டிகேஎம்-9 ரக நெல் கொள்முதல் செய்யப்படும்

By கரு.முத்து

டிகேஎம்-9 ரக நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது, விளைவித்த நெல்லை விற்க முடியாமல் தவித்த விவசாயிகளை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.

நெல் வயல்

மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் கோடை சாகுபடியில் டிகேஎம்-9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடும் வறட்சியை தாங்கும் இந்த ரகம், பூச்சி மற்றும் நோயிலிருந்து அதிகம் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ளும். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் ஏறக்குறைய 18 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு இந்த நெல் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறுவடைப் பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில், அந்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய மறுத்து வந்தனர்.

இதனால் டிகேஎம்-9 ரக நெல் சாகுபடி செய்த விவசாயிகள், எங்கே அரசு நெல்லை கொள்முதல் செய்யாமல் விட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் முறையிட்டனர். இந்த நிலையில் தற்போது அரசு, டிகேஎம்-9 ரக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

இதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர், வேளாண்மை இயக்குநர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட வேளாண்மை இயக்குநர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் ஆகியோருக்கு விவசாயிகளும் விவசாய சங்கங்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE