காசிக்கவுண்டன்புதூர் ஓவியக்கலைஞன்

By கா.சு.வேலாயுதன்

கோவை சூலூரிலிருந்து தெற்கே மூன்று கிலோமீட்டர் தூரம் காசிகவுண்டன்புதூர் கிராமம். இந்த ஊருக்கென இருக்கும் பிரபல்யம் நடிகர் சிவகுமார். வாலிப வயதிலேயே அழகன் முருகனாக சினிமாவில் அவதாரமெடுத்து பல நூறு திரைப்படங்களில் நடித்து மாபெரும் பிரபல்யம் அடைந்திருந்தாலும் இன்னமும், இன்னமும் என தேடும் தேடல் இருக்கிறதே. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

சென்னைக்கு எப்போது போகிறார்; கோவைக்கு எப்போது வருகிறார் என்றே புரிபடாத அளவு இங்குள்ள மண்ணுடனும் மக்களுடனும் கலக்கிறார். கொங்கு மண் மொழி கதை பேசும் கிராமத்து வாசியாக, எழுத்தாளராக, புராண இதிகாசக் காதைகளின் மேடை சொற் பொழிவாளராக இன்னும் எத்தனையோ அவதாரங்கள் அவர் கலந்து கொள்ளும் வெவ்வேறு நிகழ்வுகளிலும் பரிணமிக்கிறது. அப்படி அவர் இயல், இசை, நாடகம் என அவர் எதற்குள் நுழைந்து வெளியே வந்தாலும் அவருக்குள் கிளர்ந்தெழும் ஓவியக் கலைஞன் எப்போதுமே விழித்துக் கொண்டேயிருக்கிறான்.

கரோனா காலத்தில் மற்றவர்கள் எல்லாம் துவண்டு போயிருக்க, தன்னையும், தன் ஆற்றலையும் புதுப்பிக்கும் முகமாக தன் வாழ்வில் பின்னிப்பிணைந்த கொங்கு மண் மக்களின் அருமை பெருமைகளை, மாண்பினை எடுத்தியம்பும் வண்ணம் முழுக்க, முழுக்க கோவை மண் மொழியில் ‘கொங்குத்தேன்’ நூலை எழுதியுள்ளார். இது இந்து தமிழ்திசை வெளியீடாக வெளி வர உள்ளது. அடுத்ததாக இதே வரிசையில் தன்னைக் கவர்ந்த, தான் வாழ்ந்த ஓவியர்களின் சிறப்பியல்புகளை கோர்வைப்படுத்தி சித்திரச்சோலையை தொடராக எழுதியுள்ளார். அதற்கடுத்தும் திரைப்படச்சோலை எழுதி, அதற்குப் பிறகு திருக்குறள் 100 கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.

தன் தாயுடன் சிவகுமார்

அப்படியானவரிடம், ‘நவீன ஓவியங்கள் நம் மக்களுக்கு எளிதில் புரிபடுவதில்லையே, ஏன்!’ என்ற ஒற்றைக் கேள்விதான் கேட்டேன். ஓவியத்தின் வரலாற்றில் மூழ்கி முத்துக்குளியலே நடத்தினார்.

‘‘வெளிநாடுகளில் ஓவியத்திற்கு மறுமலர்ச்சி காலம் 16ம் நூற்றாண்டு. அதற்கு முன்னால வரைக்கும் பைபிள் குரூப் ஆர்ட்தான். 1577ல் பீட்டர்பால் ரூபர்சன் என்பவர் இயேசுநாதரின் ரெண்டு கையுலயும், கால்லயும் ஆணி அடிச்சு கிராஸ்ல் தூக்கி மேல மாட்டற ஓவியத்தை உயிரோட்டமா வரைஞ்சிருக்கார். அது அவ்வளவு தத்ரூபமா இருக்கும். என்னோட வாத்தியாரே அவர்தான். 1606ல் ரம்ரன் என்ற டச் பீட்டர் நெதர்லாந்துல வர்றான். 19 வயசில் ஸ்டுடியோ வச்சு, 21 வயசில் மாஸ்டர் ஆயிட்டான். போர்ட்ரெய்ட் பெயிண்டிங் என்பது முகத்தை வரைவது. உலகத்திலேயே முகத்தை வரைந்ததில் சிறந்தவன் ரம்ரன்தான். அதற்குப் பிறகு புகைப்படக் கருவி வர ஓவியக்கலைஞர்க எல்லாம் பயந்துட்டாங்க. எப்படீன்னா. நம்ம கொடைக்கானல் ஏரியில ஒரு போர்டு வச்சுகிட்டு மாசக்கணக்குல, ஏரி, அதுல உள்ள தண்ணி, அதுல ஓடற படகு, ஏரியில் நடக்கிற குதிரைன்னு மாசக்கணக்குல எடுத்துட்டு ஒரு ஓவியன் பாடுபட்டு வரையும்போது, ஒரு கேமரா பட்டன் தட்டின உடனே டீட்டெய்ல்ஸ் தத்ரூபமா வந்துடும்போது அத்தனை பெயிண்டிங்கும் செத்துப் போயிட்டான்.

சிவகுமார்

அப்ப இம்ப்ரசிஸம் எனப்படும் ஸ்டைல் ஓவியத்தில் நுழையுது. அது எப்படீன்னா கிட்டப் போய்ப் பார்த்தீங்கன்னா புள்ளி, புள்ளியா மட்டும் தெரியும். தூரத்துல இருந்து பார்த்தீங்கன்னா அதுல உருவம் தெரியும். இந்த இம்ப்ரசிஸம் ஸ்டைல்ல பிராடி மோனே, எட்வர்டு பேனேட், எட்வர் டெகாஸ், ஹால்கர்ட்டா 1830 முதல் 1850 வரை உலக அளவில் பேர் பெற்றவங்களா இருந்தாங்க. 1853ல் எக்ஸ்பசலிஸம் ஓவிய ஸ்டைலை வின்சென்ட் வேன்கோ கொண்டு வர்றான். அவனுக்கு படம் வரையும்போது 24 வயசு. மாடர்ன் பெயின்டிங்ல அவன்தான் உலகத்திலயே ஃபர்ஸ்ட் மேன். அப்புறம்தான் மேப்லோ பிகாஸோ 1881ல் வர்றான். 91 வருஷம் வாழ்ந்தான். அவனே பெயிண்டர், அவனே ஸ்கப்லர், அவனே பிரிண்ட் மேக்கர், ஸ்டேஜ் டிசைன் அவனே பண்ணுவான். கவிதை, டிராமா எல்லாம் எழுதுவான்

‘‘அந்த பிகாஸாவோட வழித் தோன்றல்கள்தான் இப்ப இருக்கிற நவீன ஓவியர்கள் எல்லாம் என்பதை விளக்கினவர், ‘‘இந்த பாஸ்கர், நான் எல்லாம் பிகாஸாவோட மூன்றாவது நான்காவது தலைமுறைகள். இது ஏன் நமக்கு புரியலைன்னா நம்ம நாட்டுல குறிப்பா தமிழ்நாட்டுல இடையில ஓவியக்கலை வளரவேயில்லை. எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் படிப்படியான வளர்ச்சி என்பது முக்கியம். நாம் இன்னும் கட்டை வண்டியில இருக்கோம். பஸ்ல இருக்கோம். திடீர்ன்னு ராக்கெட் விடும்போது ஒண்ணுமே புரியாது. இடையில ஓவியங்களையே ஸ்பரிஷிக்காத சராசரி மக்களுக்கு இந்த ஓவியங்களை புரிஞ்சுக்க முடியலை!’’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE