ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com
மூணு தபா சரி பார்த்தும் டாலி ஆகல. அலுவலகக் கணக்கோட போராடிக்கிட்டிருந்தேன். அப்ப பாத்து இன்டர்காமில் பாஸ் அழைச்சாரு. அப்படியே போட்டுட்டு எழுந்து ஓடினேன். “எதுவும் அவசர வேலை இருக்கா?”ன்னு கேட்டாரு. அவரு இப்படிக் கேட்டால் அதை நம்பி ஆரம்பிச்சுரக்கூடாதுன்னு எனக்குத் தெரியும். ஒண்ணுமில்லங்கிற மாதிரியும் ஏதோ இருக்குங்கிற மாதிரியும் மையமா கோவை சரளா கணக்கா தலையாட்டினேன்.
“கார்ப்பரேட் ஆபீஸ்லருந்து 20 பேர் வராங்க... அவங்கள ராமேஸ்வரம் கூட்டிட்டுப் போய்ட்டு வரணும். அதுக்குத்தான் உன்ன கூப்பிட்டேன்”ன்னாரு. எனக்கு பக்குன்னு ஆகிப் போச்சு. “சார்... இன்னும் மன்த்லி அக்கவுன்ட் டாலி ஆவல”ன்னு சொன்னேன். நான் சொன்னதையே காதுல வாங்காம, “சொன்ன வேலையச் செய்”ன்னு சொல்லி வெளிய அனுப்பிட்டாரு. வேற வழி... வீட்ல வந்து விஷயத்தச் சொன்னா, “நானும் வரலாமா?”ன்னாங்க. “இது ஆபீஸ் மேட்டர்”னு சொன்னதும் விட்டுட்டாங்க.
கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொல்லி எனக்குத் தகவல். மூணு நாள் ட்ரெஸ்ஸோட போனேன். ரெண்டு டீலக்ஸ் வேன் நின்னுச்சு. ஆபீஸர்ஸ் மட்டும்தான் வந்துருக்காங்கன்னு பார்த்தா... அவங்க சம்சாரங்களும் வந்துருந்தாங்க. லேடீஸ்லாம் ஒரு வேன்ல... ஜென்ட்ஸ் ஒரு வேன்னு பிரிச்சவங்க, என்னைய லேடீஸ் வேன்ல ஏத்தி விட்டாங்க. “நீதான் பொறுமையா பேசுவ...”ன்னு வியாக்யானம் வேற. இவங்களை மேய்க்கிறதுக்குன்னு எங்க ஆபீஸ்லருந்து நாலு பேர் வந்திருந்தாலும் முக்கால்வாசி வேலைய என் தலைல கட்டிட்டாங்க சாமர்த்தியமா. கொஞ்சம் லேட்டாத்தான் இது எனக்கே புரிஞ்சுது.