நூல் மற்றும் துணி ஏற்றுமதிகளுக்கு சலுகை

By கா.சு.வேலாயுதன்

இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு பன்னாட்டு சந்தையில் போட்டியிட ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சுணக்க நிலையை அத்தொழில் சந்தித்து வந்தது. இதனால் ஜவுளி ஏற்றுமதியில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய ஜவுளி வியாபாரம் இன்று ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டதை தொடர்ந்து பஞ்சாலை உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்து வந்தனர். இதை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தனர். இப்படி ஜவுளித்தொழில் கீழே தள்ளப்பட முக்கிய காரணம் வரியில்லா ஒப்பந்தம் மட்டுமன்றி, நூல் மற்றும் துணி ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்டு வந்த ஏற்றுமதிச் சலுகைகளை திரும்ப பெற்றதேயாகும். ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தும் மறைமுக வரிகளை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே இந்திய ஜவுளிப் பொருட்கள் உலக சந்தையில் போட்டி போட்டு ஸ்திரத்தன்மையை பெற முடியும் என கோவையில் அமைந்துள்ள தென்னிந்திய பஞ்சாலை அதிபர்கள் சங்கம் (சைமா) வலியுறுத்தி வந்திருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக பருத்தி ஜவுளிகளுக்கான உள்ளீட்டு வரிகள் திரும்ப கிடைப்பதால் போட்டி ஸ்திரன் சற்றே அதிகரித்தது. இருப்பினும் செயற்கை பஞ்சு ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட வரிகளை முழுமையாக பெற முடியாத சூழ்நிலையிலும், குவிப்பு வரிகளாலும், போட்டி ஸ்திரனை இழந்து தேக்க நிலையில் இருந்தது. சமீபத்தில் செயற்கை பஞ்சுகளின் மீதான குவிப்பு வரிகளை மத்திய அரசு நீக்கி போட்டி ஸ்திரனை அதிகரிக்க செய்துள்ளது.

ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதிக்கு மத்திய, மாநில வரிகளை திருப்பிக் கொடுக்கும் வகையில் ROSL மற்றும் MEIS சலுகைகளையும், பின்னர் RoSCTL என்ற சலுகையையும் மத்திய அரசு கொடுத்து வந்தது. சமீபத்தில் இச்சலுகையை ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதிப் பொருட்களுக்கு 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து இப்பொருட்களின் உலக போட்டி ஸ்திரனை அதிகரிக்கச் செய்துள்ளது. நூல் மற்றும் துணி ஜவுளிப் பொருட்களுக்கு இத்தகைய சலுகை கிடைக்காததால், கடந்த பல ஆண்டுகளாக இவைகளின் ஏற்றுமதி குறைந்து மூலப்பொருளானா பருத்தியை ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. எனவே நூல் மற்றும் துணிகளுக்கு இச்சலுகையை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பஞ்சாலை தொழில் முனைவோர் கோரி வந்தனர். குறிப்பாக இதை சைமா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இக்கோரிக்கையை ஏற்று ஜனவரி 1, 2021 முதல் RoDTEP என்ற திட்டத்தின் மூலம் அனைத்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கும் இச்சலுகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணையில் நூல், துணி மற்றும் இதர பொருட்களின் RoDTEP சலுகைகளையும் அறிவித்துள்ளது.

இதற்காக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன் பிரதமர், மத்திய நிதி அமைச்சர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் வணிகள் மற்றும் தொழில் துறை அமைச்சர், முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அஷ்வின் சந்திரன் (சைமா தலைவர்)

இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘மத்திய அரசின் புதிய உத்திரவால் பருத்தி மற்றும் தணிகளின் ஏற்றுமதி அதிகரித்து பல லட்சம் தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும். அந்நியச்செலவாணியும் அதிகரித்து மூலப்பொருளான பருத்தி ஏற்றுமதியை மதிப்புக்கூட்டுப் பொருட்கள் ஏற்றுமதியாக மாற்ற வாய்ப்புக் கிடைத்துள்ளது. பருத்தி நூல் ஏற்றுமதிக்கு 3.8 சதவீதம் அல்லது அதிக பட்சம் கிலோ ஒன்றுக்கு ரூ. 11.40 சலுகையும், பருத்தி நூல் துணிக்கு 4.3 சதவீதம் அல்லது ஒரு சதுர மீட்டர் துணிக்கு ரூ. 3.40 சலுகையும் இந்த ஏற்றுமதி சலுகை திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது நூற்பாலைகள் மட்டுமின்றி, கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களுக்கும் ஏற்றுமதிகளை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் பின்னலாடை துணிகளுக்கான ஏற்றுமதி சலுகை ஒரு சதவீதமாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து உரிய சலுகையை வழங்க வேண்டும். அப்படி வழங்கினார். திருப்பூர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் உள்ள பின்னலாடை துணி உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி போட்டி ஸ்திரனை அதிகரிக்க உதவும். மேலும் பருத்தி நூலுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகையை விட அதிக சலுகையை, கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது போல் பின்னலாடை துணிகளுக்கு உயர்த்தி தரவேண்டும்!’ என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE