காரைக்கால் அம்மையாரின் வழியில் நான்..!- பெண் ஓதுவார் சுஹாஞ்சனாவின் பக்திப் பாதை

By காமதேனு

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

தன் வயதுப் பெண்கள் திரையிசையில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தபோது, பிறவிப் பெருங்கடலைப் பக்தி நிறைந்த தமிழிசையில் நீந்தி கடக்க உறுதிகொண்டவர் சுஹாஞ்சனா. பத்தாண்டுகளுக்கு முன்பாக இந்த இளம்பெண் தொடங்கிய பக்தியிசைப் பயணம், இன்று தமிழகத்தின் இரண்டாவது பெண் ஓதுவார் எனும் பெருமையை இவருக்குத் தேடித் தந்திருக்கிறது.

உன்னதப் பணி

அர்ச்சகர் கருவறைக்குள் சென்று அபிஷேகம்,  அலங்காரம் அர்ச்சனை எல்லாம் செய்த பிறகு வெளியே உள்ள அர்த்த மண்டபத்தில் ஓதுவாரின் பணி தொடங்கும். பஞ்ச புராணங்களான ஏழு திருமுறைகள், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் பாடுவதே ஓதுவாரின் அன்றாடம். அந்த உன்னதப் பணியைச் செய்ய சுஹாஞ்சனாவுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு பலரையும் நெகிழச் செய்திருக்கிறது!

இதற்கான பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் கையால் பெற்றவுடன், சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் அப்பரின், ‘சொற்றுணை வேதியன்’ பாடலை சுஹாஞ்சனா பாடிய காணொலிதான் கடந்த வாரம் வைரல்.  “இந்த நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க எனக்குத் திருவருள் புரிந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாகத்தான் முதலில்  ‘சொற்றுணை வேதியன்’ பாடலைப் பாடினேன்” என்று சாந்தமான குரலில் பேசுகிறார் சுஹாஞ்சனா. பணியில் சேர்ந்த மூன்றாவது நாளே, மூன்று வேளையும் கோயில் திருப்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பியவரை அழைத்துப் பேசினோம்.

“பெண்களைக் கோயில் திருப்பணிகளில் பணி அமர்த்துவது என்பது நெடுங்காலமாகப் பெரும் சவாலாகவே இருந்தது. 2007-ல் கருணாநிதி ஆட்சி காலத்தில் அங்கயற்கண்ணி தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாரானார். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆண், பெண் இருபாலரும் அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட கோயில் திருப்பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனும் ஆணை வெளிவந்தது. நாளிதழில் அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு ஆர்வத்துடன் விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வில் பஞ்சபுராணப் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டார்கள். மனமுருகிப் பாடினேன். முறைப்படி தேர்வானேன்” என்று சொன்னார் சுஹாஞ்சனா.

திசைகாட்டிய திருவாசகம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த சுஹாஞ்சனாவின் தந்தை சுப்பிரமணியன் ஜவுளிக் கடை ஊழியர். தாய் கோமதி குடும்பத் தலைவி. சுஹாஞ்சனாவுக்கு ஒரு அண்ணன் கோகுல கிருஷ்ணன். அந்தக் குடும்பத்தில் எவரும் இசை மீது நாட்டம் கொண்டவர்கள் அல்லர். ஆனாலும், சிறுபிராயத்திலேயே சுஹாஞ்சனா இசையில் லயித்தார்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு, கரூர் மாவட்ட அரசு இசைக் கல்லூரியில் படிக்க விரும்புவதாக பெற்றோரிடம் சொன்னார் சுஹாஞ்சனா. அவரது விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் பெற்றோரும் ஓகே சொன்னார்கள். கர்நாடக இசை வாய்ப்பாட்டு, நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல், தெய்வீகப் பாடல்களைப் பாடுதல் உள்ளிட்டவை அந்தக் கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றன எனத் தெரியவந்தபோது, இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று சுஹாஞ்சனா குழம்பினார். அப்போது அப்பள்ளியின் இசை ஆசிரியர் குமாரசாமி ஐயா, திருவாசகத்தின்  ‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி’ பாடலைப் பாடி விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். இறைவன் வானாகவும் மண்ணாகவும் உடலாகவும் உயிராகவும் திகழ்கிறார் எனக் கேட்ட கணத்தில், தன் வாழ்க்கைக்கான அர்த்தப்பாடு கிடைத்துவிட்டதாக சுஹாஞ்சனா உணர்ந்தார். தேவாரம், திருப்புகழ், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற பலவிதமான பக்தி தமிழ் இசை வடிவங்களை உள்ளார்ந்து கற்றறிந்தார்.

ஊக்கப்படுத்திய தோழிகள்

“தேவாரம் பயின்றபோது 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள் என்பது எனக்கு கூடுதல் உற்சாகம் தந்தது. அதிலும் காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் என்னைப் பெரிதும் ஈர்த்தன. ‘நம்மைப் பேணும் அம்மை காண’ என்று பாராட்டப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இந்த 21-ம் நூற்றாண்டிலேயே அனைவர் முன்னிலையில், பக்தி இசை பாட பெண்கள் தயங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனைப் போற்றி பாடிய காரைக்கால் அம்மையார் மெய்சிலிர்க்க வைக்கிறார். அவர் செய்த அரும் பணியைப் பின்தொடர முயல்கிறேன்” என்று நெக்குருகச் சொன்னார் சுஹாஞ்சனா.

குழந்தைகளுக்கு பக்தியிசை

பக்தியிசையில் சுஹாஞ்சனா கொண்ட பேரார்வத்தைக் கண்டு வியந்து உடன் படித்த சரண்யா, கனகராணி, மஹா, தேவி உள்ளிட்ட தோழிகள் சுஹாஞ்சனாவை மேலும் ஊக்கப்படுத்தினர்.

மூன்றாண்டுகள் இசைப் படிப்பை முடித்த சுஹாஞ்சனா, தனியார் பள்ளி ஒன்றில் இசை ஆசிரியை ஆனார். தான் பயின்றதைக் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லிக் கற்பிக்கும்போது அதன் மகிமையை மேலும் உணர்ந்தார். “தேவாரம், திருவாசகம் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கும்போதே அவற்றின் புராணங்களையும் சேர்த்துச் சொல்வேன். உதாரணத்துக்கு, திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரைச் சந்தித்த தருணத்தை எடுத்துக்கொள்வோம். தன்னைவிட வயதில் இளையவரான திருஞானசம்பந்தரை அவரது இறை ஞானத்துக்கு மதிப்பளித்து திருநாவுக்கரசர் வணங்கினார். இதுபோன்ற நிகழ்வுகளை விவரிப்பதன் மூலம் நற்பண்புகளையும் நன்னெறிகளையும் நானும் கற்றுணர்ந்தேன், கற்பித்தும் வந்தேன்” என்கிறார் சுஹாஞ்சனா.

பச்சை கொடி காட்டிய புகுந்த வீடு

சென்னையில் டிசைன் இன்ஜினீயராக வேலை செய்துவரும் சுஹாஞ்சனாவின் கணவர் கோபிநாத்துக்கும் பக்தியிசைக்கும் ரொம்ப தூரம். “என்னைப் பெண் பார்க்க வந்தபோதே நான் இசை படித்தவள் என்றதும் மகிழ்ச்சியோடு, ‘உனக்கு விருப்பமானதைச் செய்’ என்று மாமனாரும் மாமியாரும் சொன்னார்கள். இசைத் துறையிலேயே பயணிக்க கணவரும் பச்சைக் கொடி காட்டினார். எனது அண்ணி நளினி, மைத்துனர் சதீஷ் என புகுந்த வீட்டில் அத்தனை பேரும் மனமுவந்து சம்மதம் தெரிவித்தனர்” என்கிறார் சுஹாஞ்சனா.

திருமணம் முடித்து சென்னையில் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை நடத்திய சுஹாஞ்சனா, தற்போது ஒரு வயது குழந்தைக்குத் தாய். ”தினந்தோறும் காலை முதல் மாலைவரை பக்தி இசை பாடிவந்த எனக்கு அதுவே அரசுப் பணியாகக் கிடைத்திருப்பது வரப்பிரசாதமே. அதைவிட முக்கியம், என்னைப் போலவே பக்தி இசை பயின்ற பல பெண்கள் மாநிலம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களும் அரசுப் பணியில் விரைவில் அமர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையைத் தமிழக அரசுக்கு முன்வைக்கிறேன்” என்று சொன்னார் சுஹாஞ்சனா.

கோயில் நுழைவுப் போராட்டத்தில் தமிழகத்துக்கு நீண்ட வரலாறு உள்ளது. அதிலும் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் நுழையும் பண்பாட்டுப் புரட்சி நெடுங்காலக் கனவு. இதில் ஆண்களின் கனவு முழுமை பெற்றுவிட்டது. அங்கயற்கண்ணியும் சுஹாஞ்சனாவும் ஓதுவாரானபோதும், தமிழகத்துப் பெண்கள் இதுவரை கருவறைக்குள் நுழையவில்லை என்பதுதான் நிதர்சனம். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் 2014-லேயே, பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் அர்ச்சகர்கள் ஆனார்கள். ஓதுவார் சுஹாஞ்சனாவின் கனவு நிறைவேறியதை அடுத்து, தமிழக அரசின் அடுத்தகட்ட சீர்திருத்த நடவடிக்கையாக பெண்களும் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் காலமும் கனியும் என்று எதிர்பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE