சாதனா
readers@kamadenu.in
"இந்த உலகில் புற்றுநோய் மருத்துவமனைகளே இருக்கக்கூடாது” என்ற இலக்குடன் 66 ஆண்டுகளாகப் புற்றுநோயில் இருந்து மக்களை மீட்க ஓய்வின்றி உழைத்த மருத்துவர் வி.சாந்தா இவ்வுலகில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற்றுவிட்டார்.
முந்தின நாள் பட்டம் பெற்று நேற்று பெயர்ப்பலகை மாட்டிக் கொண்ட மருத்துவர்களைக்கூட ‘அப்பாயின்ட்மென்ட்’ இல்லாமல் பார்க்க முடியாது. ஆனால், புற்றுநோய் மருத்துவச் சிகிச்சையில் தான் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பதம் விபூஷன், ரமோன் மகசேசே உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளால் கவுரவிக்கப்பட்ட சாந்தாவை சிகிச்சைக்காக யாரும் (ஏழையானாலும்) எந்த நேரத்திலும் அணுகலாம். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்தபோதும் இதை அவர் தன்னுடைய கொள்கையாகவே கடைபிடித்து வந்தார்.
‘திருமணமோ வீடோ தேவையில்லை!’
தனக்கென தனி வீடோ, தனிப்பட்ட வாழ்க்கையோ தேவை இல்லை. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையே தன் இல்லம். அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் தான் தனது சொந்தம் என்று வாழ்ந்தார் சாந்தா. திருமணமே செய்து கொள்ளாமல் மருத்துவமனையின் மாடியிலேயே ஒற்றை அறையில் வசித்தார். அந்த அறைக்குள் நோயாளிகள் உட்பட யார் பிரவேசித்தாலும் தான் சாப்பிட வைத்திருக்கும் உணவைப் பிரியமாகப் பரிமாறி மகிழ்ந்தார். வெகு ஆண்டுகள் கழித்தே அந்த ஒற்றை அறை கொஞ்சம் விரிந்து வரவேற்பறை, வாசிப்பறை, ஒரு படுக்கையறையுடன் கூடிய வீடாக மாற்றப்பட்டது. “நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் என் நோயாளிகளுடனே கழிக்க விரும்புவதால் இதற்கு மேல் எதுவும் எனக்குத் தேவை இல்லை” என்று சொன்னவர் சாந்தா.
கரோனா பெருந்தொற்று காலத்தில் புற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் போனதை எண்ணி ஆழ்ந்த கவலை கொண்டார் சாந்தா. தீவிர சிகிச்சை அவசியப்படும் கட்டத்தில் இருப்பவர்களுக்கேனும் மாற்று வழிகள் கண்டறியப்பட வேண்டும் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குக் கடிதம் எழுதினார்.
புற்றுநோய் மருத்துவப் பேராசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற இருப்பதாக தன்னுடைய முன்னாள் மாணவர் டாக்டர் பி.பி.பாப்சி சொன்னதை கேட்டு கடும்கோபம் கொண்டார் சாந்தா. “தள்ளாத வயதிலும் நான் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும்போது நீ எப்படி வேலையை தூக்கி போட்டுவிட்டுப் போவாய்?” என்று கோபம் கொப்பளிக்க தன்னுடைய மரணத்துக்கு சில நாட்களுக்கு முன்னால் கேட்டதாக டாக்டர் பி.பி.பாப்சி குறிப்பிட்டுள்ளார்.
இப்படி, 93 வயதிலும் புற்றுநோய்க்கு எதிரான தன் போர்க்குணத்தை விட்டுத்தராத மருத்துவர் சாந்தாவின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்பதறியாமல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சுவர்கூட மவுனத்தில் ஆழ்ந்திருக்கிறது.
“நான் இறந்துவிட்டால் எந்த இறுதிச் சடங்கும் செய்யத் தேவை இல்லை. என் சாம்பலை இந்த மருத்துவமனையைச் சுற்றிலும் தூவி விடுங்கள். இங்கிருந்து நான் அகல விரும்பவில்லை” என்பதை மட்டுமே தன்னுடைய கடைசி ஆசையாகச் சொல்லிச் சென்ற சாந்தாவுக்கு, பிரதமர் முதல் நாட்டின் மூலை முடுக்கில் உள்ளவர்கள்வரை இரங்கற்பா பாடி பிரியாவிடை கொடுத்திருக்கிறார்கள்.
பத்தாண்டு போராட்டம்!
இயற்பியல் துறையில் இதுவரை இந்தியா பெற்றது இரண்டு நோபல் பரிசுகள். பரிசு பெற்ற இருவருமே மருத்துவர் சாந்தாவின் உறவினர்கள் என்றால் நம்ப முடிகிறதா! சென்னை மயிலாப்பூரில் 1927-ல் சாந்தா பிறந்தார். இவரது தாத்தாவின் சகோதரர் தான் விஞ்ஞானி சர்.சி.வி. ராமன். இவரது தாய்மாமாவோ நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் சுப்பிரமணியம் சந்திரசேகர். இயற்பியல் மேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த சாந்தாவும் இயற்பியல் துறையில் மிளிர்வார் என்றே அவருடைய குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சாந்தாவுக்கோ மருத்துவத்தில் மனம் ஊன்றியது. அன்றைய தேதியில் இந்தியாவில் புற்றுநோய் மருத்துவம் யாரும் அவ்வளவாக அறியாத துறை. அவ்வளவு ஏன்... இந்திய மருத்துவ கழகமே அங்கீகரிக்காத துறையாக இருந்தது.சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் எம்.பி.பி.எஸ்.
பட்டம் பெற்ற சாந்தா, 1952-ல் டி.ஜி.ஓ., 1955-ல் மகப்பேறு மருத்துவத்தில் முதுநிலை படித்து முடித்தார். பட்டம் பெற்ற கையோடு, நாட்டின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மகன் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி 1954-ல் தொடங்கிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவராக பணியில் சேர்ந்தார். அப்போது இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், 12 படுக்கைகள் மட்டுமே கொண்ட மிகச்சிறிய மருத்துவ மையம் அது. இன்று 400 படுக்கைகள் கொண்ட மருத்துவ விருட்சமாக உருவெடுத்திருக்கிறது. அதிலும் 300 படுக்கைகள் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததும் நொறுங்கிப்போவது நோயாளியின் மனமே. அப்படி மனமுடைந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை மட்டுமல்லாது வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் மீண்டெழுந்து வரும் திண்ணமும் ஊட்ட தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவெடுத்தார் சாந்தா. அதனாலேயே யுவதியாக இருக்கும்போதே தனக்கு திருமணமோ தனி வீடோ ஒருபோதும் வேண்டாம் என்று உறுதியேற்றார். தென்னிந்தியாவின் முதல் மற்றும் நாட்டின் இரண்டாவது புற்றுநோய் மருத்துவமனையை இந்திய மருத்துவ கழகம் அங்கீகரிக்கக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் போராடினார்.
முதல் குழந்தைப் புற்றுநோய் மருத்துவர்
நோய்க்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டும் நில்லாமல் புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு பெற்றுத் தந்தவர் சாந்தா. புற்றுநோய் தொற்று வியாதி அல்ல என்பதை நிரூபித்து பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையைப் புற்றுநோயாளிகள் பயன்படுத்தவும் அனுமதி பெற்றுத் தந்தார். மக்கள்தொகை வாரியாக புற்றுநோய் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு திட்டம் நிறைவேற்றப்பட கிரியாவூக்கியாக செயல்பட்டார் சாந்தா. எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளைப் புற்றுநோய் தாக்குவதை கண்டறிந்து அதற்கு பிரத்தியேக சிகிச்சை முறையைக் கண்டறியப் பெரிதும் பாடுபட்டார். குழந்தைப் புற்றுநோய் மருத்துவ சிறப்புப் பிரிவை நாட்டிலேயே முதன்முறையாக 1960-ல் அடையாறு மருத்துவமனையிலேயே நிறுவினார். இந்தியாவின் முதல் குழந்தைப் புற்றுநோய் மருத்துவ நிபுணரும் இவரே.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் 2005-ல் இடம்பெற்றார். இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பல்வேறு கமிட்டிகளில் உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார் சாந்தா. இவை தவிர, பல தேச, சர்வதேச ஆய்விதழ்களில் இவர் எழுதிய 95 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகி இருக்கின்றன. புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி குறித்த புத்தகங்களில் இவருடைய கருத்துகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இத்தனை வேலைப் பளுவுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான மேடைகளில் புற்றுநோய் மருத்துவம் குறித்து உரைகள் நிகழ்த்தி இருக்கிறார் சாந்தா.
சுருக்கமாகச் சொல்வதானால், மனிதநேயமும் அறிவியல் கூர்மையும் மருத்து மேதமையும் நிறைந்த தேவதையாகத் திகழ்ந்தார் சாந்தா. அப்படிப்பட்டவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தபோது, “கதிரியக்கத்துக்கும் புற்றுநோய்க்கும் எந்த தொடர்புமில்லை” என்று அரசு அதிகாரத்துக்கு சார்பாக வாதிட்டது அவர் சரித்திரத்தில் நீங்காத கரும்புள்ளியாகிப் போனது.
அடையாறு என்றதும் புற்றுநோய் மருத்துவமனையும் அதில் ஆர்ப்பாட்டமின்றி அர்ப்பணிப்புடன் இயங்கிக் கொண்டிருந்த மருத்துவர் சாந்தாவும்தான் அனைவருக்கும் உடனடியாக ஞாபகத்துக்கு வரும். இனியும் அப்படித்தான்!