நிழற்சாலை

By காமதேனு

தரிசு பூமியின் அகவல்

கொழுப்பைக் குறைப்பதற்காக
விடுமுறையில் வந்த நான்
வயக்காட்டுப் பக்கம்
அதிகாலைகளில்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் உடனே பசுமையை
உங்கள் கற்பனையில்
ஓட்டிப்பார்க்கிறீர்கள். தெரிகிறது.
வயல்களெல்லாம் வெடித்து
என்றோ தரிசாகிக் கிடந்தது.
மீத்தேனுக்காகத் தோண்டப்படும்போது
அது விவசாயிகளின்
சவக்குழியாகியிருக்கும்.
சுற்றித்திரிந்த…
சுற்றியிருந்த காடுகளும்
குதித்து கும்மாளமிட்ட
குடமுருட்டி ஆறும்
தொலைந்திருந்தன…
தொலைக்கப்பட்டிருந்தன.
காலைக் காற்றுகூட
கனலாய் அப்புகிறது.
அகவும் ஓசைகள்
கேட்ட திசையில் திரும்புகிறேன்.
பெண் மயிலொன்றும்
அதனைப் பின்தொடரும் குஞ்சுகளும்.
மயில் குஞ்சுகள்
மயிலைப் போலவே இல்லை.
நாட்டுப் பெட்டைக்கோழிகள் போலிருந்தன.
தரிசு பூமியில் உணவைத் தேடியே
அலைகின்றன ஏமாற்றத்துடன்.
- வலங்கைமான் நூர்தீன்

வெள்ளைக்கொடிகள் நிறமிழப்பதில்லை

தொடர்ந்து வம்பிழுக்கும்
வல்லூறுகளுடனான
போர்த் தேதி
பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது
சில பூக்குட்டிகள் தவிர
வேறு சேனை இல்லை என்னிடம்.
இரவு நேரக் கதைகளினூடே
வல்லூறுகளும் நல்லவைதாம்
இச்சமூகத்தின்
வல் ஊறுகள்தான் அவற்றை
அவ்வாறாக்கி வைத்துள்ளன
என்று சொல்லி வைத்திருந்தேன்.
போர் மூண்டது.
கோபவெறி
வல்லூறுகளின் முன் நின்ற
என் பூக்குட்டிகளுக்கு
பொய்க்கோபம் கூடக்
காட்டத்தெரியவில்லை.
எதிர்நின்ற அவற்றை ஆரத்தழுவி
‘நீங்க நல்லவங்கதானே..
நீங்க நல்லவங்கதானே' என்று
கிச்சு கிச்சு மூட்டின
கும்மாளம் போட்டன.
தாங்க முடியவில்லை
வல்லூறுகளால்
எவ்வளவு நேரம்தான்
கெட்டவராகவே நடிப்பது?
பூக்குட்டிகளை அணைத்துத்
தம் கண்ணீர்
துடைத்துக்கொண்டன
கைதட்டிச் சிரித்தன
வானமும் பூமியும்
கூடவே நானும்!
- நர்மதா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE