எவர் கிவன் கப்பலும் நெவர் கிவ் அப் மார்வாவும்!

By காமதேனு

எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுவிடும் என்று அச்சம் ஏற்படுத்திய ‘எவர் கிவன்’ கப்பல் ஒரு வழியாக சூயஸ் கால்வாயி லிருந்து மீட்கப்பட்டு, மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது. தற்போது மீண்டும் எவர் கிவன் உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தமுறை பாதிப்பு கப்பலுக்கு அல்ல, அதைச் செலுத்தியதாக செய்திபரப்பப்பட்ட, கேப்டன் மார்வா எல்செல்டாருக்கு!

எவர் கிவன் கப்பல் சிக்கியதை நினைத்துக் கவலைப்பட்டதிலும் மீட்கப்பட்டவுடன் நிம்மதியடைந்ததிலும் மற்றவர்களைவிட மார்வாவுக்குக் கூடுதல் அக்கறை இருந்தது. காரணம், மார்வா ஒரு கப்பல் கேப்டன் மட்டுமல்ல, சூயஸ் கால்வாய் சீரமைக்கப்பட்ட பிறகு அந்த வழியே கப்பலைச் செலுத்திய முதல் கேப்டன், இளம் கேப்டன், முதல் பெண் ஆகிய பெருமைகளைப் பெற்றவர். அப்படிப்பட்ட மார்வாதான், எவர் கிவன் கப்பலை சூயஸ் கால்வாய்ப் பகுதியில் விபத்துக்குள்ளாக்கியவர் என்ற போலிச் செய்தி உலகம் முழுவதும் அவரது படங்களுடன் பரவிவிட்டதை என்னவென்று சொல்வது?

“எவர் கிவன் கப்பல் குறித்த செய்திகளை நான் அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த விபத்தை ஏற்படுத்தியதாக என் பெயரும் படங்களும் தாங்கிய செய்தி வெளிவந்ததைக் கண்டு அதிர்ந்தேன். ‘அரபு நியூஸ்’ இதழில் வந்த இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் இருந்ததால், உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவிட்டது. அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக ஊடகங்களிலும் பரப்பிவிட்டனர். செய்தி என்றால் விசாரிக்காமல் போட மாட்டார்கள். இது வேண்டுமென்றே போலியாகப் பரப்பப்பட்ட செய்தியாக இருக்க வேண்டும். பெண் அல்லது எகிப்தியன் என்ற காரணங்களால் நான் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்கிறார் மார்வா.

யார் இந்த மார்வா?

அலெக்சாண்ட்ரியாவில் உள்ள அரபு லீக் யுனிவர்சிட்டியில் கப்பல் போக்குவரத்து குறித்த படிப்பில் பட்டம் பெற்றவர். எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 2015-ல் சூயஸ் கால்வாய் விரிவுபடுத்தப்பட்ட பிறகு, அந்த வழியே கப்பலைச் செலுத்திய முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். தன்னுடைய தொழில் வாழ்க்கையில் 30 வயதுக்குள் மிக உயரிய இடத்தை அடைந்திருக்கிறார் மார்வா.

எவர் கிவன் சூயஸ் கால்வாயிலிருந்தபோது மார்வா ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால், ‘ஐடா 4’ கப்பலில் வேலை செய்துகொண்டிருந்தார். ஒரு பெண் உயர் பொறுப்பில் இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலையில் இருக்கும் யாரோ ஒருவர்தான் திட்டமிட்டு, மார்வாவை எவர் கிவன் கப்பலுடன் சேர்த்துவிட்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் கப்பல் சார்ந்த பணிகளில் 2 சதவீதம் பெண்களே வேலை செய்துவருகிறார்கள். கப்பலில் மாதக் கணக்கில் குடும்பத்தை விட்டுச் செல்ல நேர்வதால், உலகம் முழுவதுமே இந்தப் பணி செய்யும் பெண்களை அங்கீகரிப்பதில்லை.

“படிக்கும்போதும் பயிற்சியின்போதும் பெண் என்ற காரணத்துக்காகப் பல்வேறு நெருக்கடிகளையும் சங்கடங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னளவு திறமையுள்ள ஒரு ஆணுக்கு எளிதாகக் கிடைக்கும் எந்த விஷயமும் எனக்கு எளிதாகக் கிடைத்ததில்லை. என் திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்திருக்கிறேன். அப்படியிருக்கையில், இந்தப்போலிச் செய்தி என் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், என்னைப் புரிந்துகொண்டவர்கள் காட்டிய அன்பாலும் அக்கறை யாலும் நிதானத்துக்கு வந்துவிட்டேன்” என்கிறார் மார்வா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE