மீள்கிறது பொற்பனைக்கோட்டை

By கரு.முத்து

சுமார் 300 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோட்டைகள்கூட, வடநாட்டில் பாதுகாக்கப்பட்டு பெரிதாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆயிரம் வருடங்களைக் கடந்து அசையாமல் நிற்கும் தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட நம்முடைய பழம்பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் கண்டுகொள்ளாத நாம், சில வருடங்களாகத்தான் அவற்றை திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். இந்நிலையில் இப்போது கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் போன்ற நமது தொன்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளும் நல்லவேளையாக வேகமெடுத்திருக்கின்றன.

இந்நிலையில், நமது தமிழகத்தில் சங்க காலத்திலேயே கோட்டைகள் இருந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தேடிக் கண்டுபிடித்தார்கள். அதன்படி, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லத்திலும், புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் பொற்பனைக்கோட்டையிலும் சங்க காலத்தில் கோட்டைகள் இருந்தன என்று அந்த வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். வல்லத்தில் உள்ள கோட்டை நீள்வட்ட வடிவில் இருந்ததாகவும், அது தற்போது முற்றிலுமாக சிதிலமடைந்து விட்டதாகவும் அங்கு கிடைக்கும் எச்சங்களைக் கொண்டு முடிவுக்கு வந்துள்ளார்கள்.

அகழாய்வுப் பணிகள்

ஆனால், பொற்பனைக்கோட்டையில் இருந்த வட்ட வடிவிலான மிகப்பெரிய கோட்டையின் பெரும்பாலான பகுதிகள் நிலத்துக்கடியில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதற்குச் சான்றாக, மண்ணுக்கு மேலுள்ள கொத்தளம் பகுதியும், உடைந்த செங்கற்களும், கோட்டைச் சுவரை ஒட்டி உட்புறம் ஒரு அகழியும், வெளிப்புறம் ஒரு அகழியும் இருந்ததற்கான அடையாளங்கள் இப்போதும் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான மணிகண்டன், கரு. ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடத்தும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் அடிக்கடி பொற்பனைக்கோட்டைக்கு களப்பயணம் சென்று பானை ஓடுகள், வளையல், மணிகள், இரும்பு உருக்குகள், சுட்ட செங்கற்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடத்தவேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அகழாய்வு

அதன் தொடர்ச்சியாக பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடத்தவேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கருணாகரன் பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்வு நடத்த உத்தரவிட்டார். அதையடுத்து, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழக தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

கொத்தளம் உள்ள இடத்தில் முதல்கட்டமாக ஆய்வு நடைபெறுகிறது. அங்கு, சுட்ட செங்கற்களால் ஆன வடிகால் ஒன்று முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுகள் தொடர்கின்றன. உலகின் நாகரீக வரலாறு ஆதித்தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியது என்பதை நிரூபிக்கும் சான்றுகள் அங்கு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, வரலாற்று ஆய்வாளர்களிடம் உள்ளது. நாம் ஏட்டில் மட்டுமே படித்தறிந்த நமது சங்க காலம் என்பது விரைவில் கண்ணுக்கு முன்னால் நிஜமாகப்போகிறது.

சுடுமண்ணால் ஆன வடிகால்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE