எல்லோருக்குள்ளும் ஒரு ராக்கெட் தாதா

By காமதேனு

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

பானை சோற்றுக்கு பருக்கை சாதம் பதம் என்பதுபோல் தொகுப்பின் ஒட்டுமொத்தக் கதைகளுக்கு நல்வரவு கூறுகிறது தொகுப்பின் முதல் கதையான   `படுகை.’ மூன்று போலீஸார் ஒரு குற்றவாளியைக் கைது செய்யப்போகும் முன் ஏற்பாடுகளில் தொடங்குகிறது கதை. கைது செய்வதோடு கதை முடிகிறது. அதற்குள்ளான காட்சிகளை விவரித்திருந்த விதத்தில் அட்டகாசம் செய்திருக்கிறார் கதையாசிரியர். ஏதோ நேரில் ஒரு சம்பவத்தைக் கைக்கொள்ளப்போகும் வர்ணிப்பில் பிரமாத எழுத்து நடையில் மிளிர்கிறது கதை. முடிந்தபின்தான் கதையே தொடங்குகிறது என்பதெல்லாம் அல்டிமேட்.

`லட்டு’ கதை ஆச்சரியமூட்டும் ஒன்று. சிறந்த கதைசொல்லியாக மிளிரும் கார்ல் மார்க்ஸ் இதில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து எழுத்தாளராக வரும் அவரின் பார்வையில்  நிகழும் அனைத்து துரோகத்தினையும் சாதாரண பார்வையாளனின் பார்வையிலேயே விவரித்துக் கொண்டு சென்ற அழகு பிரமாதம். இரண்டு பகீர் அனுபவங்களுக்குப் பிறகு வருகிறது     `சுமித்ரா’ கதை. சட்டென்று கிராமத்து மனிதர்களின் வாஞ்சை உலகத்துக்குத் தாவிச் செல்லும் கதை. மளிகைக் கடை முதலாளியாக இருந்து கல்யாணத் தரகராக மாறிப்போகும் கோவிந்தனும் அவனது நான்கு மகள்களுக்குமான வாழ்வியலில் எத்தனை முக்கியக் குறிப்புகளை வைத்திருக்கிறார் ஆசிரியர். வயதுக்கு வரும் பருவத்தில் இருக்கும் மகளைப் பற்றிய குறிப்பில் ‘அப்பளமும் ரசமும்தான் முக்கால்வாசி நேரம் என்றாலும் ரத்தத்தில் நிலைத்திருக்கும் பழைய வாழ்வின் மிச்சம் முகத்தில் வழிந்த வண்ணம் இருக்கிறது என்று நினைத்தாள்’ என்ற அம்மாவின் யோசனையை எழுத்தாளரால் எப்படி நகல் எடுக்க முடிந்ததோ தெரியவில்லை. இன்னொரு இடத்தில் மகளுக்கு தகப்பன் எடுத்து வந்த பொருந்தா ஆடையைப் பார்த்து     `ஏதாவது பொருத்தம் இருக்கா இந்த பாவாடைக்கும் சட்டைக்கும் என்று ராசத்துக்குத் தோன்றினாலும் அவளுக்கு நல்லாதான் இருக்கும் என்ற சமாதானத்தையும் அவளால் உடனே அடைந்துவிட முடிந்தது’ என்பதில் இருக்கும் ஏழ்மையின் மன ஓட்டத்தை மிகச் சரியாகக் கணிக்கும் வித்தை வாய்த்திருக்கிறது கார்ல் மார்க்ஸுக்கு. மூத்தவள் சுமித்ராவின் கதைதானென்றாலும் கதையின் கடைசி பத்திகளைப் பதற்றம் இல்லாமல் கடக்க முடியவில்லை. 

`சித்திரங்கள்’ கதையின் மொத்த பலமும் அதன் கடைசி வரி. வாசகருக்குள் திடுக்கிடலை உண்டாக்கும் அவ்வரி போலவே எழுத்தாளர் பல இடங்களில் தன்னை அசால்ட்டாக நிரூபிக்கிறார். தொகுப்பின் தலைப்புக் கதையான  `ராக்கெட் தாதா’ வாசித்து முடிக்கும்போது வாசகனுக்குள் எழும் சின்னதான விம்மல் கார்ல் மார்க்ஸின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. இவ்வளவுக்கும் அதொன்றும் துயரம் பிழியும் சோகக் கதையில்லை. ஆனாலும் தாவூத், தன்னை ராக்கெட் தாதாவாக முழுமையாக ஒப்புக்கொள்ளும் அந்தக் கணம் மிகப் பலமான வலி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்லோரும் ஒருவிதத்தில் இங்கே ராக்கெட் தாதாக்களே என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு க்ரைம் கதையாய் தொடங்கும்  `சுமை’ கதை விசாரணையிலே முழுக்கதையும் வெளிப்படுத்தும் உத்தி முடிக்காமல் ஆனால் முடிந்திருக்கும் கதையாய் வியப்பேற்படுத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE