லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
அன்று காலை எப்போதும் போல் விடிந்தாலும், அது மற்றவர்களுக்கு மட்டும்தான். ராகுலுக்கு இல்லை. காரணம், அன்று மாலை அவனது அருமை நண்பன் கார்ல் அவன் வீட்டுக்கு வரப்போகிறான். அது அங்கே ஒன்றும் புதிதான ஒரு பழக்கம் இல்லை. மாதத்தில் ஒரு நாள் ராகுல், கார்ல் வீட்டுக்கும், அதே போல் கார்ல் அவன் வீட்டுக்கும் வருவது இரண்டு வருடங்களாக நடக்கிறது.
“ராகுல்…உன் அறையைச் சுத்தப்படுத்து. கார்ல் வந்தால் விளையாட இடம் வேண்டும்” - மகனின் மனதுக்குப் பிடித்தமான ஒரு காரணத்தைச் சொல்லி அம்மா வேலை வாங்கினாள்.
அவளுக்கும் அந்த நாள் பிடித்தமானதாகத்தான் இருந்தது. காரணம் ஜெர்மனியில் அவளுக்கு நண்பர்கள் கிடையாது. சென்னையில் காலையிலிருந்து வேலைக்காரி தொடங்கி பக்கத்து வீடு, எதிர் வீடு...இவை முடிந்த பின் தொலைபேசியில் யாரேனும் ஒருவர் என்று அரட்டை அடித்தே பழக்கப்பட்டவள். ஜெர்மனிக்கு வந்ததிலிருந்து அவ்வப்போது பெய்யும் மழையும், பனித்தூறல்களும், ஈரக் காற்றும், குளிரும் மட்டுமே துணை. பக்கத்தில் உள்ள உயரமான ஜெர்மன் பெண்கள், அவள் ‘குடன் மார்க்கன்’ என்று நன்னாள் வாழ்த்துக் கூறும்போது, கீழ் கண்ணால் பார்த்தவாறு புன்முறுவல்கூட இன்றி தலையசைத்துப் போவார்கள். இவை எல்லாம் அந்நிய தேசத்தில் இருக்கும் உணர்வை அடிக்கடி நினைவுபடுத்த, கார்லின் அம்மாதான் ஒரு சுலபமான மாற்றாக அமைந்தாள். தட்டுத்தடுமாற்றத்துடன் அவள் பேசும் ஜெர்மன் கலந்த ஆங்கிலம் புரியத்தொடங்க... இருவரும் தோழிகளாகினர். நட்பு எதிர்பார்ப்புகளை அதிகரிக்க, இருவரும் பரஸ்பரம் வீடுகளுக்கு வந்து சென்றனர். ராகுலின் அம்மா அந்த நாட்களுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
சிந்தனையின் ஊடே, ராகுல் என்ன செய்கிறான் என்பதை ஒருமுறை நோட்டம் விட்டாள். அவனும் அவன் தந்தையைப் போலத்தான். எடுத்த வேலையை முழுவதுமாக முடிக்காமல் விட்டுவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடுவான். பாதி விளையாட்டுச் சாமான்கள் உள்ளேயும் மற்றவை வெளியேயும் சிதறிக்கிடந்தன. அவளுக்கு எரிச்சல் அதிகமாக வந்தது.
“ராகுல், நீ மிகவும் போக்கிரிப் பையனாகிவிட்டாய். உன் வேலையைக்கூட சரியாகச் செய்வதில்லை” என்றபடி விளையாட்டுப் பொருட்களை உள்ளே எடுத்துவைக்கத் தொடங்கினாள். சமையல் அறையில் இருந்து லேசான மணம். கேக் முழுவதும் வெந்து வெளியே எடுக்க வேண்டிய தருணத்தை வாசம் உணர்த்த, அவசரமாக ராகுலைக் கடிந்துகொண்டபடி அந்த வேலையைக் கவனிக்கச் சென்றாள்.