மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு உதவத் தயார்

By கரு.முத்து

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க, தமிழகத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக தன்னை சந்தித்த தமிழக விவசாயிகளிடம் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உறுதியளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறுகிறது. இதில் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட கொடுத்துள்ள சாத்தியக்கூறு அணை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதை விவாதிக்க வேண்டாம் என தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் தமிழகத்துக்கு ஆதரவாக கைகோக்கவேண்டும் என தமிழக விவசாயிகள் விரும்புகின்றனர்.

அதற்காக கேரள அரசின் உதவியைக்கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையிலான தமிழக விவசாயிகள் குழு 30-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் சந்தித்தது. அப்போது கர்நாடகம் மேகேதாட்டுவில் அணைகட்டுவதற்கான கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை நிராகரித்திட ஆதரவு கோரி அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விவசாய சங்க பிரதிநிதிகள்

காவிரி மேலாண்மை ஆணையம் பெரும்பான்மை அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவை உச்சநீதிமன்றம்தான் இறுதிசெய்ய முடியும். இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம் புதுச்சேரி கர்நாடகம் கேரள மாநிலங்கள் அங்கம் வகிப்பதால் கேரள அரசு தமிழக விவசாயிகள நலன் கருதி மேகேதாட்டு அணை வரைவு திட்ட அறிக்கை நிராகரிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேரள முதல்வரிடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கும், தமிழக அரசுக்கும் ஆதரவாக இருப்பதாக உறுதியளித்தார். இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு எதிராக கர்நாடகம் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கும், காவிரி பிரச்சினையிலும் அரசியல் லாபம் கருதி மோடி அரசு கர்நாடகத்துக்குத் துணைபோவதை நாடே அறிந்துள்ளது. இது விஷயமாக கேரள முதல்வரிடம் நாங்கள் கோரிக்கை வைத்து விவாதித்தோம். அப்போது, “உடனடியாக கேரள மாநில நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி தமிழகத்திற்கு உதவிட தயாராக இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம். பத்திரமாக ஊர் செல்லுங்கள்” என்று கேரள முதல்வர் எங்களுக்கு உத்தரவாதம் அளித்தார்.

அதனால் நிச்சயம் கேரளம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு உதவும் என்கிற நம்பிக்கையோடு தமிழகம் திரும்புகிறோம். தமிழக முதலமைச்சர் உடனடியாக கேரள முதலமைச்சரோடு தொடர்பு கொண்டு ஆதரவு கோரினால் நிச்சயம் கர்நாடகாவின் துரோகம் தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE