வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
அன்றும் வழக்கம்போல புலம்பல்களுடனேயே புலர்ந்தது பாச்சாவின் காலைப் பொழுது. “என்னப்பா இது… தமிழ்நாட்டுல சகல திசையிலயும் ஒரே சர்ச்சையா இருக்கே?” என்றபடி எழுந்த பாச்சாவை அன்றைய கடமையை ஆற்ற கடைத்தேற்றத் தொடங்கியது பறக்கும் பைக். “யய்யா… சர்ச்சையைப் பற்றிய செய்தின்னாலும் அதைப் பார்த்துதான் ஆகணும். செய்தி தொடர்பான சர்ச்சைன்னாலும் அதைக் கேட்டுதான் ஆகணும்” என்று ‘விசு’வாசத்துடன் பைக் பேசத் தொடங்கியதும், வியர்த்துப்போன பாச்சா அதே வேகத்துடன் விறுவிறுவென தயாரானான்.
பட்டியலில் முதலில் இருந்தவர் முதல்வர் பழனிசாமி.
புத்தகக் காட்சியில் பலரும் வாங்கிப் பரிசளித்த புத்தகங்கள் அலமாரியில் அடுக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டே ஆனந்தக் கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தார்.
“புத்தகம் பேருகூட ஞாபகம் வச்சுக்க முடியாத அளவுக்கு அவ்வளவு வாசிக்கிறீங்க இல்லையா… அதான் உங்களுக்கு புதுசு புதுசா புத்தகங்களை அனுப்பிக்கிட்டு இருக்காங்க போல… அப்படித்தானே சார்?” என்று தொடங்கினான் பாச்சா.
“என்னை நம்பி முதல்வர் பதவி தந்த சசிகலாவுக்கு எவ்ளோ விசுவாசமோ இருக்கேனோ… அதே அளவு விசுவாசத்தை இந்தப் புத்தகங்களை அன்பளிப்பா தந்தவங்க மேல காட்டுவேன். புத்தகங்கள் மேல ஒரு விரல்கூட படாம பத்திரமா பார்த்துக்குவேன்…” என்ற பழனிசாமியிடம், “அப்போ புத்தகம் வாங்கித் தந்தவங்க திரும்ப வந்து கேட்டா… கொடுத்துடுவீங்களா?” என்று கேட்டான் பாச்சா. அவன் வார்த்தைகளில் வண்டி வண்டியாக வம்பு இருப்பதைக் கவனித்த முதல்வர், சட்டென அமைதியானார்.
“இப்பல்லாம் நிறைய படம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க போல… புதுப் படங்கள் எதுவும் சரியில்லைன்னு புளூ சட்டை மாறனுக்குப் போட்டியா விமர்சனமெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க…” என்றதும் பழைய சிரிப்பு பற்றிக்கொள்ள உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் முதல்வர்.