கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
அதிர்ச்சி தரும் திருப்பங்கள் இல்லை. எதிர்பாரா முடிவு இல்லை. வியந்தோதும் வார்த்தைப் பிரயோகங்கள் இல்லை. ஆனாலும் தொகுப்பின் ஒவ்வொரு கதையும் சராசரி மனிதர்களின் சாமானியப் பக்கங்களைப் பேசுகிறது. மிகைப்படுத்தல் இல்லாத எளிமையான எழுத்தில் கவர்கின்றன பத்துக் கதைகளும்.
தொகுப்பில் ‘பரமேஸ்வரியின் குடிசை’ என்ற முதல் கதையில் தொடங்கும் ஆச்சரியம் கடைசிக் கதையான ‘கள்ளிவட்டம்’ வரையிலும் குறையாமல் நீடிக்கிறது. பள்ளி வயதில் புரியும் பல சாகசங்களில் ஒன்றுதான் ‘பரமேஸ்வரியின் குடிசை’. பரமேஸ்வரியின் கவலைகளை ‘ கள்ளு குடிச்சிம் எப்படிடா ஆயிரம் மார்க்குக்கு மேல எடுத்தீங்க?’ என்ற துயர் மறைத்த அவளின் கொண்டாட்ட கேள்வியில் மறந்துபோகிறோம். சம்சாரி வாழ்வுதனை வெளிச்சம் போட்டுக் காட்டும் ‘மாரியம்மா’ கதையோ ஏழைக்கு மிஞ்சி இருப்பது தன்மானம் ஒன்றுதான் என்பதைச் சத்தமின்றி சொல்லிச் செல்கிறது. வாசகரின் வழமையான எதிர்பார்ப்பை தகர்க்கிறது ‘ஐந்தறிவு’ கதை. நாய்க்குட்டியின் மீதான அன்பில் தொடங்கும் கதை தொடங்கிய வேகத்தில் நாய்க்குட்டியின் மரணத்தில் நின்று பின் அதற்கான இறுதிச் சடங்கு முகூர்த்தத்தில் நிகழும் பிள்ளைப் பிராயத்து ஞாபகங்களில் தங்குகிறது.
‘எச்சில் காயாத முத்தங்கள்’ கதை பால்ய காலத்து பிஞ்சுக் காதலை அழகாய்ப் பேசுகிறது. தன் வீட்டில் மட்டுமே இருக்கும் டிவியைப் பார்க்க முத்துநாயகியிடம் லஞ்சமாய் முத்தம் கேட்கும் பாபு, கதை இறுதியில் குற்ற உணர்வு கொள்ளும் இடம் வலிந்து திணிக்காமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘பிட்டு படம்’ கதை கிராமம், நகரம் என்று எல்லா இடத்திலும் அனைவராலும் வாழ்ந்திருக்கும் நாஸ்டால்ஜியா நினைவுதான். ஆனால் ஒரு பிட்டு படம் பாக்கி இல்லாமல் பார்த்துவைக்கும் கவுன்சிலர் மணி மீதான பச்சாதாபம் வாசகருக்கு ஏற்படும்படி எழுதியிருப்பது எழுத்தாளரின் திறமை. ‘ரங்கநாயகியின் கனவில் தங்கமலை’ கதை மட்டும் இன்னும் கொஞ்சம் சீர்படுத்தியிருக்கலாம். யேசுதாஸ் பாடல்களின் வழியே பழைய காதலைக் கூறிப்போகும் கதையும் சிறப்பு. நாயகன் கதாபாத்திரம் மரணிப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. எந்தத் தவறும் செய்யாமல் இறந்துபோகும் ஏழ்மைக் கதாபாத்திரங்கள் சில கதைகளில் இடம் பெறுகின்றன.