உத்ரா
uthraperumal@gmail.com
சின்னப் புள்ளையா இருக்கையில எங்க வீட்டுல ஒரு நாய் இருந்துச்சு. பெத்த புள்ளைங்ககூட சொன்ன பேச்ச கேக்காதுங்க... ஆனா அந்த ஜீவன், என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும். எல்லாருக்கும் தட்டுல சோறுபோட்டு வெச்சிருப்போம். பக்கத்துலயே படுத்திருந்தாலும் தட்டுல வாய் வைக்காது. அதுக்குன்னு இருக்குற தட்டுல சோத்தப் போட்டு வெச்சாத்தான் சாப்பிடும். அவ்வளவு அறிவான நாய் எதிர்பாராத விதமா செத்துப் போயிருச்சு. பாடிய எங்கவீட்டு கொல்லையில தான் பொதைச்சோம். அது சாமியா இருக்குன்னு இப்ப வரைக்கும் அம்மா சொல்லிட்டு இருக்காங்க.
சரி, இப்ப உள்ள கதைக்கு வர்றேன். என்னையப் போலவே என்னோட பொண்ணும் நாய் பைத்தியம். நாய் மட்டுமில்ல... சகல ஜீவராசிகளையும் வளர்க்கணும்னு ஆசைப்படுவா. வாங்கித் தராட்டி அழுது அடம்பிடிப்பா. அப்டியே... அவங்க அப்பனாட்டம்!
புள்ள கேட்டாளேனுட்டு நானும் ஒரு நாய்க்குட்டிய வாங்கியாந்து குடுத்தேன். நாய் வளக்குறது இருக்கே... அது பெரிய பாரத போராட்டம் மாதிரித்தான். ராத்திரி முழுக்கத் தூங்க வுடாது; கத்திக்கிட்டே இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரன் முறைப்பான்... சத்தம் போடுவான்... “நாய சத்தம்போடமா வளக்க மாட்டீங்களா”ன்னு அட்வைஸ் குடுப்பான். எதவெச்சாலும் குடிக்கும்... ஆனா, மிச்சம் வெச்சுட்டுப் போயிடும். கண்ட இடத்துலயும் கக்கா, சுச்சா போயி வைக்கும். வெளிய எங்காச்சும் போயிட்டு வரட்டும்னு அவுத்துவிட்டா, அடுத்த வீட்டு வாசல்ல போயி அசிங்கம் பண்ணிட்டு வரும். சண்டை வராம இருக்கணும்னா அவங்க வீட்டு வாசலயும் நாமளே கூட்டிப் பெருக்க வேண்டி இருக்கும்.
நம்ம கஷ்டமெல்லாம் புள்ளைங்களுக்குத் தெரியாது. நாளுக்கொரு தட்டுல நாய்க்கு சோத்தப் போட்டு வைப்பா. “உன்னால பெரிய எழவாப் போச்சு... எல்லாத் தட்டுலயும் நாய்க்கு சோறு வெச்சா நோய் பரவாதா?”ன்னு அவ அம்மா கத்துவா. அத காதுலயே வாங்கிக்க மாட்டா. சரி, நாய் சப்டுற தட்டு தனியா இருக்கட்டுமேன்னு ஒரு சில்வர் தட்டுல அடையாளத்துக்கு ஓட்டையப் போட்டு வெச்சேன்.
ஒரு நாளு மதியம் கொலபசியில வந்தேன். சோத்தப் போடச் சொல்லி நாலு வாய் அள்ளிப் போட்டுட்டுப் பார்த்தா, எனக்கு தொட்டுக்காய் வெச்சிருந்த தட்டுல ஓட்டை. கொஞ்சம் சேஞ்சா இருக்கட்டும்னு நாய்க்கு வெச்ச தட்டுல எனக்கு வெச்சிருப்பாங்க போல.