‘‘மர உரல், மர உலக்கை பூர்வீக அடையாளம்!’’

By கா.சு.வேலாயுதன்

பழங்குடி மக்கள் என்றாலே வித்தியாசமானவர்கள்தான். அதிலும் ஆதிகாலத்தில் பயன்படுத்திய பொருட்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஆதிவாசிகள் வித்தியாசத்திலும் வித்தியாசமானவர்கள் என்றே சொல்லலாம். அப்படியான ஆதி பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமம்தான் இந்த பனப்பள்ளி. இங்கே இன்னமும் மர உலக்கை, மர ராகிக்கல், மர அம்மிக்கல் எல்லாம் இருக்கிறது. அதைத்தான் தன் பூர்வீக அடையாளமாகவும் காட்டுகிறார்கள் இங்கு வசிக்கும் மக்கள்.

கோவை- ஆனைகட்டியிலிருந்து கோவை வழியில் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலமரமேடு. இங்கிருந்து இடதுபக்கம் செல்லும் குறுகலான சாலையில் 6 கிலோமீட்டர் பயணித்தால் பனப்பள்ளி மலை கிராமத்தை அடையலாம். இந்த கிராமம் மட்டுமல்ல, இதற்கு இடையில் கொண்டனூர், கொண்டனூர் புதூர் என வரும் குட்டி கிராமங்களும் குவியலான மலைகளுக்குள்ளும், சரியும் பள்ளத்தாக்குகள், குன்றுகளுக்குள்ளும்தான் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

பனப்பள்ளி கிராமம்

இருளர் பழங்குடிகள் வசிக்கும் இக்கிராமங்களுக்கு ஏழெட்டு ஆண்டுகள் முன்பு கூட சாலை வசதி கிடையாது. ஜீப்புகள் மட்டுமே குதித்துக் குதித்து செல்லும். ஆடு, மாடு மேய்த்தலும், சோளம், கம்பு, ராகி மற்றும் பயிறு வகைகள் விளைவித்தலும்தான் இங்குள்ள மக்களுக்கான பூர்வீகத் தொழில். மழையில்லா காலத்தில் காடுகளுக்குள் புகுந்து மலைத்தேன், கொம்புத்தேன் எடுப்பது, இலந்தை, மலைநெல்லி, சீமார் புல் சேகரிப்பில் ஈடுபடுவது, அதை 10 மைல் நடந்தே கொண்டு சென்று சந்தைகளில் விற்பது, அதற்கேற்ப தங்களுக்கான மளிகைப்பொருட்களை வாங்கி வருவது என்று வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

குறிப்பாக பனப்பள்ளி மக்கள் மலை குகையில் வாழ்வது போலவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் உபயோகப்படுத்திய ஆட்டுரல், ராகிக்கல், உலக்கை, உரல் போன்றவை கூட பாறைகளிலும், கடினமான மரங்களிலும் இன்னமும் இருக்கிறது.

பனப்பள்ளி பள்ளிக்கூடம்

இப்படிப்பட்ட ஊருக்கு ரொம்பவும் முயற்சி எடுத்து ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை போட்டார்கள். இந்த வழித்தடத்திலேயே செங்கல் சூளைகள், தோட்டங்கள், பண்ணை வீடுகள் உருவாகின. அதற்கான பணிகளுக்கு திசை மாற ஆரம்பித்தனர் பழங்குடி மக்கள்.

சாலை போடும் முன்பு வரை 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனைகட்டி பள்ளியில்தான் குழந்தைகள் சென்று தங்கிப் படிக்க வேண்டிய நிலை இருந்தது. பனப்பள்ளியில் ஆரம்பப் பள்ளியும், கொண்டனூர்புதூரில் (3 கிலோமீட்டர்) நடுநிலைப்பள்ளியும் உருவாக கல்வி கிடைப்பது கொஞ்சம் இலகுவானது. ஆங்காங்கே பள்ளங்களில், ஆற்றோடைகளில் பொங்கும் சுணையில் தண்ணீர் பிடித்து வந்த மக்களுக்கு தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்பட்டு, மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதை ஏழெட்டு ஆண்டுகள் முன்பே செய்த அதிகாரிகள் இன்று வரை பேருந்து வசதி மட்டும் செய்து கொடுக்கவில்லை.

விளைவு. பனப்பள்ளி ஆரம்பப் பள்ளியில் 23 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். அங்கு வரும் ஆசிரியைகள் இருவர் ஆலமரமேடு (6கிலோமீட்டர் தூரம்) வரை பேருந்தில் வந்து பிறகு ஆட்டோவில் வருகிறார்கள். இதற்காக மாதத்திற்கு ரூ.2500 வாடகை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதேபோல் பனப்பள்ளியிலிருந்து 6 முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கொண்டனூர் புதூருக்கும், ஆனைகட்டிக்கும் ஜீப்பில் செல்கிறார்கள். 8ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு வாடகை அரசே ஏற்கிறது. ஆனால் 9, 10 படிக்கும் மாணவ-மாணவிகள் ஆனைகட்டி செல்ல (10 கிலோமீட்டர்) தினசரி ரூ.20 வீதம் செலவளிக்கிறார்கள். அதுவும் ஒரு ஜீப்புக்கு 5 பசங்க சேர்ந்தால்தான் அந்த கட்டணம். இல்லா விட்டால் ஒருவர் ரூ.100 ஐ தரவேண்டும். அதுவே 5 பேருக்கு மேல் ஏறும்போது ரூ.100க்கு மேல் தலா ரூ.20 தந்தேயாக வேண்டும். இங்குள்ள மக்கள் வழியோரம் உள்ள செங்கல்சூளைகளுக்கும், தோட்டம், காடுகளுக்கும் வேலைக்கு செல்கிறார்கள். அதில் அவர்களுக்கு கிடைக்கும் கூலி ரூ.300 - ரூ.250.

வெள்ளியங்கிரி பேசுகையில், ‘ரோடு போட்ட பின்னால எங்களுக்கு என்ன வசதி நடந்துச்சோ இல்லியோ, இளந்தாரி பசங்க செங்கல் சூளைக்கு வேலைக்கு போறாங்க. போய் பாடுபட்டுட்டு காசை ஊட்டுக்கு கொண்டு வர்றாங்களான்னா கிடையாது. நேரா மாங்கரைக்கு ‘சரக்கு’ போடப் போயிடறாங்க. அதுல பொண்டாட்டி புள்ளைகதான் ரொம்ப கஷ்டப்படுது. அதை முதல்ல சரிபண்ணுங்கோ சாமி!’ என்றனர்.

பனப்பள்ளி பழங்குடிகள் சாலை வசதி ஏற்பட்ட பின்பு செங்கல்சூளை, டாஸ்மாக் கடை எனப் புறப்பட்டாலும், அவர்கள் ஊரை சுற்றி தினசரி யானைகள் சுற்றித்திரிகின்றன. ‘தினம் தவறினாலும் தவறும். பெரியவனுக வர்றது மட்டும் தவறாது. கடவுளே நாங்க உன்னை மாதிரியேதான் காட்டுல வாழறோம். நிர்கதியா கிடக்கிறோம். எங்களை ஒண்ணும் செஞ்சுடாதேன்னு கையெடுத்துக்கும்பிடுவோம். அதுவும் போயிடும்!’ என்றார்.

உலக்கை பயன்பாடு

பனப்பள்ளியில் பயன்பாட்டில் உள்ள மர உரல், மர உலக்கையில் மிளகாய் உள்ளிட்ட பொருட்களை இடித்து பொடியாக்குகிறார்கள். ‘இதுதான் எங்களுக்கான பூர்வீக அடையாளம் சாமி!’ என்றும் சொல்கிறார்கள். காலம் என்னதான் சூழல்களை மாற்றினாலும் மூதாதைகளின் பண்பாட்டு சின்னங்களை, பழக்க வழக்கங்களிலான எச்சங்களை சிலர் மாற்றுவதேயில்லை. அதில் பனப்பள்ளியும் ஒன்று.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE