலாதிக்கத்தை நிறுவுவது.

இதைச் செய்வதற்கு கருத்தியல் பிரச்சாரம் என்பது மிகவும் அடிப்படையானதாகும். இந்தப் பிரச்சாரம் பல்வேறு விதங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். சமூகநீதிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களைக் கருத்தியல் ரீதியாக தயாரிப்பதற்கு சமூக நீதிப் பிரச்சாரப் பள்ளிகள் துவக்கப்பட வேண்டும். அதற்கான முறையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு சமூக நீதிக் கொள்கையில் தேர்ச்சிபெற்ற மாணவர்களாக இந்தச் செயல்வீரர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதில் சிறு வெளியீடுகள், நாளிதழ்கள், காட்சி ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.

சமூகநீதிக் கொள்கையில் பற்று கொண்டவர்கள் கூட இன்று தினந்தோறும் சனாதனவாதிகளால் நடத்தப்படும் ஊடகங்களைப் பார்ப்பதும், அவர்களால் நடத்தப்படும் நாளேடுகளை வாங்கிப் படிப்பதுமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

சமூகநீதிக் கொள்கையில் பற்று கொண்டவர்கள் கூட இன்று தினந்தோறும் சனாதனவாதிகளால் நடத்தப்படும் ஊடகங்களைப் பார்ப்பதும், அவர்களால் நடத்தப்படும் நாளேடுகளை வாங்கிப் படிப்பதுமாக இருப்பதைப் பார்க்கிறோம். இதன் மூலம் அவர்களுடைய கருத்துப் பிரச்சாரத்துக்கு தங்களை அறியாமலேயே அவர்கள் ஆட்படுகிறார்கள். அதனால் சனாதனவாதிகளின் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு அவர்கள் பணிந்து போவதும் நடக்கிறது.

ஒருபுறம் அரசியல் தளத்தில் சனாதனத்தை எதிர்த்துக் கொண்டு, இன்னொரு புறம் கருத்தியல் தளத்தில் அதனுடைய மறு உற்பத்திக்கு நாமே உதவிசெய்யும் அவல நிலை இதனால் உருவாகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால், சனாதனவாதிகளுடைய பிரச்சார ஊடகங்களை முற்றாக நாம் நிராகரிப்பது அவசியம். அப்படியானால், அதற்கு மாற்றாக நமது கருத்தியல் உள்ளீடு கொண்ட ஊடகங்களை நாம் உருவாக்கியாக வேண்டும்.

சனாதனவாதிகளின் கருத்தியல் தாங்கிகளாக நமது இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், முதலில் சனாதனப் பிரச்சார ஊடகங்களை நிராகரிக்க நாம் அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அவர்களுடைய நாளேடுகளை வாங்குவது, அவர்களால் நடத்தப்படும் பிரச்சாரங்களைக் கவனிப்பது இவற்றிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்றால், மாற்று ஊடகங்கள் மிக மிக அவசியம். அந்த மாற்று ஊடகங்கள் அவர்களைக் கருத்தியல் ரீதியாகக் கவர்ந்து இழுக்கக் கூடிய ஆளுமை மிக்கவையாக இருக்க வேண்டும்.

ஒருபுறம் அரசியல் தளத்தில் சனாதனத்தை எதிர்த்துக் கொண்டு, இன்னொரு புறம் கருத்தியல் தளத்தில் அதனுடைய மறு உற்பத்திக்கு நாமே உதவிசெய்யும் அவல நிலை

திராவிட இயக்க முன்னோடிகள் மேற்கொண்ட பிரச்சாரம் என்பது, அச்சு ஊடகத்தோடு நின்று விடாமல் அன்றைக்கு வலுவாக உருவெடுத்துக் கொண்டிருந்த திரைப்படம் என்ற காட்சி ஊடகத்திலும் கிளை பரப்பியது. அதற்குள் தங்களுடைய ஆளுமையை அவர்கள் நிறுவினார்கள். மிகக் குறுகிய காலத்திலேயே திரைப்படம் என்பது சமூக நீதிக் கருத்துக்களின் பிரச்சார சாதனமாக அவர்களால் மாற்றப்பட்டது. அத்தகைய படங்கள் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரும் வெற்றிகளை ஈட்டின.

அறிஞர் அந்தோணியோ கிராம்சி கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவுவதில் பத்திரிகைகளுக்கு இருக்கும் பங்கைப் பற்றி 1916-ம் ஆண்டிலேயே தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறார். அது திராவிட இயக்கத்தில் அப்படியே பின்பற்றப்பட்டிருப்பது வியப்பளிக்கும் ஒன்று.

சமத்துவ பெரியார் கலைஞரைப் பொறுத்தமட்டில், அவர் அச்சு ஊடகத்தில் இயங்கியது மட்டுமல்லாமல் திரைப்படத் துறையிலும் நடிப்பு, வசனம், பாடல் எனப் பல தளங்களில் பங்களிப்புச் செய்தார். அதன் மூலமாக படிப்பறிவில்லாத பாமர மக்களிடையேகூட சமூக நீதிக் கருத்துக்களைப் பரவச் செய்தார். அவர் மட்டுமன்றி திராவிட இயக்கத்தைச் சார்ந்த பலரும் இதைச் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அப்படி மேற்கொள்ளப்பட்ட அந்த கருத்தியல் பிரச்சாரம் 30, 40 ஆண்டுகள் வலுவாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே, திமுக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வந்தது. அவர்கள் 1967-ல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு சுமார் அரை நூற்றாண்டுகாலமாகக் கருத்தியல் தளத்தில் போட்ட அடித்தளம்தான், ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகும் அரை நூற்றாண்டு காலம் நீடிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

அவ்வாறு ஒரு வலுவான கருத்தியல் அடித்தளம் போடப்படாமல் போயிருந்தால், நிச்சயமாகத் திராவிட அரசியல் இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் நிலைத்திருக்க முடியாது. எனவே, ஊடகர் கலைஞர் என்று நாம் பேசுகிற இந்த நேரத்தில், திராவிட இயக்கம் என்ன மாதிரியான பணிகளை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செய்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தப் பணிகளின் தேவை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதோடு தீர்ந்து போய்விடுவதில்லை.

இத்தாலி நாட்டில், பாசிஸத்துக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்க மேலாதிக்கத்தை நிறுவுவதற்குப் போராடிய அறிஞர் அந்தோணியோ கிராம்சி கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவுவதில் பத்திரிகைகளுக்கு இருக்கும் பங்கைப் பற்றி 1916-ம் ஆண்டிலேயே தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறார். அது திராவிட இயக்கத்தில் அப்படியே பின்பற்றப்பட்டிருப்பது வியப்பளிக்கும் ஒன்று.

இப்போது கிராமப்புறங்களில் சமூக நீதிப் பிரச்சாரம் என்பது மேற்கொள்ளப்படுவதில்லை. அங்கே, இடதுசாரி அமைப்புகளும் கூட முன்னைப்போல் வலுவாக இப்போது செயல்படவில்லை. அங்கெல்லாம் சனாதன சக்திகள் ஊடுருவி மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிய பிறகு, கருத்தியல் தளத்தில் செய்யவேண்டிய பணி என்பது மேலதிக முக்கியத்துவம் பெறுகிறது. கருத்தியல் தளத்தில் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு ஊடகங்கள் மிக முக்கியமான கருவிகளாக இருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தை நிறுவியதற்குப் பிறகு, இன்னும் கூடுதல் முக்கியத்துவத்தோடு இந்தக் கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான பணியை நாம் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால், அரசியல் தளத்தில் நாம் ஈட்டிய வெற்றிகள், அடைந்த முன்னேற்றங்கள் எளிதாக வீழ்த்தப்பட்டுவிடும். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.

இன்று சமூக நீதிக் கொள்கைகளைப் பேசுகிறவர்கள் முதன்மையாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது இந்த விஷயத்தைத்தான். இப்போது, தமிழ்நாட்டில் சமூக நீதிக் கொள்கைக்கு ஆதரவான ஒரு அரசாங்கம் அமைந்திருக்கிறது. இந்தச் சூழலில் சமூக நீதிக் கருத்தியலை சமூகத்தில் மேலாதிக்கம் பெற வைப்பதற்கு, அனைத்துத் தளங்களிலும் நாம் முன்னிலும் அதிகமாக உழைக்க வேண்டும்.

இப்போது கிராமப்புறங்களில் சமூக நீதிப் பிரச்சாரம் என்பது மேற்கொள்ளப்படுவதில்லை. அங்கே, இடதுசாரி அமைப்புகளும் கூட முன்னைப்போல் வலுவாக இப்போது செயல்படவில்லை. அங்கெல்லாம் சனாதன சக்திகள் ஊடுருவி மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் களத்தில் அவர்களைத் தோற்கடித்து விட்டோம் என்று நாம் இறுமாந்திருந்தால், கலாச்சாரத் தளத்தில் அவர்கள் செய்து கொண்டிருக்கிற வேலை, நாளை அரசியல் தளத்தில் நம்மை வீழ்த்திவிடும்.

எனவே, கிராமப்புறங்களில் மீண்டும் சமூக நீதிக்கான, சமத்துவத்துக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. திமுக துவக்கப்பட்ட காலத்தில் எப்படி சிற்றூர்களில் கூட அந்தக் கருத்தியல் முன்னெடுத்துச் செல்லப்பட்டதோ அப்படி நேரடியான, மக்களோடு தொடர்பு கொண்ட பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய அனுகூலத்தைக் கொடுத்திருக்கிறது என்றாலும், அதை நாம் வலுவாகப் பயன்படுத்துகிறோம் என்றாலும், அது மட்டுமே போதாது. சமத்துவம்-சமூக நீதி என்ற கருத்துகளை, 2000-க்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் வாய்ப்புள்ள அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால், அந்தப் பிள்ளைகள் நம்முடைய கருத்தியல் ஆளுகைக்குள் வராமல் சனாதனக் கருத்தியலின் வழிபாட்டாளர்களாக மாறிவிடுவார்கள். அந்த ஆபத்தை முறியடிக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது.

அரசியல் தளத்தில் அமையும் கூட்டணிகள் அவ்வப்போது மாறலாம். ஆனால், கருத்தியல் தளத்தில் சமூக நீதிக் கூட்டணி மாறாமல் வலுவோடு முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தத் தேவையை உணராவிட்டால், இங்கே சனாதன சக்திகள் மீண்டும் வலுப்பெற்றுவிடுவார்கள். அவ்வாறு நடந்தால் அது திராவிட அரசியலுக்கு மட்டுமல்ல, அம்பேத்கரிய அரசியலுக்கும், இடதுசாரி அரசியலுக்கும்கூட படுதோல்வியாக அமைந்துவிடும். இதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறேன்.”

இவ்வாறு ரவிக்குமார் தனது உரையில் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE