ஏட்டைக் கெடுக்காத எழுத்து

By காமதேனு

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

நுட்பமான சில விஷயங்கள் எழுத்துபூர்வமான பதிவுகளிலோ தகுந்த ஆதாரங்களிலோ தம்மை நிலை நிறுத்திக்கொள்ளாமல் மக்களின் வாய்மொழி வாய்ப்பாடாகவே வாழ்ந்து முடியும் துயரம் உண்டு. கட்டுரையாளர் இரத்தின. புகழேந்தி அதுபோன்ற தரவுகளை சம்பவங்களைத் தேடிப்பிடித்து இந்நூலில் பதிவு செய்துள்ளார். புத்தக ஆரம்பத்திலேயே பொதுவெளியில் அதிகம் அறிந்திராத சாதிப்பிள்ளை என்றொரு மக்களைப் பற்றிய ஆச்சரியத் தகவல்களில் துவங்குகிறார். அம்மக்களின் ஆரம்ப வரலாறு, உண்ணும் முறை, தொழில், வாழ்விடம் என்பதெல்லாம் விலாவாரியாக விளக்கப்படுகிறது. தமிழும் தெலுங்கும் பேசும் அம்மக்கள் குறித்த  பதிவில் சாதி எவ்வாறு இடம் பெறுகிறது என்பதும் நுட்பமாக விளக்கப்பட்டிருக்கிறது. 

தனித்தனி தலைப்புகளில் கட்டுரைகள் சொல்லப்பட்டிருந்தாலும் சுவாரசியம் நிரம்பி வழிகிறது பறை இசை குறித்த பரிமாணக் கட்டுரையில். தப்பு எனப்படும் பறை உருவாக்கப்படும் விதத்திலிருந்து அதன் ஒவ்வொரு அடிக்கும் இருக்கும் அர்த்தத்தினை ஆதாரபூர்வமாக விறுவிறுப்பாகச் சொல்லிச் செல்கிறார் கட்டுரையாளர். கட்டுரை இறுதியில் வரும் தப்பு அடிப்பதைப் பற்றிய அந்த மக்களின் கருத்துகள் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டியவை. கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்டவர்களின் கருத்துகள் பதிவிடப்பட்டிருக்கின்றன. ‘‘ சாவுக்கு மட்டும்தான் அழைக்கிறார்கள். திருமணம் போன்ற விஷேசங்களுக்கு ஒதுக்கிவிடுகிறார்கள். ஊரில் வாழ்வதற்காக அவர்களுடன் உடன்படுகிறேன்’’ என்ற ஒருவரின் எண்ணத்தை இன்னொருவரும் பிரதிபலித்தாலும் வேறு சிலரோ ‘‘ நாங்கள் அதற்குத்தான் பிறந்தோம். அதனுடன்தான் இறப்போம், எனக்கு இது ஒரு கலை. விரும்பித்தான் தப்படிக்கிறேன்’’ என்பதையும் கவனிக்க வேண்டும். அதே சமயம் ‘‘ இதைக் கலை என்று நினைத்தால் வேறு சாதியினரும் தப்படிக்க வேண்டியதுதானே’’ என்று கேட்கும் குரலையும் மனதில் நிறுத்த வேண்டியிருக்கிறது.

இன்னொரு சுவாரசிய கட்டுரை நாட்டுப்புறப்பெண்கள் வழிபடும் செவ்வாய் பிள்ளையார் என்ற சடங்கு முறை பற்றிய குறிப்புகள். புனைவுக் கதையும் மக்களின் நம்பிக்கையுமாய் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் வெவ்வேறு இன மக்களுக்கான உணவுப் பழக்க வழக்கத்தின் விவரணைகளும் ஆராய்ந்து தரப்பட்டிருக்கிறது. வன்னியர் மற்றும் பறையர் இனத்துக்கான வழிபாட்டு முறைகளின் ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்வு செய்திருப்பதும் நன்று.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE