பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

வேலூர்

உழவர் சந்தை ஏரியாவில்...
“பாட்டி... மறக்காம நம்ம சின்னத்துல ஓட்டுப் போட்டுருங்க.”
“கண்டிப்பா ராசா! எத்தனை தடவை இதே சின்னத்துல ஓட்டுப் போட்டிருக்கேன், எனக்குத் தெரியாதா..?”
“பாட்டின்னா பாட்டிதான்!”
“பாட்டுப் பாடறதை நிறுத்து... எங்கே இன்னும் பணம் வரலை?”
“அதெல்லாம் கரெக்ட்டான நேரத்துல, கன் மாதிரி உங்க வீடு தேடி வரும்”
“அப்பிடீன்னா சரி. ஒரே ஒரு கண்டிஷன். இந்த முறை ரெண்டாயிரம் ரூபாய் நோட்டெல்லாம் வேணாம். சில்லறை மாத்தக் கஷ்டமாயிருக்கு. ஐநூறு ரூபாய் நோட்டாவே குடுத்துடுப்பா. உனக்குப் புண்ணியமா போகும்”
(பாட்டியும், ‘பார்ட்டி’ ஆளும் சேர்ந்து சிரிக்கிறார்கள்)
- பாலு இளங்கோ, வேலூர்.

சீர்காழி

சிதம்பரம் செல்லும் அரசுப் பேருந்தில்...
“இன்னும் யாரும்மா டிக்கெட் எடுக்கலே..?”
“டவுன் பஸ்ல டிராவல் பண்ற லேடீஸ் எல்லாம் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை... ஃப்ரீன்னு சொன்னாங்க. நீங்க என்னன்னா டிக்கெட் எடுக்கச் சொல்றீங்க. இது எந்த டெப்போ பஸ்? உங்க பெயர் என்ன?”
“என்னக்கா, ஆளு பேரு டீடெய்லெல்லாம் விசாரிக்கிறீங்க? ஆனா, அது தேர்தல் அறிக்கையில சொன்ன வாக்குறுதிங்கிறது மட்டும் உங்களுக்குத் தெரியலையாக்கும். அந்தக் கட்சி ஜெயிச்சி ஆட்சியை பிடிச்சதுக்கப்புறம், சி.எம் கையெழுத்து போட்டு ஜிஓ ஆர்டர் பாஸாகி வர இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. இப்போ டிக்கெட் எடுங்க… என்னோட வேலைக்கு உலை வெச்சிடாதீங்க… நான் பிள்ளைக்குட்டிக்காரன்!”
(பேருந்தில் சிரிப்பு)
- வி.வெங்கட், சீர்காழி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE