வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

By கரு.முத்து

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 28) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாகவும் பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தமிழக விவசாயிகள் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வரும் வேளாண் அமைச்சரும்

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவற்றை ரத்து செய்யவேண்டும் என்று இந்தியா முழுவதும் விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2020 ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் முகாம்கள் அமைத்து தங்கிப் போராடி வருகிறார்கள். ஓராண்டு கடந்தும் தொடரும் அவர்களின் போராட்டத்துக்கு செவிமடுக்காத மத்திய அரசு, இச்சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மறுக்கிறது.

இந்தச் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசு சொன்னாலும் அதை ஏற்க விவசாயிகள் தயாராக இல்லை. 3 சட்டங்களையும் வாபஸ் பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். அதன் விளைவாக 11 முறைகளுக்கும் மேல் அரசுக்கும் விவசாயிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்தும் பயனில்லாமல் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு பாஜக தவிர, இதர அரசியல் கட்சிகள் அனைத்துமே தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் பிரதானக் கட்சியான திமுகவும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பிருந்தே வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தது. இந்த நிலையில் தாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானத்தையும் அரசின் சார்பில் நிறைவேற்றியிருக்கிறது.

சட்டப்பேரவை கூடியதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ’’மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை, அவை வேளாண்மையை அழிப்பதாகத்தான் இருக்கிறது. இதனால் தனியார் பெருமுதலாளிகள்தான் பலனடைவார்கள்” என்ற விவசாயிகளின் கூற்றையே தன் வார்த்தைகளில் முன்மொழிந்து பேசினார் முதல்வர்.

”இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது. மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானதாக இருக்கிறது. இதை எதிர்த்து நாட்டின் தலைநகரில் 385 நாட்களாக உழவர்கள் போராடி வருகின்றனர்” என்று சுட்டிக்காட்டிய முதல்வர், ”3 சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்படுகிறது” என்றார்.

பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் பேசியபிறகு, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் வாழ்வு செழிக்க திமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்ற முதல்வர் ஸ்டாலின், பேரவை உறுப்பினர்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, இந்தச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த தீர்மானத்தை எதிர்த்து முதலில் பாஜகவினரும் இறுதியில் அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகள்

மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக இதுவரையிலும் கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தீர்மானம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. தற்போது தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்கள் நிறைவேற்றும் இந்த தீர்மானங்கள் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியைத் தரும் எனக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE