மதுராந்தகம்: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு நாளான இன்று, அவர் முதல்வராக பதவியேற்ற தேதிகளை குறிக்கும் எண்களை கொண்ட ரூபாய் நோட்டுகளை சமூக வலைத்தளத்தில் பழமத்தூரை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் வெளியீட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பழமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் பாலச்சந்தர்(20). திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்கால நாணய சேகரிப்பாளராக உள்ளார்.
இதில், பழங்காலத்து நாணயங்களை ஏராளமாக சேகரித்து வைத்துள்ளார். அதேபோல், ரூபாய் நோட்டுகள் மற்றும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளின் ரூபாய் நோட்டுகளையும் சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், திமுகவின் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தேதிகளை குறிக்கும் எண்களை கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகளில் காணப்படுவதை சேகரிக்க தொடங்கினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை சேகரிக்க தொடங்கியுள்ளார். இதில், 2023 ம் ஆண்டு தொடங்கிய கலைஞர் நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் ஜூன் 3, 2024 வரையிலான ரூபாய் நோட்டுகளை சேகரித்துள்ளார்.
இவ்வாறு சேகரித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நாளான இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதள பயனாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.