ஈர்க்கும் துயரத்துக்கு இன்னொரு பெயர்

By காமதேனு

கணேசகுமாரன்
readers@kamadenu.in

கவியாசிரியர் இத்தொகுப்பை சமர்ப்பித்திருக்கும் வரிகளிலேயே புதிதாய் ஒரு அனுபவத்தை எதிர்பார்க்க வைத்துவிடுகிறார். எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் நிறைவேற்றியிருக்கிறார் எனலாம். எந்தவொரு கவிதையும் வாசகருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளில் வெல்கிறது இத்தொகுப்பு. பெரும்பாலும், துயர் சொல்லும் பதிவுகள் என்றாலும் அத்துயரத்தின் மீது நிரப்பப்பட்டிருக்கும் வாசனையும் வண்ணமும் நம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்வதை மறுக்க முடியாது. சாலை ஓவியத்தின் மீது பெய்யும் மழை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், அம்மழை மீது தன் காதலை வெளிப்படுத்துவதிலிருந்து கவியாசிரியரின் மென்மை உரையாடலைத் தொடங்கலாம்.

மொத்தக் கவிதைகளிலும் வரும் ஒன்றிரண்டு வரிகளே ஒட்டுமொத்த அனுபவத்தைச் சொல்லிச் செல்கின்றன. //அம்மா நட்டுவைத்த செம்பருத்தி இப்போதெல்லாம் அளவாய்த்தான் பூக்கிறதாம்// என்ற ஆரம்ப வரிகளே பின்வரும் இல்லாமையை தனிமையை ஏக்கத்தை அறிவித்துவிடுகின்றன. //பாதிகளால் நிரம்புகிறது கறுப்பு வெள்ளை வாழ்க்கை// என்று முடியும் வரியும் அடர்த்தி கூடி மனதில் கனம் ஏற்றுகிறது. ‘சரளைக் கற்கள் விளையும் வயல்’ கவிதையில் வரும் அனைத்து வண்ணங்களும் அழிக்கமுடியா துயர் ஓவியம் ஒன்றை மனதில் தீட்டிச் செல்கின்றன. அநேகக் கவிதைகளில் இந்த வண்ண விருப்பங்கள் தொடர்ந்து வருகின்றன. //ஆப்பிள் வடிவ பலூனுக்கு சிவப்பு வண்ணம் அடிக்கும் வானம்// ஒரு உதாரணம்.

‘பியானோ என்பதொரு நீண்ட சவப்பெட்டி’ என்ற தலைப்பிலான கவிதை குறித்துப் பேசுவதை விட, வாசித்து அனுபவிப்பது சிறப்பு. நூலறுந்து இறங்கும் பட்டத்துடன் தன் தற்கொலையை ஒப்பிடும் ஒருத்தியின் மனநிலையை கவிதையில் விவரிக்கும் சுபா செந்தில்குமார், கவிதைக் கணங்களை வெளிப்படுத்த மெனக்கிடாமல் அதன் போக்கிலேயே சென்று கவனிக்க வைக்கிறார். மரண வீட்டில் குரைத்துக்கொண்டிருக்கும் நாய்க்குட்டி, கடற்கரையில் கால் நனைத்து அலையோடு பேசும் பைத்தியக்காரன், ஆஸ்பத்திரி ஒன்றில் சைக்கிள் டோக்கன் போடும் பெரியவர் என்று கவிஞரின் பார்வையில் தென்படும் துயரங்களெல்லாம் தன்னந்தனிமையில் தன்னை ஒப்புவித்துவிட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE