வியக்க வைக்கும் விசில் குருவி

By கா.சு.வேலாயுதன்

இமயமலைக்கு தென்புறத்தில் காஷ்மீர் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, கடும் குளிர்காலத்தில் தென்னிந்திய பகுதிகளான கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளுக்கும் இலங்கைக்கும் சென்று வரும் சிறு பறவை, 'இந்தியன் பிட்டா' (Indian Pitta). வானவில்லின் ஏழு வண்ணங்களுடன் கருப்பு, வெண்மை இரண்டறக் கலந்து காணப்படும் இப்பறவை மரங்களில் கூடுகட்டி தங்கினாலும், அவ்வளவு சுலபமாய் கண்களில் அகப்படாது.

புல்வெளிகள், செடிகொடிகள், சருகுகளுக்குள் கிளறிக்கிளறி அதில் காணப்படும் புழு, பூச்சிகளை பிடித்துச் சாப்பிடும் குருவியாதலால், புதர்கள் மற்றும் குப்பைகளுக்குள்ளேயே மறைந்து ஊர்ந்து கொண்டிருக்கும் இந்தக் குருவி, சமீப காலமாக கோவையின் கணுவாய், மருதமலை, சிறுவாணி, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது வரத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு குருவியை சமீபத்தில் புகைப்படம் பிடித்துள்ளார் கோவையைச் சேர்ந்த பறவைக் காதலர் டென்னிஸ் சுப்பிரமணியம்.

இந்தக் குருவியைப் பற்றி அவர் கூறும்போது, "இது சிட்டு போல் சிறிய வடிவம் கொண்டது. அவ்வளவு சுலபமாக கண்களில் தென்படாது. செடி, கொடிகளுக்குள், குப்பைகளை, புதரைக் கிளறும்போது கீ, கீ என ஒருவிதமாக விட்டு விட்டு விசில் சத்தம் எழுப்புவதில்தான் இது அங்கே இருப்பதே தெரியும். பறக்கும்போது நீல வண்ணத்தில் சுடர்விடும் பறவை, அமர்ந்திருக்கும்போது பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், கிரே, ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களில் மினுக்கும். சரியாக வடக்கே குளிர்காலம் ஆரம்பிக்கும்போது அக்டோபர், நவம்பரில் வந்துவிட்டு ஏப்ரல், மே மாதத்தில்

சுப்பிரமணியம்

வடநாட்டுக்கே திரும்பிச் சென்று விடும் வழக்கம் கொண்டது.

கோவையில் மருதமலை, சிறுவாணி, கணுவாய், ஆனைகட்டி பகுதிகளில் அபூர்வமாக காணப்படும் இப்பறவையை ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு பிறகு கண்ணுக்கு கிடைக்கும், ஆனால் கேமராவுக்குள் அகப்படாது. பொதுவாக இக்குருவிகளை ஜோடியாக பார்ப்பதும் அரிது. புல், புல் குருவி மாதிரி சில பறவைகள் நூற்றுக்கணக்கில் இருப்பதால் அவை எப்படியாவது ஜோடியாக புகைப்படத்துக்கு கிடைத்து விடும். இது ஒரு பகுதியில் இருந்தால் அதிகபட்சம் ஏழெட்டு குருவிகளே இருக்கும். அதுவும் தனித்தனியாக புதருக்குள் கிளறிக் கொண்டிருக்கும். மரத்தில் அடையும்போது மட்டும் கிளைக்கு கிளை தாவும். எனவே அவ்வளவு சுலபமாக அகப்படாது.

இந்த வருஷமும் மருதமலை பக்கத்தில் இந்தக் குருவியின் விசில் சத்தம் 4 நாட்களுக்கு முன்பே கேட்டேன். அதே இடத்துக்கு 4 நாட்கள் போனதில், ஒரே ஒருநாள் மட்டும் கண்ணுக்கு அகப்பட்டது. அதை ஒரே ஒரு புகைப்படமே எடுக்கவும் முடிந்தது. அடுத்தடுத்து 4 நாட்கள் அதே பகுதிக்கு போய் பார்க்கிறேன். அது கண்ணுக்கு படாமல், அதன் சன்னமான சீட்டியொலி மட்டும் கேட்கிறது!’ என குறிப்பிட்டார்.

அவர் மேலும் இப்பறவை பற்றி சிலாகிக்கையில், ‘இந்த வகை பறவையை படம் பிடிப்பதில், அதன் செயல்பாடுகளை ஆராய்வதில் இயற்கை ஆர்வலர்களுக்கு ஆர்வம் அதிகம். அதற்காக கர்நாடகாவில் கணேஷ்குடி என்ற பகுதியில் வனத்துறையினரே இந்த பறவைகள் தங்குவதற்காக, பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், படம் பிடிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள். அதேபோல் கேரளா பகுதியில் சில வீடுகளிலேயே சில வீடுகளில் இது சாப்பிடும் புழு, பூச்சிகள் இருக்கும் புற்செடிகளை வளர்த்து வைக்கிறார்கள். இந்த குருவி வந்து செல்லும் சீசனில் பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அந்த மாதிரி எந்த ஏற்பாடும் செய்யாமல் இருப்பது ஒரு நல்ல விஷயம். இதை நன்றாகப் பார்க்க வேண்டும் என்றால் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும். அப்போது இது பூச்சிகளை கிளறிக் கொண்டிருக்கும் இடங்களில் புற்கள் காய்ந்து சருகாகி காய்ந்திருக்கும். எனவே செடி, கொடிகள் மறைக்காமல் ரொம்ப சுலபமாக பார்வைக்கு தெரியும்!’ என்றார்.

இதன் சிறகுப் போர்வையில் பல நிறங்கள் இருப்பதாலும், புழு, பூச்சிகளை தேடித்தேடி உண்பதாலும் இதற்கு பஞ்சவர்ணக் குருவி, ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி, கஞ்சால் குருவி, காளிக் குருவி என்று நம் கிராமத்து மக்கள் பெயர் வைத்துள்ளார்களாம்.

அடேயப்பா... குட்டிக் குருவியில்தான் எத்தனை தகவல்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE