நாகர்கோவில்
வடசேரி பஸ் நிலையம் அருகே நடுத்தர வயது நபர்கள் இருவர்...
“பையனை இங்கிலீஷ் மீடியம் படிக்க வெச்சது ரெம்ப தப்பா போச்சு...”
“என்ன ஆச்சு?”
“பக்கத்து மளிகைக் கடையில் தேங்காய் எண்ணெய் வாங்கிட்டு வரச்சொன்னேன். கடையில் இங்கிலீஷ்ல கேட்டிருப்பான் போல... கடைக்காரர் அதெல்லாம் விற்கிறதில்லைனு சொல்லி அனுப்பிட்டார்... இவனும் வந்திட்டான்... இப்ப எதுக்கும் நானே போக வேண்டியதா இருக்கு!”
“இது பரவால்ல...என் புள்ள இருக்கானே... அன்னிக்கு ‘மார்த்தாண்டம்' போயிட்டு வரச் சொன்னேன்... பஸ் வந்ததும், தமிழ்ல போட்டிருக்க பெயரை எழுத்துக் கூட்டி படிக்கிறதுக்குள்ள பஸ் போயிடுச்சுனா பாரேன்”
- பனங்கொட்டான் விளை,
மகேஷ் அப்பாசுவாமி
மதுரை
டவுன் ஹால் ரோடு பரோட்டா கடையில் நண்பர்கள்...
“காடை சாப்ஸ் ஆர்டர் பண்ணட்டுமாடா?”
“சும்மா இருடா... ஏற்கெனவே
சீனாவுல பாம்புக்கறி சாப்பிட்டுதான்
கருணா வைரஸ் வந்திருக்காம். காடைய தின்னு எதுனா ஆகிடாம!”
“அதுக்கு பேரு கரோனா வைரஸ்டா. பொது அறிவு இல்லாத உனக்கு எல்லாம் யாரு பொண்ணு கொடுப்பா?”
“ம்ம்... உனக்கு வாய்ச்சது மாதிரி எனக்கும் ஒரு மாமனார் மாட்டாமலா போயிடுவாரு...’’
- மதுரை, எம். விக்னேஷ்