வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
“என்ன பாச்சா... குடமுழுக்கெல்லாம் பார்த்துட்டு குதூகலமா வந்திருக்க... ஏன் என்னைக் கூட்டிட்டுப் போகலை?” என்று பாச்சாவிடம் சலித்துக்கொண்டது பறக்கும் பைக். “நீ வேற... முதல் நாளுதான் கண்காணிப்புக்காக ட்ரோன் பயன்படுத்தினாங்களாம். குடமுழுக்கு அன்னிக்கு ட்ரோன்களையே பார்க்க முடியலை. உன்கூட பறந்து போயிருந்தா பார்க்கிங் பிரச்சினை வந்திருக்கும்ல” என்று சமாளித்தான் பாச்சா. “இருய்யா... நானே என்னை டைம் மெஷினா மாத்திக்கிட்டு ராஜராஜன் காலத்துக்கே போய் தஞ்சாவூர் கோயிலை போட்டோ எடுத்துட்டு வர்றேன்” என்று சவால் விட்ட பைக்கைச் சமாதானப்படுத்தினான் பாச்சா.
அன்றைய பணி தொடங்கியது.
முதலில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சேனல்களுக்குப் பேட்டி கொடுத்துவிட்டு வந்திருந்த அமைச்சர் சினம் குறையாமல் அமர்ந்திருந்தார்.
“காவியில் சிறந்தவர் ரவீந்திரநாத் குமாரா, ராஜேந்திர பாலாஜியான்னு பட்டிதொட்டியெல்லாம் பட்டிமன்றம் நடக்கிற அளவுக்கு பாஜகவுக்கு சாமரம் வீசுறீங்களே... கரோனா வைரஸ் கண்டவர் கணக்கா உங்களைக் கண்டதும் அமைச்சர்களே கொத்துக் கொத்தா தெறிச்சு ஓடுறாங்களாமே?” என்று வந்த வேகத்தில் வம்பை ஏவினான் பாச்சா.