‘‘இப்ப எதுக்கு உலா வர்றான்னு தெரியலையே!’’

By கா.சு.வேலாயுதன்

"காட்டுக்குள் இப்ப வேண்டிய தண்ணியும் தீவனமும் இருக்கு. இப்படி இவன் வர்ற காலமுமில்லை . அப்புறம் எதுக்கு தினம்தோறும் வர்றான்னு தெரியலையே!". யானை ஒன்றின் அன்றாட வருகையைப் பார்த்து வேடிக்கையாக பேசிக் கொண்டிருக்கின்றனர் சர்க்கார்பதி மலை மக்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை மலைக்காடுகளில் புதைந்து கிடப்பது டாப்ஸ்லிப். இங்கே அமைந்திருப்பது இந்த சர்க்கார்பதி கிராமம். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் வரும் வனப்பகுதியான இங்கு 40 மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றன. தவிர சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையமும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பும் அமைந்துள்ளது.

அடர் வனத்திற்குள் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைந்திருப்பதால் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஊழியர்கள் இங்கே வருவதும் போவதுமாக இருக்கின்றனர். இங்கே காட்டு மிருகங்கள், குறிப்பாக சிறுத்தை, யானைகள் நடமாட்டம் அதிகம். அவை காடுகளில் தீவனமும் தண்ணீரும் இல்லாத வேனிற் காலங்களில்தான் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

தடிச்சான் பழங்கள்

ஆனால், வனாந்திரத்தில் நீரோடைகளிலும் காட்டாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இந்த மழைக்காலத்தில் கடந்த சுதந்திர தினத்தன்று மாலை 45 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று சர்க்கார்பதி மின்வாரியக்குடியிருப்பு அருகே உலா வந்தது. யாருக்கும் எந்த தொந்தரவு விளைவிக்காத அந்த யானை சில குடியிருப்பு காம்பவுண்ட் அருகே புற்கள், செடிகொடிகளை சாப்பிட்டு விட்டு சென்று விட்டது. முதலில் அது வழி தவறி வந்த யானை என்றுதான் மக்கள் நினைத்தனர்.

ஆனால், அடுத்தடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து அதே நேரத்தில் வரத்தொடங்கி விட்டது. அதுதான், ‘காட்டுக்குள் போதுமான தீவனமும் இருக்கிறது. தண்ணீரும் பெருக்கெடுத்து ஓடுகிறது.. சாப்பிட்டு விட்டு அங்கேயே இருக்க வேண்டிய அது தற்போது எதற்காக இங்கே உலா வருகிறது?’ என மக்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த அன்பழகன் கூறும்போது, ‘’காடு முழுக்க பசுமையாக இருக்கிறது. அதுவும் யானைகளுக்கு பிடித்த தடிச்சான் பழம் நிறையவே கிடைக்கிறது. அப்படியிருக்க இந்த யானை மட்டும் இங்கே எதற்காக தினம் தினம் வருதுன்னே தெரியலை. யானைக்கூட்டங்களில் எப்போதாவது ஒற்றை யானை தனியாக பிரிந்து விடுவதுண்டு. அப்படி கூட்டத்தை விட்டுப் பிரியும் யானை ஆக்ரோஷத்தோடு இருக்கும். இது அப்படி இல்லை. பரமசாதுவாக வந்து சாதுவாகவே செல்கிறது. ஒரு வேளை ஒரு யானைக்கூட்டம் இரண்டாக பிரிந்திருக்கும். பிரிந்த குழுவில் ஒன்று தனியாக சுற்றி வர காட்டுக்குள்ளேயே இடம் தேடும். அப்படி புது யானைக்குழுவுக்கு இடம் தேடி வந்த மூத்த யானையாகக்கூட இருக்கலாம். இருந்தாலும் இந்த யானையைப் பாதுகாத்துக் கண்காணிக்க வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்!’’ என்றார்.

யானைகள் கூட்டத்தோடு இருந்தாலும், தனியாக இருந்தாலும், மூர்க்கமாக இருந்தாலும், சாதுவாக இருந்தாலும் செய்தி செய்திதான். அழகு, அழகுதான். அதில் எல்லாமே அர்த்தங்கள் நிறைந்தே இருக்கிறது.

தனியாக வந்து செல்லும் ஒற்றை யானை வீடியோ காட்சி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE