நிழற்சாலை

By காமதேனு

அழகின் சாயல்கள்

அந்தப் பூவிலும்
அதின் மீதான பனித் துளியிலும்
அதில் தெரியுமந்தப்
பேரழகு வானவில் துண்டிலும்
அதன் மீது வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
உணரியில் ஒட்டியிருக்கும்
தேன் துளியிலும்
தேனில் குழைத்த
அந்தப் பெருங்கசப்பு மருந்திலும்
அட… இன்னும்
எங்கெல்லாம் இருக்கும்
உன் சாயல்.
- பாரதி பத்மாவதி

மார்கழி சிறுகுறிப்புகள்

மார்கழியென்றால்
வாசல் நிறைக்கும் வண்ணக்கோலம்
தெருவெங்கும் ஒலிக்கும்
திருப்பாவை
தினமொரு பூசனை
சுடச் சுடப் பொங்கல்
புளியோதரைப் பிரசாதங்கள்
ஆண்டாள் வழிபாடுகளால்
அடையாளப்படுத்தப்படும்
இம்மார்கழி…
என் பால்யத்தின் பசுமையை
தொலைத்த கதையை
நினைவூட்ட மறப்பதில்லை.
அதிகாலையில் எழுதலின்
நன்மைகளறியாத நாட்களில்
வைக்கோலை வட்டமாக உதறி
பிணையலில் மாடுகளை ஓட்டுவதும்
அவை சாணமிடுகையில்
அள்ளித் தூரயெறிவதும்
சூடான வைக்கோல் கதகதப்பில்
குளிரை விரட்டியடிக்க
வரக்காப்பி குடித்ததையும் அறிவாரோ
நெல் வாசனையறியாத
நகரத்து நஞ்சுண்டான்கள்!
- பெருமாள் ஆச்சி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE