பட்சி தந்த பரிசு
எப்போதும் போலவே
ஜன்னலில் அமர்ந்த
அந்தப் பறவைக்கு
அனிச்சையாகவே
அறுசுவை தந்தன
என் கைகள்.
உண்டு களித்த பின்னர்
சும்மா செல்லவில்லை
அப்பறவை.
புழக்கடையில்
புதிது புதிதாய்
வித்திட்டுச் சென்றிருக்கிறது
தாவர வரங்களை.
மஞ்சள் நிறத் துணிப்பையில்
காய்களையும் பழங்களையும்
நன்றியோடு
நிரப்பிக்கொண்டிருக்கிறேன்
இப்போது நான்.
- கனகா பாலன்
ஆகாயம் உடுத்திய சிவப்புத் துணி
ஆதாம் தின்று போட்ட
பழத்தைச் சுவைக்கிறேன்
சுவை கூடிக்கொண்டே இருக்கிறது
நினைவுகளைப்
பொறுக்கித் திரும்பும்போது
தேன் தளும்ப
பூக்களிலிருந்து கையசைக்கிறாய்
உன்னிலிருந்து வாசத்தை எடுத்து
கனவுகளை அடுக்கி
உணர்வுகள் நிரப்பிய மாளிகைக்கு
கண்களைப் பொத்தி
அழைத்துச் செல்கிறேன்
அப்போது
புது ராகம் கேட்கிறது
விழிகளைத் திறந்த நீ
கைகளை உதறி
சிறையெனச் சொல்லி
வெளியேறுகிறாய்
நொறுங்கிய மாளிகை
ரத்தத்தைப் பூசிக்கொள்கிறது.
- விஜயபாரதி