சீரியஸ் சிரிப்பு

By காமதேனு

கசவாளி காவியம் - நாவல்
ஆசிரியர் - பிரபு தர்மராஜ்
வெளியீடு - கலக்கல் ட்ரீம்ஸ்
தொடர்புக்கு: கலக்கல் ட்ரீம்ஸ்,
சென்னை.
போன் - 9840967484
விலை: ரூ.250

ஒரே வருடத்தில் தனது மூன்றாவது புத்தகத்துடன் வந்திருக்கிறார் பிரபு தர்மராஜ். தீக்கொளுத்தி ஆவரான் என்ற தனது முதல் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் நகைச்சுவைக்கான உத்தரவாதத்துடன் தன்னை வெளிப்படுத்திய ஆசிரியர் இதிலும் அதே பாணியையே பின்பற்றியிருக்கிறார். இளம் வயதிலேயே முற்றிய தோற்றம் கொண்ட முருகசூசை என்ற மனிதனின் கல்லூரிக்கால டைரிக் குறிப்புகள்தான் பெரும்பாலான கதை. தன்னிலை விளக்கத்தில் சொல்லப்படும் இந்நாவலில் எங்குமே ஆசிரியர் தனது சுய சரிதை என வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் கதாபாத்திரம் தன்னை எழுத்தாளனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் சில இடங்களில் குட்டு உடைந்துபோகிறது. ஆசிரியரின் அல்லது நாவலின் பெரும் பலமே நாகர்கோவில் வட்டார வழக்கு மொழிதான். சுவாரசியம் குன்றிய கதையையும் விரும்பித் தொடர வைப்பது எத்தனை முறை வாசித்தாலும் புத்தம் புதிதாய் எள்ளலை அள்ளித் தெளிக்கும் மொழி என்றால் வியப்பில்லை.

கல்லூரிக் காலத்தில் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றிய ஆசிரியரின் விளக்கமே சுவாரசியம் கூட்டுகிறது. எத்தனை விதமான மனிதர்கள். அத்தனை பேரையும் குறும்பும் கொண்டாட்டமுமாக அறிமுகப்படுத்தி சிரிக்க வைக்கிறார். ‘எட்டாம் கிளாஸ் டெஸ்க் போல ஏகப்பட்ட கிறுக்கல்களோடு இருந்த பிரின்சிபாலின் முகம்’ என்ற வரி தரும் படிமம் விவரணையோடு ஆச்சரியத்தையும் தந்துபோகிறது. பாரமுல்லா மாமா, ஞாபகமறதி புரொபசர், சென்டிமீட்டர் வேக வாத்தியார், ஒல்லிப்பையன் என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் நிஜமாக வந்து போகிறார்கள். பலான படங்கள் ஓடிய ராஜன் தியேட்டர் இருந்த இடம் இப்போது ஜெபக்கூடமாகி எழுப்புதல் கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது என்பதெல்லாம் அக்மார்க் பிரபு தர்மராஜ் முத்திரை. அதுபோல் டீசி வாங்கும் முன் சூசை செய்யும் அலும்பல்கள், மைத்துனன் திருமணத்தில் போன் ஸ்பீக்கரில் விழும் குரல் காட்சி, யேசப்பா எனக்கு மாமா முறைதான என நக்கலடிக்கும் இடத்தையும் குறிப்பிடலாம்.

முதல் 60 பக்கம் மிகச் சாதாரணமான அன்றாட டைரிக் குறிப்புகள் போலவே தென்பட்டாலும் அதன் பின்னான எதைச் சொன்னாலும் பலித்துவிடும் கருநாக்கு சூசை சுவாரசியப்படுத்துகிறார். நாகர்கோவில் தமிழே ஏகப்பட்ட வித்தை காட்டிக்கொண்டிருக்க அங்கங்கே மலையாளம்,ஆங்கிலம் எனக் கதை குதூகலிக்க வைக்கிறது. நாவல் முழுவதும் வரும் மனிதர்களின் சிரிப்புச் சத்தத்தை ஆசிரியர் வகைப்படுத்தியிருக்கும் விதத்திற்கு சபாஷ். அதேபோல் ஓர் இடத்தில் வ்ஓஆ மேடம் என்றால் சரி மேடம் என்று அர்த்தம் என்கிறார் ஆசிரியர். வ்ஓஆ எனச் சேர்த்து சொல்லிப் பார்க்கையில்தான் அதன் அட்டகாசமான பகடியே தெரிய வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE