கும்பகோணத்தில் காயத்துடன் சுற்றிய மானை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே காயத்துடன் சுற்றித்திரிந்த மானை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

கும்பகோணம் வட்டம், செட்டி மண்டபம் ஒத்தைத் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், பலத்த காயத்துடன் பெண் மான் ஒன்று திரிந்து கொண்டிருந்தது. இதையறிந்த, கண்ணன், மற்ற விலங்குகளால், அதற்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என அந்த மானைக் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு, கும்பகோணம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வனவர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, மானை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்குத் தூக்கிச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சுமார் 6 வயதுடைய அந்தப் பெண் மான், வழி தவறி ஊருக்குள் வந்ததில் வயல் வெளிகளில் தடுப்புகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு வேலியில் சிக்கியதால் அதன் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் சரியானதும் அந்த மான் மகாராஜபுரம், கொள்ளிடம் ஆற்றுக்கரையில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE