ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in
ஓவியர்களில் சிலரை மட்டும் மாஸ்டர்கள் என்று உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்தகைய மாஸ்டர்களில் ஒருவர்தான் நெதர்லாந்தைச் சேர்ந்த 15-ம் நூற்றாண்டு ஓவியர் ஹெரோனிமஸ் பாஷ். இவர் வரைந்த மிக முக்கிய ஓவியம் The Garden of Earthly Delights. இந்த ஓவியம் உலக இயக்கத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் தனக்குள் அடக்கியது என்பதுதான் இதன் சிறப்பு. இதன் வடிவமைப்பும் கூட வித்தியாசமானது.
ஓக் மர அட்டையில் மூன்று மடிப்புகளாக வரையப்பட்டது இந்த ஓவியம். மடித்த நிலையில் உலக உருண்டையாகத் தெரியும். அதைப் பிரித்தால் உள்ளே ஒரு பக்கத்தில் ஆதி உலகம் வரையப்பட்டிருக்கிறது. ஆதாமும் ஏவாளும் படைக்கப்படும் காட்சி வரையப்பட்டிருக்கிறது. அடுத்த பக்கத்தில் உலகம் பெருக்கமடைந்து ஆசை, இன்பம், வெற்றி, கொண்டாட்டம் என மனிதர்கள் வாழ்க்கையை எல்லாவிதத்திலும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு அடுத்த பக்கத்தில் வாழ்க்கையின் அத்தனை துன்பங்களும் இருளும் சூழ்ந்திருக்கின்றன.மக்கள் செய்த தவறுகளுக்காக அவர்கள் படும் துன்பமும் கஷ்டமும் அதில் வரையப்பட்டிருக்கும்.
அழகாகத் தொடங்கிய உலகம் எப்படி இந்த அழிவுக்கு வந்து சேர்ந்தது என்பதுதான் ஓவியம் முன்வைக்கும் கருத்தாக்கம். ஒவ்வொரு அங்குலமும் கூர்ந்து கவனிக்கத்தக்கதாக இருப்பது ஓவியத்தின் தனித்துவமாகும். அவை ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்பவையாக இருக்கின்றன. இந்த ஓவியத்தை பகுப்பாய்வு செய்து பலர் இதன் அர்த்தங்களை விளக்க முயன்றிருக்கிறார்கள். அவை பல ஆயிரம் பக்கங்களுக்கு இருப்பதும் கவனிக்கத்தக்கது.