நிழற்சாலை

By காமதேனு

குயில்பொழுது

தென்னை மரங்களுக்கிடையே நிலவு
புன்னகைத்தது.
தென்றல் மெல்லத் தொட்டு
கிச்சு கிச்சு மூட்டியது.
வான் வெளி இருள் பூசி
கறுப்பு வைரமாய் ஜ்வலித்தது.
தூரத்து மலைகளில் ஆங்காங்கு
செம்மஞ்சள் பூக்கள் பூத்திருந்தன.
சுருக் சுருக்கென்று இருதயம்
வலியால் துள்ளியது.
அருகில் யாருமற்ற அவன்
நீண்ட பயணத்திற்காக
காத்திருக்க...
ஏதோ பறவையின்
இனிய குரல்
அவனின் உடலை
பூவாய் உருமாற்றுகிறது.
- வசந்ததீபன்

இருளில் கரையும் வெளிச்சம்

இருள் சூழ்ந்த பொழுதில்
நான்காவது தளத்திலிருந்த
ஒரு வெளிச்சத்தை
மின்தூக்கி இறக்கிவிடுகிறது
தரைத்தளத்திற்கு
சிக்னலைக் கடந்துவிட்ட அது
தன் பாதையை
தொலைத்துவிட்டுத் தேடுகிறது 
இருப்பிடத்தை
ஒவ்வொரு வீதியாய்
தேடித்திரும்பும் வெளிச்சம்
கட்டிடங்களைப் போல் குப்பைகளின் வீச்சத்தையும் நினைவிலிருத்தியிருக்கிறது
ஒருவழியாய் கண்டுபிடித்து
மீண்டும் நான்காம் தளம் தொட்டபோது
கூண்டுக் கிளிகளும் காதல் பறவைகளும் படபடத்து சப்தமிடுகின்றன
திறந்துவிடச் சொல்லி
இப்போது அந்த வெளிச்சம்
முழுமையாக கரைந்திருந்தது
இருளில்.
- ஸ்ரீகா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE