மதுரை மண்டலத்தில் மட்டும் வேலைக்கு காத்திருப்போர் 13.36 லட்சம் பேர்

By கே.கே.மகேஷ்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமானது சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை, நெல்லை என்று 6 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை மண்டலத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்கள் வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 2,68,362 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,78,781 பேரும், தேனியில் 1,23,309 பேரும் பதிவு செய்துள்ளனர். இதேபோல ராமநாதபுரத்தில் 1,22,867 பேரும், சிவகங்கையில் 1,24,631 பேரும், புதுக்கோட்டையில் 1,64,551 பேரும் பதிவு செய்துள்ளனர். இதுதவிர தொழிற்கல்வி முடித்தவர்களுக்கான சிறப்பு பதிவு அலுவலகத்தில் இந்த 6 மாவட்டங்களையும் சேர்ந்த 3,63,919 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். ஆக மொத்தம் மதுரை மண்டலத்தில் மட்டும் மொத்தம் 13,36,420 பேர் அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

இவர்களின் இன்றைய நிலை என்ன, நாளுக்கு நாள் அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிற சூழலில் இவர்களின் வேலைவாய்ப்புக்கு அரசு என்ன மாதிரியான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று மதுரை மண்டல வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மைய இயக்குநர் சுப்பிரமணியனிடம் கேட்டோம்.

"குறைவான கல்வித்தகுதி இருப்போருக்கு உள்ளூர் அரசு வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படுகின்றன. தற்போது பெரும்பாலான அரசு பணிகள் போட்டித் தேர்வின் மூலமே நிரப்பப்படுவதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், வங்கித் தேர்வாணையம், மருத்துவப் பணிகள் தேர்வாணையம் போன்றவற்றுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. அங்குள்ள நூலகத்தில் போட்டித் தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள் அனைத்தும் இருக்கின்றன. சமீபத்தில் பணி வாய்ப்பு பெற்றவர்களைக் கொண்டு அவ்வப்போது போட்டித்தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதுதவிர தனியார் துறை வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களையும் இணையம் வழியே வெளியிடுகிறோம். விரும்புகிறவர்கள் தங்கள் கல்வித்தகுதிக்கேற்ற வேலைகளைப் பெற இந்த இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையும் இந்தத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலையில்லாதவர்கள் தலா 200 ரூபாயும், பிளஸ் 2 முடித்தவர்கள் 400 ரூபாயும், பட்டம் படித்து வேலையில்லாதவர்கள் 600 ரூபாயும் உதவித் தொகையாகப் பெற முடியும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE